டெங்குவின் தலைநகரமா நெல்லை? - ஆர்.டி.ஐ-யில் வெளியான அதிர்ச்சித் தகவல்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்த நோய் வேகமாகப் பரவிவருவதால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூர், சுரண்டை, கடையம், வள்ளியூர், களக்காடு, நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. வள்ளியூர் அருகே உள்ள பிலாக்கொட்டைப்பாறை என்ற சிறிய கிராமத்தில், சில வாரங்களுக்கு முன்பு அனைத்து வீடுகளிலும் டெங்கு பாதிக்கப்பட்ட நோயாளிகள் இருந்தனர். ஒரே வீட்டில் 4 பேர் வரையிலும் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். 

டெங்கு பாதிப்பு

நெல்லை மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இந்த நோயின் தாக்கம் குறைந்தபாடில்லை. அதனால் இப்போதும் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் அதிகமான டெங்கு நோயாளிகள் சிகிச்சைபெற்றுவருகின்றனர். இவர்களுக்காக தனி வார்டு செயல்பட்டுவருகிறது. 

இந்த நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக சமூக ஆர்வலரான வழக்கறிஞர் பிரம்மா எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ள அரசு மருத்துவமனை, நெல்லை மாவட்டத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் மே 4-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 1004 பேர் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர்களில் 547 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரம்மாபொதுவாக, டெங்கு நோய்குறித்து உரிய தகவல்களை சுகாதாரத்துறை தெரிவிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டு உள்ளது. நெல்லை மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்ற 15 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், நெல்லை மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளியான வழக்கறிஞர் பிரம்மாவிடம் கேட்டதற்கு, ‘’பொதுவாக மழைக் காலத்தில் மட்டுமே டெங்கு நோயின் தாக்குதல் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவும், கடலோரப் பகுதியில் இருந்தே உள் மாவட்டங்களுக்குப் பரவுமாம். ஆனால் இந்த வருடம், நெல்லை மாவட்டத்தில் மழைக்கு முன்பாகவே டெங்கு பரவத் தொடங்கிவிட்டது. அதனால்தான், எத்தனை பேர் பாதிக்கப்பட்டார்கள் எனத் தகவல் கேட்டேன். 

அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் நிறையப் பேர் சிகிச்சைபெற்றார்கள். அதில் பலன் அளிக்காமல் உயிரிழந்தவர்களும் பலர். ஆனால், அவர்கள் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இந்த நோயின் தீவிரம் குறித்து மக்களிடம் தெரியப்படுத்தி கட்டுப்படுத்தினால் மட்டுமே கூடுதல் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும். அதனால் உயிரிழப்புகள்குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் தகவலை மறைப்பதை விட்டுவிட்டு நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதே அவசியமானது’’ என்கிறார் அக்கறையுடன்.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!