'அ.தி.மு.க இருப்பது இதற்காகத்தான்' - சீண்டும் சீமான்

 தவிக்காக இருக்கும் கட்சி அ.தி.மு.க. இதனால் தினகரன் என்ன முடிவு எடுத்தாலும் பயன் இல்லை என ராமநாதபுரத்தில் சீமான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


 2008-ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோர் ராமநாதபுரம்  நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''அ.தி.மு.க-வின் பிளவுக்கும், அதன் சின்னம் முடக்கப்பட்டதற்கும் காரணம் பி.ஜே.பிதான் என்பது உலகுக்கே தெரியும். தமிழகத்தின் தேவைகள் குறித்து பேச ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்காத பிரதமர் மோடி சாதாரண சட்டமன்ற உறுப்பினரான பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கி சந்திக்கிறார். மணிக்கணக்கில் அவரிடம் பேசுகிறார். இதில் இருந்தே அ.தி.மு.க-வின் பின்னணியில் பி.ஜே.பி இங்கு அதிகாரத்தைச் செலுத்தி வருவதைத் தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைபற்ற நினைக்கும் பி.ஜே.பி-யின் எண்ணம் ஈடேறாது. 

ராமநாதபுரத்தில் சீமான் பேட்டி

 தமிழத்தின் வாழ்வாதார பிரச்னைகளின்போது துணைக்கு வராத பி.ஜே.பி. ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கவும் ஓட்டுக்காகவும் வருவதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மத்தியில் வலுவான அதிகாரம் இருப்பதால் அதன் மூலம் காலூன்றிவிட துடிக்கிறார்கள். இங்கிருக்கும் தமிழிசையையும் வானதி சீனிவாசனையும் பொன்.ராதாகிருஷ்ணனையும் ஒதுக்கிவிட்டு நிர்மலா சீத்தாராமனை தமிழக பி.ஜே.பி-யின் முகமாகக் காட்ட முயற்சி செய்கிறார்கள். அதனால்தான் சம்பந்தமே இல்லாத துறை அமைச்சரான அவர் நீட் தேர்வு குறித்து பேசுகிறார். இது ஏமாற்று வேலை. பழனிசாமியைப் பதவி விலக சொல்லும் கமலஹாசன் ஊழல் செய்து தண்டனை பெற்ற ஜெயலலிதாவையோ கருணாநிதியையோ பதவி விலக ஏன் சொல்லவில்லை.

70 குழந்தைகளின் உயிரிழப்புக்குக் காரணமான உ.பி அரசை பதவி விலகச் சொல்லாமல் ஸ்டாலின் பக்கத்தில் நின்றுகொண்டு ஊழல் பத்தி பேசுவது என்ன நியாயம். அவர் புகழ் பெற்றவர் என்பதால் சொல்லுவதை எல்லாம் ஏற்க முடியாது. இப்போது தன்னோடு குரல் கொடுக்க அழைக்கும் அவர் நெடுவாசலிலும் கதிராமங்களத்திலும் போராடும்போது ஏன் குரல் கொடுக்க வரவில்லை. 
 அ.தி.மு.க-வைப் பொறுத்தமட்டில் அது அழிந்துபோய்விட்டது. தினகரனால் இனி எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், அ.தி.மு.க என்பது பதவிக்காக நடத்தப்படும் கட்சியாக மாறிவிட்டது. பதவி இருக்கும் இடத்திலேயே அந்தக் கட்சியும் இருக்கும். இந்த ஆட்சி கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் வந்தால் அதில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்புள்ளது. ம.தி.மு.க-வின் நலன் கருதி தி.மு.க-வை ஆதரிப்பதைத் தவிர வைகோவுக்கு வேறு வழியில்லை. அதைத் தவறு என சொல்லவும் முடியாது'' என்றார்.


 முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான சீமான், அமீர் மீதான வழக்கு விசாரணை  ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!