வெளியிடப்பட்ட நேரம்: 18:43 (17/08/2017)

கடைசி தொடர்பு:14:40 (18/08/2017)

இன்னொரு பேராபத்தில் தனுஷ்கோடி... இந்த முறை தப்பிக்குமா? #SaveDhanushkodi

“இதுவரையில் தமிழகம் சந்தித்த மிகப்பெரிய இயற்கைப் பேரழிவு எது” என்று கேட்டால் 2004ல் வந்த சுனாமியைத்தான் அதிகமானோர் சொல்வார்கள். கொஞ்சம் வயதான ஆள்களைக் கேட்டால் 1964 புயலைச் சொல்வார்கள். தமிழகத்தின் தெற்குக் கரையோரங்கள், டிசம்பர் மாதம் 1964ல் அடித்தப் புயலில் ஆட்டம் கண்டுபோனது. அதிலும் குறிப்பாக தனுஷ்கோடி நகரமும் அதன் சுற்றுப்புறக் கடற்கரையும் பெருங்கோவ  யலுக்கு இரையாகின.

நாட்டின் தென்கிழக்குக் கோடியில் உள்ள அரிச்சல் முனை, பூலோகத்து சொர்க்கமாகவே காட்சியளிக்கும். அரிச்சல் முனை இந்து மதத்தினரின் புனித தலமும்கூட. இங்கிருந்து 26 கி.மீ தொலைவில் இலங்கையின் தலைமன்னாரை (முதல் தீவு) அடைந்துவிடலாம். 

தென்னகத்து துறைமுக நகரங்களில் புயலுக்கு முந்தையத் தனுஷ்கோடிக்கு தனி இடமுண்டு. வணிக ரீதியில் முக்கிய நகரமான தனுஷ்கோடி 1964 புயலுக்கு முன்பு ஐந்நூறு குடும்பங்களுக்கு மேல் வசித்தக் குடியிருப்புப் பகுதியாகவும் இருந்தது.

பழைய ரயில் நிலையம், சிதைந்துப் போன தேவாலயம், பள்ளிக்கூடம், வீடுகள் என நகரின் பாதிக்குமேல் கடல் விழுங்கி விட, எஞ்சியிருக்கும் 'கட்டடக் கூடுகள்' உடன் தொலைந்த நகரமாகவே இன்று காட்சியளிக்கிறது தனுஷ்கோடி.

பயணிகளின் படையெடுப்பு:

53 ஆண்டாக ராமேஸ்வரம் தீவில் கைவிடப்பட்ட நிலப்பகுதியாகவே தனுஷ்கோடியும் அரிச்சல் முனைப் பகுதியும் இருந்தன. முகுந்தராயர் சமுத்திரம் வரை மட்டுமே சாலை வசதி இருந்த நிலையில், கடந்த ஜூலை 27 முதல் மிச்சமிருக்கும் நிலப்பரப்பும் தார் சாலை மூலம் இணைக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகள் வசதியுடன் பழைய தனுஷ்கோடி நகரும் அரிச்சல் முனையும் சுற்றுலாத் தலமாக தற்போது உருப்பெற்றிருக்கிறது.

இன்றளவும் மின்சாரச் சேவையின்றி வாழ்ந்து வரும் அப்பகுதி மக்களுக்கு, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனப்பெருக்கமானது ஆச்சர்யத்தையும் அதிகளவு அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. பிரதான மீன் பிடித் தொழிலைத் தவிர்த்து, அப்பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் சிற்றுண்டி கடைகள், தேநீர் கடைகள் திறந்திருக்கிறார்கள். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
“இங்க எப்பவும் இல்லாத அளவுக்கு கூட்டம் வருது.. 20 பேர் இருக்குற இடத்துல 2000 பேர் வராங்க. குப்பைய எவ்வளவுதான் அள்ளுறது? ஒரே பிளாஸ்டிக் தான்", என்று வருத்தம் தெரிவித்தனர்.

பூமிப்பந்தின் ஒவ்வோரு அங்குலமும் தன் தடம் பதிக்க சபதமெடுத்து விட்ட பிளாஸ்டிக்கிடம் இருந்து தனுஷ்கோடி மட்டும் தப்பவா முடியும்?

ஆசியாவின் முக்கியக் கடல்வாழ் உயிரினக் கோளம்(Marine-Biosphere) என்னும் பகுதியாக பாக் ஜலசந்தியை சூழலியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ராமேஸ்வரம் கடல்பகுதியைத் தவிர, அச்சூழலில் வேறெங்கும் ஜனப்பெருக்கம் நிறைந்திருக்காது.
இப்போது, தனஷ்கோடியும் அதன் கடற்கரையும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப பெரிய அளவிலான சூழலியல் பிரச்னைகளை சந்திக்கத் தொடங்கிவிட்டது. திடீரென கூடிவரும் மக்கள் பெருக்கம், வாகனங்கள், பிளாஸ்டிக், குடிநீர்த் தேவை எல்லாம் பாக் ஜலசந்தியின் சிறியதொருக் கடற்கரைக்கு நிச்சயம் தகாத விஷயங்களே.

சுற்றுலாப் பயணிகளின் வருகை, வாகனப் பெருக்கம், நவீன அங்காடிகள் என முரண்பட்ட மாற்றத்தினால் தன்னியல்பைத் தக்கவைத்துக் கொள்ளத் தவிக்கிறது தனுஷ்கோடி.

தனுஷ்கோடியின் நிலவமைப்பு இயற்கை அழகியலின் உச்சம். தனுஷ்கோடியைப் பலர் பார்வையிட வர முக்கிய காரணம் அதன் நிலவமைப்பே தவிர, விடுமுறைகளில் குதுகலிப்பதற்காக அல்ல. அங்கு வருபவர்களுக்கு சூழலியல் சார்ந்த பிரக்ஞை அவசியம்.
'தொலைந்த நகரம்' என்றழைக்கப்படுவது வரலாற்றில் தொலைந்த நகரமாகி விடக்கூடாது.


டிரெண்டிங் @ விகடன்