"முதல்வரின் அறிவிப்பு என்னாச்சு?" கேள்வி எழுப்பும் சி.பி.எம்

நூறு சதவிகிதம் விவசாயம் பாதித்த மாவட்டம் சிவகங்கை. கடந்த மூன்று வருடங்களாக வறட்சியாக இருக்கிறது. மாவட்டத்தில் சரிவர 100 நாள் வேலையும் கிடைப்பதில்லை. 100 சதவிகிதம் விவசாயம் பாதித்தவர்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 22,000 ரூபாய் காப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். ஆனால், இந்த மாவட்டத்தில் 564 வருவாய் கிராமங்கள் உள்ளன. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் 75,078 பேர். இதில் 10,405 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்த மாவட்டத்தில் 10, 25, 50, 95 சதவிகிதங்கள் எனப் பிரித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது.

 

100 சதவிகிதம் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட சி.பி.எம் மாவட்டச் செயலாளர் கந்தசாமி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன், மாவட்டச்செயலாளர் ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் வீரபாண்டி ஆகியோர், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, கூட்டுறவு சங்க இணை இயக்குநர் திலிப்குமார், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் செல்வம் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரி கருணாநிதி ஆகியோரை சந்தித்தனர்.

அப்போது,  “அரசாங்கம் 100 சதவிகிதம் விவசாயம் பாதித்த மாவட்டமாக சிவகங்கையை அறிவித்திருக்கிறது. ஆகையால், 100 சதவிகிதம் இழப்பீடு வழங்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 22 ஆயிரம் என்று அறிவித்தபடி விவசாயிகளுக்கு  வழங்க வேண்டும். முதலமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அதிகாரிகளும் அரசாங்கத்துக்கு அறிக்கை அனுப்புவதாக வாக்குறுதியளித்திருக்கிறார்கள்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!