இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகளுக்கான ஆம்புலன்ஸ்: கோவையில் அறிமுகம்!

ந்தியாவிலேயே முதன்முறையாக, யானைகளுக்கான பிரத்யேக ஆம்புலன்ஸ் கோவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

யானைகளுக்கான ஆம்புலன்ஸ்


வறட்சியாலும் காடுகள் அழிக்கப்படுவதாலும் யானைகள் இறப்பு என்பது வருடத்துக்கு வருடம் அதிகரித்துவருகிறது. உயிரிழக்கும் தருவாயில் உள்ள யானைகளைக் காப்பாற்றி, யானைகளின் இறப்பைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு தமிழக வனத்துறை பல முயற்சிகளைச் செய்துகொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலேயே முதன்முறையாக யானைகளுக்கான பிரத்யேக ஹைட்ராலிக் ஆம்புலன்ஸை கோவையில் அறிமுகப்படுத்தியுள்ளது, தமிழக வனத்துறை.  

சத்தியமங்கலத்தில் உள்ள புலிகள் காப்பகத்தில் இருக்கும் இந்த ஆம்புலன்ஸின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வனத்துறை மருத்துவர் அசோகனிடம் பேசினோம், “ திருநெல்வேலி, ஓசூர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் வனத்துறை மருத்துவ யூனிட்டுகள் அமைக்க  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், ரூ.20 லட்சம் செலவில் இந்த ஹைட்ராலிக் ஆம்புலன்ஸை வடிவமைத்துள்ளோம். இதில் 10 டன் வரை  உள்ள யானையை ஏற்ற முடியும்.  சிகிச்சைக்காக  யானையை லாரியில் ஏற்றுவது சாதாரண காரியம் அல்ல.

சாய்வு தளம் அமைத்து, கும்கி உதவியுடன்  யானையை இழுத்து  ஏற்ற வேண்டும். ஆனால், இந்த ஆம்புலன்ஸில் அப்படி சிரமப்பட வேண்டியதில்லை. ஹைட்ராலிக் முறையில் டிரக்கை கீழே இறக்கிவைத்து மோட்டார் உதவியுடன் கயிறு கட்டி யானையை எளிதில் உள்ளே ஏற்றிவிடலாம்.  இப்போது 5.5 டன் எடைகொண்ட கும்கி யானையை ஏற்றி சோதனை செய்திருக்கிறோம். மேலும், பல கூடுதல் வசதிகள் செய்யவேண்டியுள்ளது. மேலும் மேல்தளத்தில் வலை, 5 அடி உயரத்தில் நிறுத்தும் வசதி, பக்கவாட்டுக் கதவுகள் இருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸை காட்டுக்குள் நிறுத்திவைத்துக்கொண்டு, நாம் இதிலிருந்தபடியே விலங்குகளைக் கண்காணிக்கலாம். மேலும் இதில் சில மருத்துவ வசதிகளும், அவசரகால வழியும் இணைக்கப்பட உள்ளன. யானைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகனம் என்பது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!