வெளியிடப்பட்ட நேரம்: 21:15 (17/08/2017)

கடைசி தொடர்பு:21:15 (17/08/2017)

'உண்மையை வெளியிடுங்கள்': தோழர் ஆர்.நல்லகண்ணு பாய்ச்சல்!

 

நல்லகண்ணு

 

இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக மேலூர் பேருந்துநிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  இதில் முன்னாள் கலெக்டர் சகாயம் கண்டறிந்த நரபலி மற்றும் 1 லட்சம் கோடி ரூபாய் குவாரி ஊழலலின் ஆவண வெள்ளை அறிக்கையை வெளியிடவும், கொள்ளையின் ஆவணங்களை வெளிடும் வரை சகாயம் கமிஷனைக் கலைக்கக் கூடாது என்றும் சகாயம் குடும்பத்துக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இதில் வலியுறுத்தப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் நல்லகண்ணு பேசுகையில், "நாட்டில் ஊழல் என்பது வேரூன்றி கிடக்கிறது. புகார்கள் எழுந்தும் விடைகள் கிடைக்க கால தாமதம் அடைகிறது. சகாயம் அவர்கள் நேர்மையுடனும் பல இடங்களில் செயல்பட்டவர். அவருக்குக் கிடைத்த பரிசு பணியிடம் மாற்றம் என்பதே. 22 இடங்களில் பணிசெய்துள்ள அவர், 26 முறை பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 16 மாதங்கள் அலைந்து பல்வேறு இடங்களில் கிரானைட் குற்றங்களைக் கண்டறிந்தார். ஏன் கடந்த 2015 செப்டம்பர் 12-ம் தேதி  உண்மையைக் கண்டறிவதற்காக மேலூர் மலம்பட்டி சுடுகாட்டில் படுத்துக்கிடந்தவர் சகாயம். ஊழல்களைக் கண்டறிய வெயில், மழை பாராமல் உழைத்தவர். அவர் சேகரிந்த உண்மைகளை ஏன் வெளியிடவில்லை. அந்தக் காலத்தில் ஆடு கோழிகளைத்தான் நரபலி கொடுப்பார்கள். ஆனால், குவாரிகளுக்காக மனிதர்களையே பலி கொடுத்துள்ளார்கள். அந்தக் குற்றங்களை ஏன் வெளியிடக் கூடாது? எனவே சகாயம் கண்டறிந்த ஆவணங்களின் வெள்ளையறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார் .