டி.டி.வி.தினகரனை வீழ்த்துமா அறிவிப்புகள்..? வேகமெடுக்கும் எடப்பாடி ‘மாஸ்டர் பிளான்’

‘ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை, போயஸ்கார்டன் வீட்டை நினைவிடம் ஆக்குதல்’ என்கிற எடப்பாடி பழனிசாமியின் அதிரடி அறிவிப்புகள், டி.டி.வி.தினகரனை வீழ்த்துமா... என்று கேள்வி எழுந்துள்ளது.

ஜெயலலிதா

“அ.தி.மு.க அணிகளை இணைக்கவில்லை என்றால், ஆகஸ்ட் 5-ம் தேதியிலிருந்து கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டுவேன்” என்று டி.டி.வி.தினகரன் அறிவித்து அதன்படி தனது சுற்றுப்பயணத்தை மதுரை மேலூரிலிருந்து தொடங்கிவிட்டார். 'டி.டி.வி.தினகரனுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் அவரைக் கட்சியிலிருந்து நீக்குகிறோம்; ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் இருக்கையில் வேறு யாரும் அமர்ந்து இருப்பதைத் தொண்டர்கள் விரும்பவில்லை' என்று எடப்பாடி பழனிசாமி அணி தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், ஓ.பன்னீர்செல்வம் விடாப்பிடியாகத் தனது கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றினால்தான் அணிகள் இணைப்புக்குச் சாத்தியம் என்று சொல்லிவந்தார்.

இந்நிலையில், மதுரை மேலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டி.டி.வி. தினகரன், ''ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்'' என்று கோரிக்கை வைத்தார். மேலும், அவர் பேசுகையில், ''கொல்லைப்புறமாகக் கட்சியைக் கைப்பற்ற நினைத்தால், அவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டியதிருக்கும்'' என்று எச்சரித்திருந்தார். இதற்கிடையில், இரு அணிகளையும் இணைக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தன. நேற்று நடந்த இரு அணிகளின் தூதுவர்கள் சந்திப்பில், ''டி.டி.வி.தினகரனே கேட்டுவிட்டார், நீதி விசாரணைக்கு உத்தரவிட எடப்பாடிக்குத் தயக்கம் ஏன்...'' என்பதை முன்வைத்து பன்னீர்செல்வம் டீம் கேட்டு இருந்தனர். இதையடுத்து எடப்பாடி தலைமையில் நடந்த மூத்த அமைச்சர்களை உள்ளடக்கிய கூட்டத்தில் எடுத்த முடிவின்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பன்னீர்செல்வம் தினகரன்

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணைக்கு உத்தரவு என்பதன்மூலம் செப்டம்பர் 22-ம் தேதி முதல் டிசம்பர் 5-ம் தேதிவரை நடந்த அனைத்துச் சம்பவங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும். அப்போலோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவைக் கொண்டுவந்தது முதல் டிசம்பர் 5-ம் தேதி மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டதுவரை விசாரிக்கப்படும். சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்கள், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டவர்கள், பேட்டி கொடுத்தவர்கள், கைநாட்டு வாங்கியவர்கள், ஜெயலலிதாவை மருத்துவமனையில் போய்ப் பார்த்தவர்கள் என்று ஏராளமானோர் இந்த விசாரணை வளையத்துக்குள் வருவார்கள்.

இதற்கிடையில், இந்த விசாரணை வளையத்துக்குள் முக்கிய வி.ஐ.பி-க்கள் எல்லாம் வருவதால், “பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் வேண்டும்'' என்றும் கோரிக்கை உடனே எழுந்துள்ளது. மேலும், ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவிடம் ஆக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்துவதில் நிறைய நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஜெயலலிதா, வீடு யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி முக்கியமாக எழுந்துள்ளது. ''போயஸ்கார்டன் வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடும் ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகள் தீபக் மற்றும் தீபா ஆகியோர் கையில்தான் நினைவிட அறிவிப்பு செயல்படுத்தும் துருப்புச் சீட்டு இருக்கிறது. அவர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், நினைவிட அறிவிப்பை நடைமுறைப்படுத்த முடியாது'' என்கிறார்கள் சட்ட நிபுணர்கள்.

சசிகலா

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி அணிக்கு மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தார். அதில், இரண்டு கோரிக்கைகளை இப்போது நிறைவேற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரே கோரிக்கை, சசிகலா குடும்பம் நீக்கம் பற்றியது. அதில், டி.டி.வி.தினகரனைத் தீர்மானம் போட்டு நீக்கிவிட்டனர். சசிகலா நீக்கம் பற்றி, எடப்பாடி போட்ட தீர்மானத்தில் சூசகமாகச் சொல்லி இருக்கிறார். எனவே, இரு அணிகளும் இணைவதற்கான பணிகள் வேகமாக நடப்பதையே எடப்பாடி பழனிசாமியின் இப்போதைய அறிவிப்பு சொல்கிறது. சசிகலா குடும்பத்தை வீழ்த்த தனது மாஸ்டர் பிளான்களில் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதுவும், சசிகலாவின் பிறந்தநாளுக்கு (ஆகஸ்ட் 18-ம் தேதி) முந்தைய நாளில் அதிரடியாக வெளியிட்டது எடப்பாடியின் மாஸ்டர் பிளான்களில் முக்கியமானது என்கிறார்கள். 

என்ன செய்யப்போகிறார் டி.டி.வி.தினகரன்... மனம் மாறுவாரா பன்னீர்செல்வம்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!