Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

‘ஜெ.வீட்டை நினைவிடமாக்குவதில் சட்டச் சிக்கல்!’ - பரபரப்புக்காக அறிவித்தாரா எடப்பாடி பழனிசாமி? #VikatanExclusive

ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் இல்லம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை, அரசு நினைவிடமாக்குவதில் சட்டச் சிக்கல் இருப்பதாக, சட்ட நிபுணர்கள் சொல்கின்றனர். பரபரப்புக்காகவும் யாரையோ பழிவாங்குவதற்காகவும்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாக தீபா தரப்பு குற்றம் சாட்டுகிறது. 

'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்று அழைக்கப்படும் இல்லம் அரசு நினைவிடமாக்கப்படும்' என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “என்னுடைய அனுமதி இல்லாமல் போயஸ் கார்டன் வீட்டை எப்படி அரசு நினைவிடமாக்கலாம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் தீபா. முதல்வரின் அறிவிப்புக்கு நீதிமன்றத்தில் தடை பெறவும் தீபா முடிவுசெய்துள்ளார். இதற்கான பணிகளில் களமிறங்கியுள்ளனர், தீபா தரப்பு வழக்கறிஞர்கள்.

ஜெயலலிதா,ஜெ. தீபா,தீபக்

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. ஜெ. தீபா அணியின் மாநில தலைமைச் செய்தித் தொடர்பாளர் பசும்பொன்பாண்டியன், "ஒரு இடத்தை அரசு நினைவிடமாக்க வேண்டுமென்றால், அந்த இடத்துக்குச் சொந்தமான வாரிசுதாரர்களிடம் அனுமதி பெறவேண்டும். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பரபரப்புக்காகவும் யாரையோ பழிவாங்கும் நோக்கத்திலும் 'ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு, அரசு நினைவிடமாக்கப்படும்' என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அந்த வீட்டின் வாரிசுதாரர்களில் ஒருவரான தீபாவிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. இதுதொடர்பாக, தீபா தலைமையில் நேற்று ஆலோசனை நடந்தது. அதில், ஜெயலலிதாவின் வீடு தொடர்பான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. அதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, முதல்வரின் அறிவிப்புக்கு முதலில் தடை வாங்க உள்ளோம்” என்றார்.

இதற்கிடையில், தீபாவின் சகோதரர் தீபக், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு பக்கக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசு நினைவிடமாக்கும் செய்தியை டிவி, செய்தித்தாள்கள் மூலம்தான் தெரிந்துகொண்டேன். அந்த வீட்டை நினைவிடமாக்குவதில் எனக்கும் விருப்பம்தான். ஆனால், நினைவிடமாக்குவது தொடர்பாக அந்த வீட்டின் வாரிசுதாரர்களில் ஒருவரான என்னிடம் யாரும் கலந்து ஆலோசிக்கவில்லை. யாரிடமும் கேட்காமல் இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளீர்கள். அந்த வீட்டின் ஆவணங்கள் என்னுடைய பாட்டி சந்தியா பெயரில் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார். அவர் அனுப்பிய கடிததத்தில், முதலில் 9.8.2017 என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்து, 9-ம் தேதியை அடித்துவிட்டு 16-ம் தேதி என்று திருத்தப்பட்டுள்ளது. அப்படியென்றால், போயஸ் கார்டன் வீடு அரசு நினைவிடமாக்கும் தகவல், முன்கூட்டியே தீபக்கிற்கு தெரியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டப் பொறியாளர் எஸ்.எஸ். பாலாஜிஅரசு நினைவிடமாக்குவதுகுறித்து சட்டப் பொறியாளர் எஸ்.எஸ். பாலாஜி கூறுகையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், மக்களுக்குத் தேவையான அடிப்படை உரிமைகள்குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. கல்வி, வேலை, பேச்சுரிமை என்ற வரிசையில் சொத்துரிமையும் இடம் பெற்றியிருந்தன. 1977-ம் ஆண்டு, 44-வது சட்டத் திருத்தத்தின்படி சொத்துரிமையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. சட்டப்பிரிவு 300ஏ-யின் படி, ஒரு சொத்து அரசுக்குத் தேவை என்று கருதப்படும் சூழ்நிலையில், அதை சட்டரீதியாக அரசு எடுத்துக்கொள்ள சட்டத்தில் வழிவகை உள்ளது. அதன்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, அரசு நினைவிடமாக்க வேண்டுமென்றால், வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கிப் பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுள்ளது. பொதுவாக, சாலை விரிவாக்கம், பூங்கா போன்ற மக்கள் பயன்பாட்டுக்கு இடம் தேவைப்படும்போது, அதை எடுத்துக்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது. அதன்படி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டையும் அரசு நினைவிடமாக மாற்ற அரசுக்கு உரிமை உள்ளது. இருப்பினும், இதுதொடர்பான இறுதி முடிவை நீதிமன்றம் எடுக்கும்” என்றார். தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘போயஸ் கார்டன் வீட்டை நினைவிடமாக்கும்போது, சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் புகழேந்திஅ.தி.மு.க. தொண்டர்கள் அணி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், வழக்கறிஞர் புகழேந்தி கூறுகையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியையும் கட்சியையும் அனுபவிக்க, ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க விசாரணை கமிஷன், போயஸ் கார்டன் இல்லம் நினைவிடம் என்று அவசரகதியில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தினகரனின் மிரட்டலிலிருந்து தப்பிக்கவும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணையவும் இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டின் விரிவாக்கம், சொத்துக்குவிப்பு வழக்கில் உள்ளது. இதுபோன்ற சிக்கல்களை எல்லாம் சட்ட நிபுணர்களுடன் ஏன் முதல்வர் கலந்து ஆலோசிக்கவில்லை?

மேலும், எடப்பாடி பழனிசாமி முதல்வராகி ஆறு மாதங்களுங்கு மேலாகிய நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அணியை திருப்திப்படுத்தவே ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். விசாரணை கமிஷன்மூலம் ஜெயலலிதா மரணத்தில் மறைந்துள்ள உண்மைகள் வெளி வருமா என்பது சந்தேகம்தான். அதுபோல, போயஸ் கார்டன் வீடும் நினைவிடமாக்குவதில் உள்ள சிக்கல்களுக்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அதை முறைப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்க வேண்டும்” என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement