வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (17/08/2017)

கடைசி தொடர்பு:15:52 (28/06/2018)

"பிற மாநிலங்கள் வியக்கும் வகையில் செயல்படும் தமிழக அரசு": சிலாகிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!

 

 

"தமிழக அரசு, பிற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது" என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


 கரூர் மாவட்டம், கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றார்.


அப்போது அமைச்சர் பேசியதாவது, "மறைந்த முதல்வர் அம்மா உத்தரவுப்படி பொதுமக்களைச் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதற்காக, திங்கட்கிழமைதோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வாரத்தில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டம், மாதத்தில் ஒருநாள் மக்கள் தொடர்பு முகாம் மற்றும் 253 பொதுச்சேவை மையங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுவருகிறது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியும் மாணவ, மாணவிகளுக்கு கணினி முதல் காலணி வரை, கல்வி உதவித்தொகை, இலவச பேருந்துப் பயண அட்டை உள்ளிட்ட அனைத்தையும் வழங்கிவருகிறார்கள்.

மேலும், ஏழைப்பெண்களின் திருமணத்துக்காக 4 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கியதைத் தேர்தல் வாக்குறுதியில் 8 கிராம் வழங்கப்படும் என்பதையும் தமிழக முதல்வர் நிறைவேற்றி வருகிறார். ஏழைப்பெண்களின் பொருளாதாரத்தைப் பெருக்குவதற்காக விலையில்லா ஆடுகளை வழங்கிவருகிறார்கள். அவ்வாறு வழங்கிவரும் திட்டங்களில், பிற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டுவருகிறது" என்று தெரிவித்தார்.