தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்! | supreme court Interim ban the medical counselling in tamilnadu

வெளியிடப்பட்ட நேரம்: 14:55 (17/08/2017)

கடைசி தொடர்பு:15:35 (17/08/2017)

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கிய நிலையில் விரைவில் தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.

supreme court


இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. அப்போது, சிபிஎஸ்இ மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நளினி சிதம்பரம், ''நீட் தேர்வில் 88 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் 33 ஆயிரம் மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். தற்போது இந்த அவசரச் சட்டம் மூலம் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்'' என்று தெரிவித்தார்.

அதன் பிறகு, ஆஜரான மத்திய- மாநில அரசின் வழக்கறிஞர்கள், நீட் தேர்வு விவகாரத்தில் நீதிமன்றத்தால் தடை விதிக்க முடியாது என்று கூறினர். இருதரப்பு வாதத்தைக் கேட்ட உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கில் ஆஜரான இந்திய மெடிக்கல் கவுன்சில், தமிழகத்துக்கு மட்டும் ஓராண்டு விலக்கு அளிக்கும் இந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதன் பின்னர், உச்ச நீதிமன்றம், 'இந்த நீட் தேர்வு அவசரச் சட்டத்தால் பாதிக்கப்படும் மாணவர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? தமிழக அரசும் மத்திய அரசம் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை இப்போது  கொண்டு வருவது காலதாமதமான செயல். மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசுகள் விளையாடக் கூடாது. அதே போன்று, நீட் ஆதரவு மாணவர்கள் கூடுதல் தகவல்களை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும்' எனவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 22-க்கு ஒத்தி வைத்துள்ளது.