வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (18/08/2017)

கடைசி தொடர்பு:16:37 (18/08/2017)

சிவகங்கையை அச்சுறுத்தும் டெங்கு காய்ச்சல்!

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இந்த டெங்கு புயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, காரைக்குடி, திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று காய்ச்சல் குணமடையாததால், இங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். காரைக்குடியில் சங்கராபுரம் ஊராட்சியில் பர்மா காலனி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு பாதித்தது. அங்குள்ள குப்பைகள் கழிவுநீர்களால் காய்ச்சல் பரவியது. பிறகு சுகாதாரத்துறை அங்கு முகாமிட்டுக் கட்டுப்பாட்டுக்குள் தற்போது கொண்டுவந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் மர்மக் காய்ச்சல் என்கிற பெயரில் அதிகமானவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசு டெங்கு காய்ச்சலுக்கு வைத்திருக்கும் மாற்றுப்பெயர்தான் மர்மக் காய்ச்சல் என்கிறார்கள் பொதுமக்கள்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள புதுவயல் பகுதியைச் சேர்ந்த சூரியா, வனஜா, அடுத்ததாக கண்டனூரைச் சேர்ந்த மாயாண்டி, காரைக்குடியைச் சேர்ந்த அசாருதீன், திருப்பத்தூர் அருகேயுள்ள திருவுடையார்பட்டியைச் சேர்ந்த முத்து, சோழபுரம் அருகேயுள்ள நாலுகோட்டையைச் சேர்ந்த கருப்பையா, இளையான்குடி அருகேயுள்ள சிங்கத்துரைப்பட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் ஆகியோர் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிசிக்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாததால் டெங்கு காய்ச்சல் என உறுதிபடுத்தப்பட்டு ரத்தப்பரிசோதனை முடிவுகளுடன் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இவர்களின் பட்டியலில் இளையான்குடியைச் சேர்ந்த இரண்டு வயது சிறுமி மரியம் 108 ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவப்பரிசோதனை அறிக்கையுடன் வந்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க