டீசல் இல்லாத அமரர் ஊர்திகள்! - அப்பாவின் உடலை எடுத்துச்செல்ல முடியாமல் தவிக்கும் இளைஞர்!


''என் அப்பா, நேத்து விபத்துல செத்துட்டாரு. கோயம்புத்தூர் ஜி.ஹெச்ல போஸ்ட் மார்ட்டம் பண்ணி, உடலை மார்ச்சுவரியில வெச்சிருக்காங்க. வீட்டுக்கு எடுத்துட்டுப் போகணும்னு ஆம்புலன்ஸுக்கு (அமரர் ஊர்தி) போன் பண்ணா, டீசல் இல்லைனு சொல்றாங்க. தனியார் வண்டி எடுத்துட்டுப்போற அளவுக்கு என்கிட்ட பணம் இல்லை'' என வறுமையும் சோகமுமாகப் பேசுகிறார்,
பரசுராமன்.

இலவச அமரர் ஊர்திகளுக்கு டீசல் நிரப்புவதற்கான நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த மூன்று நாள்களாக  டீசல் இல்லாததால், இலவச அமரர் ஊர்தி சேவை முடக்கப்பட்டுள்ளதாகவும், சடலங்களை எடுத்துச்செல்ல முடியாமல் தத்தளிப்பதாகவும் புகார் கிளம்ப, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்குப் புறப்பட்டோம்.

மார்ச்சுவரியின் பின்பக்கத்தில் ஐந்து அமரர் ஊர்திகள் நிறுத்தப்பட்டிருந்தன. டிரைவர்கள் இல்லாமல் நிறுத்தப்பட்டிருந்த அந்த அமரர் ஊர்திகளின் அருகில், சிலர் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர்தான், பரசுராமன். "என் அப்பா பேரு மணி. நேத்து பள்ளப்பாளையம் பக்கத்துல ஆக்ஸிடென்ட்ல சிக்கி இறந்துட்டாரு. எங்க சொந்த ஊர் திருவண்ணாமலை. நேத்து போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சிருச்சி. இன்னும் எங்க அப்பாவோட உடலை வீட்டுக்கு எடுத்துட்டுப்போக முடியலை. ஆம்புலன்ஸுக்கு ( அமரர் ஊர்தி) போன் பண்ணா, டீசல் இல்லை...  சாயங்காலம் ஆகும்னு சொல்றாங்க. எங்க காசுலயேகூட டீசல் போடுறோம் வாங்கன்னு சொன்னோம். ஆனா, அப்படியெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நாங்க ரொம்பக் கஷ்டப்படுற குடும்பம் ஆயிரக்கணக்கா செலவு பண்ணி, தனியார் வண்டி எடுக்க எங்ககிட்ட வசதி இல்லைங்க என்ன பண்றதுனே தெரியலை. செத்த பிறகும் எங்க அப்பாவை வறுமை துரத்துது என்று கலங்கினார்.

அமரர் ஊர்தி டிரைவர்கள் யாரும் இதைப் பற்றிப் பேச முன்வரவில்லை. தகவல் அறிந்த சிலரிடம் விசாரித்தோம், '' கோவையில் மொத்தம் 12 அமரர் ஊர்திகள் இருக்கின்றன. அதில் நான்கு மட்டுமே இப்போது இயங்குகின்றன. மற்றவைகள் டீசல் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று ஓர் அமரர் ஊர்தியில் நான்கு சடங்களை ஏற்றிச்செல்லும் அளவுக்கு நிலமை மோசமானது. தமிழ்நாடு முழுக்க இதுதான் நிலவரம். ஏதோ நிர்வாகத்தில் உள்ளவர்களுக்குள் பிரச்னையாம், அந்தச் சிக்கல் காரணமாக பணம் போடுவதில் தாமதமாகிறது. செத்த பிறகும் ஒரு மனிதனை சோதிக்கிறது இந்த உலகம்'' என்று நொந்துகொள்கிறார்கள்.

இதுதொடர்பாக மாநில செஞ்சிலுவைச் சங்க அமரர் ஊர்தி ஒருங்கிணைப்பாளர் ராஜேஷிடம் பேசினோம், " சார்... பணம் போடுறதுக்குதான் சார் பேங்க்ல நிக்கிறேன். எந்தப் பிரச்னையும் இல்லை சார். இன்னும் சில மணி நேரத்துல எல்லாம் சரியாகிடும். வேணும்னா, செல்ஃபி எடுத்துப் போடவா?'' என்று கேட்கிறார்.

என்னத்தைச் சொல்ல?

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!