விரிவடையும் அன்புச் சுவர் திட்டம்! பொதுமக்கள் மகிழ்ச்சி | wall of kindness scheme is extended in Tirunelveli

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (17/08/2017)

கடைசி தொடர்பு:10:07 (18/08/2017)

விரிவடையும் அன்புச் சுவர் திட்டம்! பொதுமக்கள் மகிழ்ச்சி

அன்புச் சுவர்

நெல்லையில் அறிமுகப்படுத்தப்பட்ட 'அன்புச் சுவர்' திட்டம் விரிவடையத் தொடங்கியிருக்கிறது. மேலும் இரண்டு இடங்களில் இந்தத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியரான சந்தீப் நந்தூரியின் சிந்தனையில் உதயமானது, 'அன்புச் சுவர்' திட்டம். மனிதனுக்கு மனிதன் உதவுவதை வலியுறுத்தும் வகையில் இந்தத்  திட்டத்தை, தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில் அறிமுகம்செய்தார். இந்தத் திட்டத்தின்படி, யாரும் தங்களுக்குத் தேவையில்லாத பயனுள்ள பொருள்களைக் கொண்டுவந்து அன்புச் சுவரில் வைக்கலாம். அதே சமயம், தேவை இருப்பவர்கள் எவர் வேண்டுமானாலும் அங்கிருக்கும் பொருளை எடுத்துச் செல்ல முடியும். 

சாராள்டக்கர் கல்லூரி

மனிதாபிமானத்தையும் மனித நேயத்தையும் வளர்க்கும் இந்த சீரிய திட்டம், நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகச் சுவரில் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது., இந்த திட்டம் தற்போது வெற்றிகரமாகச் செயல்பட்டுவருகிறது. பொதுமக்கள், இந்தச் சுவரில் பேனா, பென்சில், புத்தகங்கள்,. நோட்டுகள், பேக்குகள், டி-ஷர்ட், ஜீன்ஸ், பேன்ட், சேலை, காலணிகள் எனப் பல்வேறு பொருள்களை வைக்கிறார்கள். அவற்றை தேவைப்படுபவர்கள் எடுத்துச் செல்கின்றனர். 

இந்தத் திட்டத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பைக் கண்ட பாளையங்கோட்டையில் உள்ள சாராள் டக்கர் மகளிர் கல்லூரி நிர்வாகம், இதைத் தங்கள் கல்லூரியில் இன்று அறிமுகப்படுத்தியது.  ’டேக் அவே கிஃப்ட் கார்னர்’ என்கிற பெயரில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதை, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை அழைத்து கல்லூரி நிர்வாகம் திறந்தது. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த், கல்லூரி முதல்வர் உஷா கட்வின் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

வருங்கால வைப்புநிதி அலுவலகம்

கல்லூரி மாணவிகளிடம் இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கல்லூரி பேக்குகள், புத்தகங்கள், நோட்டுகள், பேனாக்கள், செருப்புகள், உடைகள் எனப் பல்வேறு பொருள்களை மாணவிகள் இந்த மையத்தில் வைத்துள்ளனர். அதை, ஏராளமான மாணவிகள் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையானதை எடுத்துச்செல்கின்றனர். இந்தத் திட்டத்துக்கு கல்லூரி மாணவிகளிடம் கிடைத்துள்ள வரவேற்பு, பேராசிரியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

அத்துடன், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்திலும் 'அன்புச் சுவர்' திட்டம் இன்று தொடங்கப்பட்டது. அங்கு உடைகள், சேலை, பேக்குகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் ஏராளமானோர் பார்வையிட்டு, தங்களுக்குத் தேவையானதை எடுத்துச் செல்கின்றனர். நெல்லையில் 'அன்புச் சுவர்' திட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மேலும் புதிய இடங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டுவருகிறது.


[X] Close

[X] Close