Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''என்னை பரிதாபமா பார்த்தது பிடிக்கலை'' - நீண்ட நாள் கோமாவிலிருந்து மீண்ட சங்கரியின் கதை

சங்கரி

ரு விபத்து ஒருவரின் வாழ்க்கையையே மாற்றிவிடும் என்பதெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம், நிஜவாழ்க்கையில் அல்ல என நினைப்பவரா நீங்கள்? சங்கரியின் வாழ்க்கை நிகழ்வுகளைப் படித்தால், உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள். 

ஒரு சின்ன அதிர்ச்சி, துயரத்தில் இருந்து வெளிவரவே பலருக்கும் பல நாள்கள் ஆகும். ஆனால், பெரும் விபத்தினால் கோமாவுக்குச் சென்று, இரண்டு மாதங்களாகச் சுயநினைவின்றி இருந்தவர் சங்கரி. மீண்டு வீடு திரும்பியதுமே கிராஃப்ட் வகுப்பு, ஆங்கில பயிற்சி என்று தன்னை பரபரப்பாக்கிக்கொண்டிருக்கிறார் இந்தத் தன்னம்பிக்கைப் பெண்மணி. 

''திருநெல்வேலி மாவட்டத்துல இருக்கிற ஸ்ரீவைகுண்டம்தான் என்னுடைய சொந்த ஊர். கோயம்புத்தூரில் பங்குச்சந்தை புரோகிராமர் வேலை. அதையடுத்து சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை எனச் சந்தோஷமாக நாள்கள் நகர்ந்தன. திருமணத்துக்குப் பிறகு கரூரில் வசித்தேன். அங்கே, பதினைந்துக்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகள் எடுத்தேன். என் கணவருக்கு பணிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, மறுபடியும் குடும்பத்துடன் கோவையில் செட்டில் ஆனோம். அப்போது, சின்ன வயசிலிருந்தே எனக்கு ஆர்வமான கிராஃப்ட் வொர்க்கில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். பெண்களைப் பொருத்தவரை என்னதான் பிஸியாக செயல்பட்டாலும், குழந்தைப் பிறந்ததும் ஒரு பிரேக் வரும். அந்த பிரேக் எனக்கும் வந்துச்சு. என் மகளைப் பார்த்துக்கிறதுக்காக கிராஃப்ட் வேலைகளுக்கு பிரேக் விட்டுட்டேன். குழந்தை கொஞ்சம் வளர்ந்ததும், வாஸ்து மிரர்கள் செய்துகொடுக்க ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்தில் எதிர்பாராத ஒரு விபத்துக்கு ஆளானேன்'' என்கிற சங்கரி, எட்டு வருடங்களுக்கு முன்பு எதிர்கொண்ட விபத்தைப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொண்டார்.  

சங்கரி

''அன்று குடும்பத்துடன் கார்ல போயிட்டிருந்தோம். திடீர்னு கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், நான் மட்டும் காரிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்டேன். உடம்பில் எந்தக் காயமும் இல்லை. ஆனால், தலை பலமாக மோதியதில் மூளையில் அடிபட்டு, கோமா நிலைக்குப் போயிட்டிருக்கேன். கண் விழிச்சுப் பார்த்தப்போ 52 நாள்கள் ஓடிப்போயிருந்துச்சு. 53-வது நாள், மறுபடியும் புதிய ஜென்மம் எடுத்து பிறந்த மாதிரி இருந்துச்சு. அந்த நாள்களில் கணவர், உடன் பிறந்தவர்கள், மகள், மாமியார், மாமனார் என எல்லோரும் என்னை ஒரு குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டிருக்காங்க. அதுவே எனக்கு வருத்தமாக இருந்துச்சு. தொடர்ந்து என்னைப் பரிதாபமா பார்க்கிறதும் பச்சாதாபம் காட்டறதும் சுத்தமாப் பிடிக்கலை. 'நான் நல்லா இருக்கேன். முன்னைவிட சிறப்பா இயங்குவேன்’ எனக்கு நானே பூஸ்ட் பண்ணிக்கிட்டேன். அதுதான் மருந்து, மாத்திரைகள், பிரெய்ன் எக்ஸர்சைஸ்களைவிட விரைவா என்னை குணமாக்கிச்சு. என்னை பழையபடி பரபரப்பாக்கிக்க முடிவெடுத்தேன். கோமாவிலிருந்து மீண்டு வீட்டுக்கு வந்த பதினெட்டாவது நாளில், என் கிராஃப்ட் வகுப்புகளையும், ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளையும் ஆரம்பிச்சுட்டேன்'' என்று வியக்கவைக்கிறார் சங்கரி. 

சங்கரி

''அய்யோ... எனக்கு சுகர் வந்திருச்சே, கால் மூட்டு தேய்ஞ்சுபோச்சே எனப் பலரும் கவலையில் மூழ்குவதைப் பார்த்திருக்கேன். ஆனால், எங்கிட்ட யாராச்சும், 'நீங்க கோமாவில் இருந்தீங்களாமே?’னு பரிதாபமாகக் கேட்டாலே பிடிக்காது. 'ரெண்டு மாசம் நல்லா ரெஸ்ட் எடுத்தேன்’னு சிரிச்சுக்கிட்டே அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வெச்சுடுவேன். உடம்பு சுமக்கும் நோயை, மனசிலும் சுமந்துட்டே இருந்தோம்னா, குணம் கிடைக்காது. 'இதெல்லாம் ஒரு நோயா? எல்லாம் கடந்து ஜம்முனு வந்துடலாம்'னு மனசுக்குள்ள சொல்லிட்டே இருங்க, சீக்கிரமே குணமாயிடுவீங்க!'' என்கிறார் இந்த புது மனுஷி சங்கரி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement