வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (17/08/2017)

கடைசி தொடர்பு:20:20 (17/08/2017)

கோவில்பட்டி அருகே யானை தூக்கி வீசியதில் ஒருவர் காயம்!

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் யானை தூக்கி வீசியதில் காயமடைந்த துரைப்பாண்டி என்பவர் கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

elephant

கேரளாவைச் சேர்ந்த பாகன் ஒருவர் யானையுடன் கடந்த ஒருவாரமாக கழுகுமலைப் பகுதியில் தங்கி உள்ளார். கோயில் வாசலிலும் ஊருக்குள் வீடுவீடாக யானையை அழைத்துச் சென்று ஆசிர்வாதம் செய்ய வைத்தும் குழந்தைகளை யானை மீது அமர வைத்தும் அவர்கள் தரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு மர நிழலில் யானையைக் கட்டிப்போட்டுக்கொண்டு இருந்துள்ளார். 

கடந்த 2 நாள்களாக கழுகுமலை, அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலுள்ள தச்சுப்பட்டறைக்குப் பின்புறமுள்ள புளியமர நிழலில் யானையைக் கட்டிப்போட்டு குளிப்பாட்டியும் தென்னை ஓலைகளைப் போட்டும் பராமரித்தும் வந்துள்ளார் யானைப் பாகன். கடந்த 2 நாளும் அந்தத் தச்சுப்பட்டறையின் உரிமையாளர் துரைப்பாண்டி யானைக்கு வாழைப்பழங்களை உண்பதற்காகக் கொடுத்து வந்துள்ளார். அங்குசம் எனப்படும் யானைப்பாகன் கையில் வைத்திருக்கும் நீளமான மூங்கில் போன்ற குச்சியைத் துரைப்பாண்டி கையில் எடுத்துப் பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த யானை, அருகில் நின்றுகொண்டிருந்த துரைப்பாண்டியைத் தூக்கி வீசியது. இதில் அவரின் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

elephant

இது குறித்து தச்சுப்பட்டறை அருகிலுள்ளவர்களிடம் பேசினோம், ‘‘ரெண்டு நாளா பட்டறைக்குப் பின்னால உள்ள புளியமரத்துலதான் யானையைக் கட்டிப்போட்டிருந்தார் பாகன். எந்தப் பிரச்னையும் இல்லாம சந்தோசமாத்தான் இருந்துச்சு யானை. பாகன் கையில எப்பவுமே வச்சிருக்குற ’அங்குசக் குச்சியைத் துரைப்பாண்டி எடுத்ததும், யானை அதிக சத்தம் எழுப்பி அவரைத் துதிக்கையால் தூக்கி 10 அடி தூரத்துல வீசிடுச்சு. அந்தக் குச்சியை வச்சுதான் பாகன், யானையிடம் ஏதோ சத்தியம் வாங்குவான்னு சொல்லுவாங்க. எதிரே உள்ள மரத்துல தூக்கி வீசுனதுனால ஒரு கை முறிஞ்சு தொங்கிடுச்சு. கீழே போட்டு மிதிக்க யானை கால் ஓங்கியதும் பாகன் அதைத் தடுத்துவிட்டார்.  உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். யானையும் உச்சகட்ட கோபத்தில் இருந்தது. அருகில் பள்ளிக்கூடம், கடைகள், வீடுகள் இருப்பதால் யானைக்கு மதம் பிடித்து மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், பாகனை யானையுடன் உடனே கிளம்பச் சொல்லிவிட்டோம்’’ என்றார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க