இன்று அதிரடி முடிவெடுப்பாரா ஓ.பன்னீர்செல்வம்?

பிரதமருடன் எடப்பாடி பழனிசாமி

"வரும்.... ஆனா வராது...." அ.தி.மு.க-வில் தற்போது நடைபெற்று வரும் உச்சகட்ட மோதல்களைப் பாரக்கும்போது, இந்த காமெடி வசனம்தான் நம் நினைவுக்கு வருகிறது.

"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்ட இல்லம், பொதுமக்களின் பார்வைக்காக நினைவு இல்லமாக மாற்றப்படும்; ஜெயலலிதா மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" என்று இரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்றார் ஓ.பன்னீர்செல்வம். ஒரு மாதத்துக்குள்ளாகவே அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, ஜெயலலிதாவின் தோழியும், அவருடன் நீண்ட காலம் ஒரே வீட்டில் வசித்தவருமான வி.கே.சசிகலாவை, அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து, கட்சியின் பொதுச்செயலாளராக நியமித்தனர். அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு வராத சசிகலாவிடம், போயஸ்கார்டனுக்குச் சென்று, அவரைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்ததற்கான தீர்மான நகலை, அப்போதைய முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், இப்போதைய அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் நேரில் சென்று வழங்கியதுடன், சசிகலாவின் காலில்விழுந்தும் ஆசி பெற்றனர்.

ஒரு மாநிலத்தின் முதல்வராக, மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக இருந்த ஜெயலலிதா மர்மமான முறையில் இறந்தார் என்பது அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியவில்லையா அல்லது ஜெயலலிதா மரணத்தின்போது இரண்டுநாள்கள் சென்னையிலேயே முகாமிட்டு, இறுதிச்சடங்கு முடியும்வரை அனைத்தையும் மத்திய அரசின் பிரதிநிதியாக மேற்கொண்ட மத்திய அமைச்சராக இருந்து, தற்போது குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள எம்.வெங்கைய்ய நாயுடுவுக்கு ஜெ. மரணம் குறித்து சந்தேகம் எழவில்லையா அல்லது அப்போது அமைச்சராக இருந்து, தற்போது முதல்வராகப் பதவி வகித்துவரும் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தோன்றவில்லையா?

தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போன்றோரும், இன்னும் பல்வேறு தரப்பினரும் ஜெ. மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, அதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியபோதெல்லாம் மௌனம் காத்தவர்கள்தான் இதே ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்.

பிரதமருடன் ஓ.பன்னீர்செல்வம்மத்திய பி.ஜே.பி. அரசின் நெருக்கடிகளுக்குப் பணிந்தே ஓ.பி.எஸ்ஸும், எடப்பாடியும் தற்போது இரு அணிகளையும் இணைக்க முன்வந்திருக்கின்றனர்'' என அ.தி.மு.க-வில் உள்ள தொண்டர்கள் மட்டுமல்லாது, தமிழக அரசியலை உன்னிப்பாகக் கவனித்துவரும் சாதாரண மக்கள்கூடப் பேசத்தொடங்கியுள்ளனர்.

அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ், எடப்பாடி அணிகள் தவிர, தற்போது டி.டி.வி.தினகரன் தலைமையில் ஓர் அணி என மூன்று அணிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ் தரப்பினர் இன்று மாலை சென்னையில் கூடி, எடப்பாடி அறிவிப்புப் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

எடப்பாடி தரப்புடன் இணைய வேண்டுமானால், "ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்; சசிகலா குடும்பத்தினரைக் கட்சியை விட்டு முற்றிலுமாக நீக்க வேண்டும்" என்று ஓ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வந்தது.

ஏற்கெனவே, கடந்த வாரத்தில், எடப்பாடி தலைமையிலான அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில், துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், சசிகலாவைப் பொதுச்செயலாளராக ஏற்கமுடியாது என்று தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், தன்னை நீக்க பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்று தினகரன் ஒருபுறம் கூறி வருகிறார்.

இப்படியான சூழலில்தான், எடப்பாடிக்கும், தினகரனுக்கும் கருத்து மோதல்கள் நீடித்துவரும் நிலையில், தமிழக அரசின் சார்பில், நினைவு இல்லம், நீதிவிசாரணை என்ற அதிரடிகளை அரங்கேற்றியுள்ளார் எடப்பாடி.

மேலும், எடப்பாடியின் இந்த நடவடிக்கையை அ.தி.மு.க-வின் இரு அணிகள் (ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ்) இணைப்புக்கான முன்முயற்சி என்று எடுத்துக் கொண்டாலும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சரவையில் என்ன பொறுப்பு, அவரது அணியைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்கள் பதவி அளிப்பது போன்ற விஷயங்கள் குறித்து இன்னமும் எடப்பாடி தரப்பிலிருந்து 'கிரீன் சிக்னல்' கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

எப்படி இருப்பினும், விரைவில் தமிழக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், உத்தரவு வருவதற்குள் இரட்டை இலைச் சின்னத்தை மீட்க வேண்டும் என்பதாலும், மத்திய அரசுடன் சுமுகமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற நெருக்குதலாலும், எடப்பாடி - ஓ.பி.எஸ். அணிகள் இணைய வேண்டிய நிர்பந்தம் உருவாகியுள்ளது.

டி,டி.வி. தினகரன்ஆனால், இந்த இரு அணிகளும் இணைவதை டி.டி.வி.தினகரன் தரப்பு விரும்பவில்லை. அப்படி, அவர்கள் இணைந்தால், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ-க்களை வைத்து, ஆட்சியைக் கலைக்கும் முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒருவேளை, போதிய எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இல்லாமல் போகும்பட்சத்தில், அதை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் இப்போதே எடப்பாடி தரப்பு ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனைக்குப் பின்னர் வெளியாகும் அறிவிப்புகளைப் பொறுத்தே, அ.தி.மு.க இணைப்பில் அடுத்தகட்ட முன்னேற்றம் தெரியவரும். எப்படி ஆனாலும், தொலைக்காட்சி சேனல்களுக்கு இன்னும் சில தினங்களுக்கு 'ஃப்ளாஷ் நியூஸ்'-க்கு பஞ்சமிருக்காது!

"எப்போ இணையும், எப்படி இணையும் என்பதெல்லாம் தெரியாது. ஆனா, இணைய வேண்டிய நேரத்தில் கண்டிப்பா அ.தி.மு.க இணையும்" என்று நாமும் நம்புவோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!