Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நரிக்குறவ மக்களுக்கான சிறப்பு குறை தீர்ப்பு முகாம்! - உடனடித் தீர்வு கிடைத்ததால் மகிழ்ச்சி

நரிக்குறவ மக்கள்

நெல்லையில் நரிக்குறவ மக்களுக்கான சிறப்புக் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், அவர்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தனர். 

நெல்லை பேட்டையில் நரிக்குறவர் காலனி உள்ளது. அந்தப்பகுதிக்கு சில வாரங்களுக்கு முன்பு சென்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மக்களிடம் சுகாதாரத்தை வலியுறுத்திப்பேசினார். அத்துடன், பள்ளி செல்லும் குழந்தைகளை அழைத்துப் பாராட்டியதுடன் அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். பள்ளி செல்லாமல் இருந்த குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்தார். அத்துடன், சிறுவர்களின் தோளில் கைபோட்டு சரளாமாகப் பேசிக் கொண்டிருந்ததால் அப்பகுதிக் குழந்தைகளும் பெற்றோரும் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

இந்த நிலையில், பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் சிறப்புக் குறை தீர்ப்புக் கூட்டத்துக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று ஏற்பாடு செய்தார். அப்போது அப்பகுதி மக்கள் தங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்பதையும் அடையாள அட்டை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு குறைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர். அவற்றை விசாரித்து உடனுக்குடன் அந்தக் குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தார். 

அதன்படி, பட்டா வழங்குவது, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, திருமண உதவி, மகப்பேறு உதவி போன்றவை குறித்த கோரிக்கைகள் அது தொடர்பான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அத்துடன், நரிக்குறவர் நல வாரியம் மூலம் அடையாள அட்டை வழங்குதல், கல்வி உதவித்தொகை வழங்குதல், இரு சக்கர வாகனம் ஓட்டுநர் உரிமத்துக்கான விண்ணப்பம் வழங்குதல், முதலமைச்சர் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுத்தல் போன்றவையும் நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய கலெக்டர் சந்தீப் நந்தூரி, ’அனைவரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக்கொண்டால் நோய்களில் இருந்து தப்ப முடியும். ஒவ்வொருவரின் சுத்தமும் மிகவும் அவசியம். டெங்கு நோய் வராமல் தடுக்க அதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகளின்படி செயல்பட வேண்டும். குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார். பின்னர் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில், பொது சுகாதாரம் மற்றும் கண் பரிசோதனை செய்யப்பட்டது. நரிக்குறவ மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தையும் ஆட்சியர் விநியோகித்தார். 

இந்த நிகழ்ச்சியில், உதவி ஆட்சியர் இளம் பகவத், நெல்லை கோட்டாட்சியர் மைதிலி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சத்திய நாராயணா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். தங்களுடைய குடியிருப்புக்கே கலெக்டரும் அதிகாரிகளும் நேரில் வந்து குறைகளைக் கேட்டு அவற்றை தீர்த்து வைத்ததால் நரிக்குறவர் இன மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement