வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/08/2017)

கடைசி தொடர்பு:09:58 (18/08/2017)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பும் அப்போலோவின் அறிக்கையும்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ம் தேதி காலமானார். அன்று முதலே ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகப் பல்வேறு கருத்துகள் வலம் வந்தன. அதேபோன்று, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் முதல்வர் பதவியிலிருந்து விலகிய பின்னர் இதே கருத்தைக் கூறி,'ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணை வேண்டும்' என்று கூறினார். 

apollo hospital


அதன்பின்னர், அ.தி.மு.க கட்சி இரு அணிகளாகப் பிரிந்து செயல்பட்டுவந்தது . இரு அணிகள் இணைவதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, பன்னீர்செல்வம் அணியின் சார்பாக இரண்டு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அதில் முக்கியமானது, ஜெயலலிதா மரணம்குறித்த சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுதான். 

முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றபோது, ஜெயலலிதா மரணத்தில் எந்தச் சந்தேகமும் இல்லை என்றே கூறினார். இந்த நிலையில், இன்று திடீரென்று செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பழனிசாமி, ஜெயலலிதா மரணத்தில் நீதி விசாரணைசெய்ய ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

முதல்வரின் இந்த அறிவிப்பை பன்னீர்செல்வம் அணியின் சிலர் வரவேற்றனர். இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவமனை,  முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. 
அதில், "முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம்குறித்த நீதி விசாரணை நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை வரவேற்கிறோம். முன்னாள் முதல்வருக்கு எங்களால் முடிந்த வரை நல்ல முறையில் தரமான சிகிச்சை அளித்தோம். நாங்கள் மட்டும் இல்லாமல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், வெளிநாட்டிலிருந்தும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர். எனினும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த நீதி விசாரணையின்மூலம் ஜெயலலிதா மரணம்குறித்த சந்தேகங்கள் தீர்க்கப்படும் " என்று அதில் கூறப்பட்டுள்ளது.