வெளியிடப்பட்ட நேரம்: 23:40 (17/08/2017)

கடைசி தொடர்பு:18:09 (23/07/2018)

கரூரில் குஷன்ஸ் ஏற்றுமதி அதிகரிப்பு!

கரூரில் உற்பத்தியாகும் குஷன்ஸ், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிசெய்வது அதிகரித்திருப்பதாக கரூர் மாவட்ட ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
     

                   


ஜவுளி நகரமான கரூரில், போர்வைகள், திரைச்சீலைகள், குஷன்ஸ், துண்டுகள், சமையல் அறையில் பயன்படுத்தப்படும் துண்டுகள், சமையலர்களுக்கான உடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றில், இங்கு தயாரிக்கப்படும் குஷன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது அதிகரித்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபற்றி, நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், ஜவுளி ஏற்றுமதியாளருமான ஸ்டீபன் பாபு,"வெளிநாடுகளில் மற்றதைவிட குஷன்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதை, இருக்கைகளில் சொகுசாக அமரவும், சோபாக்கள், மெத்தைகளில் பயன்படுத்தவும், கார் போன்ற வாகனங்களில் செல்லும்போது இருக்கைகளில் உபயோகிக்கவும் பயன்படுத்துகின்றனர். ஜெர்மனி, இத்தாலி, சுவீடன், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு குஷன்ஸ் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கரூரில் உற்பத்தியாகும் ஜவுளிகளில், 50 சதவிகிதம் குஷன்கள்தான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பருத்தித் துணியில் தரமானதாக உற்பத்திசெய்யப்படும் கரூர் குஷன்களுக்கு வெளிநாடுகளில் தனி மவுசு உள்ளது. ஒரு குஷனின் விலையை தனியாக எதுவும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. தரம் மற்றும் அளவுக்கு ஏற்றாற்போல வேறுபடும். சாதாரண விலை ரூ.150-ல் இருந்து தொடங்குகிறது. இத்தகைய குஷன்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது கணிசமாக அதிகரித்திருக்கிறது. இது, கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது" என்றார்.