நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை!- அமைச்சர் விஜயபாஸ்கர்

'நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை' என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு தீவிரமாக முயற்சிகள் மேற்கொண்டுவருகிறது. இந்த அவசரச் சட்டத்துக்கு, மத்திய அரசின் ஒப்புதல் இன்று கிடைக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல, நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ மாணவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் நளினி சிதம்பரம், உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் முறையிட்டார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் வரும் 22-ம் தேதி வரை மருத்துவக் கலந்தாய்வை நடத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இந்த மனுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும் அவர் உத்தரவிட்டார். மேலும், நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. 


இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ’நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்குப் பெற தமிழக அரசு தொடர்ந்து முயல்கிறது. நீட் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. நீட் விவகாரத்தில், எந்த மாணவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும். இதுதொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் எந்த தரப்பும் பாதிக்கப்படாத வகையிலான பதிலை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அளிக்கும். அதேபோல, மருத்துவக் கலந்தாய்வு நடத்த  ஆறு நாள்கள் போதுமானது என்பதால், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகளை முடித்துவிடலாம் என்று அவர் தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!