வெளியிடப்பட்ட நேரம்: 18:32 (17/08/2017)

கடைசி தொடர்பு:18:32 (17/08/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: மாஃபா பாண்டியராஜன் சொல்வது இதுதான்!

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் ஏகப்பட்ட அணிகள் பிரிந்தன. இதில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய அணிகள் இணைய நீண்ட நாள்களாகவே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வந்தது. அணிகள் இணைவதற்காக பன்னீர்செல்வம் அணி இரண்டு நிபந்தனைகளை விதித்தது. அதன்படி, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்த வேண்டும். அதேபோல ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று  நிபந்தனை விதித்திருந்தனர்.

மாஃபா பாண்டியராஜன்


சசிகலா மற்றும் தினகரன் தொடர்பாக கடந்த வாரம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார் பழனிசாமி. இதனால், இரு அணிகள் இணைவதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இதனால், விரைவில் இரு அணிகள் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியின் எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், "முதல்வரின் அறிவிப்புகளை வரவேற்கிறேன். இது தர்மயுத்தத்துக்கு கிடைத்த வெற்றி. இரு அணிகள் இணைவது தொடர்பாக வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நேரம் இது" என்று கூறியுள்ளார்.