வெளியிடப்பட்ட நேரம்: 21:12 (17/08/2017)

கடைசி தொடர்பு:22:30 (17/08/2017)

‘கைவிரல் நகம் முதல் ஷூக்கள்’ வரை ஆண்களிடம் பெண்கள் கவனிக்கும் 10 விஷயங்கள்!

ஆண்-பெண்

பெண்கள் எந்த ஆணிடமும் அவ்வளவு எளிதில் தோழமை பாராட்ட மாட்டார்கள். உங்களிடம் வார்த்தைகளால் கேட்காமலேயே உங்களை மதிப்பிட்டுவிடுவார்கள். உங்களது ஸ்டைல், மேனரிசம், வாழ்க்கை முறை எல்லாம் அவர்களுக்கு உங்களை யாரென்று உணர்த்திவிடும். உங்களோடு உரையாடும் முதல் சந்திப்பிலேயே பெண்கள் இத்தனை விஷயங்களையும் கவனித்துவிடுகின்றனர். இதில், நீங்கள் வாங்கும் மதிப்பெண்தான் அவர்களது வாழ்வில் நீங்கள் எவ்வளவு தூரம் பயணிக்க இருக்கிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. ‘இந்தப் பொண்ணுங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே’ என்று புலம்புவதை விட்டுவிட்டு, இந்த 10 விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே!

1) ஆணின் காலணி மற்றும் ஷூக்களையே பெரும்பாலான பெண்கள் முதலில் கவனிக்கின்றனர். எந்த இடத்துக்கு ஷூ, எந்த இடத்துக்கு காலணியைத் தேர்வுசெய்கிறீர்கள் என்பது முக்கியம். ஷூவை பக்காவாக பாலீஸ் செய்து போடும் ஆண்களுக்கே அதிக மதிப்பெண் கிடைக்கும். ஒரே ஜோடி சாக்ஸைக்கொண்டு தயவுசெய்து ஷூ போடாதீர்கள். ஷாக்ஸை சுத்தமாக வைத்திருப்பது உங்களது காதலுக்கு பலம் சேர்க்கும். 

2) உடல் துர்நாற்றம், வியர்வை, வாய் நாற்றம் இவையெல்லாம் பெண்களை பின்னுக்குத் தள்ளச்செய்யும். இரண்டு நாள்களாக அதே சட்டையைப் பயன்படுத்துவது, அக்கறையின்றி இருப்பது ஆகியவற்றைப் பெண்கள் விரும்புவதில்லை. அவர்களோடு இருக்கும் தருணங்களில் சுகந்தமான மணம் வீசும் பாடி ஸ்பிரே உங்களுக்கு கை கொடுக்கும். முக்கியமாக வாய் நாற்றம் தவிர்க்க மெனக்கெடுங்கள். 

3) கால்களோடு கைகளையும் பெண்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள். நீங்கள் பார்க்காதபோதெல்லாம் அவர்கள் கண்கள் உங்களை ஸ்கேன் செய்து, மதிப்பெண் பட்டியலை நிரப்பிக்கொண்டிருக்கும். நகங்கள் முறையாக வெட்டப்பட்டு சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம். அழுக்கு நகங்கள் உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல, நட்பின் நலனுக்கும் கேடு விளைவிக்கும். 

பெண்கள்

 

4) தும்மல், வியர்வை இரண்டையும் சமாளிக்க, கைக்குட்டை வைத்திருங்கள். தினமும் அவற்றை மாற்றிவிடுங்கள். 

5) நீங்கள் உங்களுக்கே தெரியாமல் அனிச்சையாகச் செய்துவிடும் தவறுகள், உங்களது மதிப்பெண்ணை மைனஸுக்குத் தள்ளுகிறது. பொது இடங்களில் நீங்கள் கவலையின்றி எச்சில் துப்பினால், பொறுப்பற்றவன் என்ற தீர்ப்பு பெண்கள் மனதில் கொடுக்கப்படும். எனவே, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சிறுநீர் கழிப்பதும் வேண்டாம். 

6) உங்களின் வேறு சில மேனரிஸமும் பெண்களை விலகவைக்கும். இங்கிதம் பார்க்காமல் கண்ட இடங்களில் சொறிந்துகொண்டு சங்கடத்தை ஏற்படுத்தாதீர்கள். இதுபோன்ற விஷயங்களைப் பெண்கள் மிகவும் வெறுப்பார்கள். 

7) உங்களது பாடி லாங்குவேஜ் மற்றும் நீங்கள் மற்றவர்களிடம் தொடர்புகொள்ளும் விதம் ஆகியவற்றையும் கவனிக்கின்றனர். உங்களிடம் திடீர் எனக் கையேந்தும் நபர்களைப் புறக்கணிப்பவரா நீங்கள்? இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். முடிந்த வரை உதவுங்கள். யாரையும் கடும் சொற்களால் புண்படுத்தாமல், அன்பாக நடந்துகொள்ளுங்கள். 

8) அவள் உங்களோடு இருக்கும்போது, மற்ற பெண்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள், என்ன கமெண்ட் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். பெண்களை வெறித்துப் பார்ப்பதும், அசடுவழிவதும் வேண்டவே வேண்டாம். அது, உங்கள் இருவருக்கும் இடையிலான தூரத்தை அதிகரித்துவிடும். 

9) உங்கள் தோழியோடு இருக்கும்போது, நண்பர்கள் அல்லது உறவினர்கள் வருகிறார்கள். நீங்கள் வழக்கம்போல சம்பந்தமில்லாமல் கமெண்ட் அடித்து ஹியூமர் செய்பவர்களா? ரொம்ப கவனம். இப்படியெல்லாம் பேசி உங்களது இமேஜை உடைத்துக்கொள்ள வேண்டாம். 

10) எந்தக் காரணத்துக்காகவும் ஸ்டைலாகப் பேசுவதாக நினைத்து, தப்புத் தப்பாக ஆங்கிலத்தில் உரையாட வேண்டாம். அது, உங்கள் மீதான நம்பிக்கை சரிய காரணமாகிவிடும். தன்னம்பிக்கை, ஆர்வக்கோளாறு என இயல்புக்கு மீறி நீங்கள் உங்களை வெளிப்படுத்தினால், நடிப்பதாக அவர்கள் மனம் கணக்குப் போட்டுவிடும். 

தோழி, காதலி, மனைவி என அந்தப் பெண் உங்களோடு எந்த உறவிலும் இணையலாம். அந்த உறவு காலம் முழுவதும் இனித்திருக்க, எப்போதும் இவற்றில் கவனம் செலுத்துங்கள் ஆண்களே!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்