வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (18/08/2017)

கடைசி தொடர்பு:17:06 (27/06/2018)

பாம்பன் பாலத்தைப் பதம் பார்த்த ரப்பர் சாலை! - 2 மாதத்தில் விரயமான 2.70 கோடி

ரண்டு கோடி செலவில் சீரமைக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் ரப்பர் சாலை (அன்னை இந்திரா காந்தி பாலம்) 2 மாதங்கள்கூட தாங்காமல்  வாகனங்களால் வாரிச் சுருட்டி எடுக்கப்பட்டதால் சேதமடைந்துபோனது.

பாம்பன் சாலை பால ரப்பர் சாலை

கடந்த 1974-ம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாம்பன் பாலம் அடிக்கல் நாட்டப்பட்டது. 19.26 கோடி செலவில் சுமார் 2.5 கி.மீ தூரம் நாட்டின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் வகையில் கடல்மேல் பாலம்கட்டத் திட்டமிடப்பட்டது.

பல்வேறு காரணங்களால் சுமார் 14 வருடங்களுக்குப் பின் 1988-ல் கட்டி முடிக்கப்பட்ட பாம்பன் பாலம் 'அன்னை இந்திரா காந்தி பாலம்' என பெயரிடப்பட்டு அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியால் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தி்ன் மையப் பகுதி கப்பல்கள் செல்லும் வகையில் இரும்பு இணைப்புகள் மூலம் பிணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வீசும் காற்றில் அதிக உப்புத் தன்மை இருப்பதால் இந்த இரும்பு இணைப்புகள் துருப்பிடித்து அவ்வப்போது சேதமடைந்துவிடும். இதனால் பாலத்தை வாகனங்கள் கடக்கும்போது அதிர்வு ஏற்படும். ஆனாலும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு அரசு பேருந்து ஒன்று கடலில் விழுந்து 8 பேர் பலியான சம்பவத்தைத் தவிர சொல்லிக் கொள்ளும்படியான விபத்துகள் நடந்ததில்லை.

இந்நிலையில் பாலத்தை சீர்படுத்த கடந்த ஆண்டு 18.56 கோடி செலவில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னரும் பாலத்தின் மேற்பகுதி மற்றும் இணைப்பு பகுதிகள் சேதமடைந்து வந்தன. இதைச் சீர்படுத்த 2.70 கோடி செலவில் வழுவழுப்பான ரப்பர் சாலை அமைக்கப்பட்டது.

 சுண்ணாம்பு, தார் மற்றும் குவாரி துகள்கள் கொண்டு அமைக்கப்பட்ட இந்த ரப்பர்  சாலையில் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளாவது வழக்கமாகிவிட்டது. ராமேஸ்வரம் வரும் சுற்றுலா வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், டூ வீலர்கள் என அனைத்து வகை வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கியுள்ளன. வெயில் மற்றும் மழை நேரங்களில் புதிதாகப் போடப்பட்ட ரப்பர் சாலை இளகிவிடுகிறது. இதனால் வேகத்தில் வரும் வாகனங்கள் தங்கள் வேகத்தைக் கட்டுப்படுத்த பிரேக் உபயோகித்தால் அவை முழுமையாக இயங்குவதில்லை. இதனால் எதிரில் செல்லும் வாகனங்கள் மீதோ தடுப்பு சுவர் மற்றும் விளக்கு கம்பங்கள் மீதோ மோதி விபத்தில் சிக்கும் நிலை நீடிக்கிறது.

 இந்நிலையில் கடந்த 2 நாள்களாகப் பெய்த மழை மற்றும் தொடர் விடுமுறையால் அதிக அளவில் பயணித்த வாகனங்களால் புதிதாகப் போடப்பட்ட ரப்பர் சாலை சேதமடைந்துள்ளது. அதிக வெப்பத்தால் உருகும் தன்மைகொண்ட இந்த ரப்பர் தார் சாலை வாகனங்களின் சக்கரங்களால் வாரிச் சுருட்டப்பட்டு பெயர்ந்துபோனதால் ஏற்கெனவே இருந்து வந்த சிமென்ட் சாலை வெளியே தெரிகிறது. 2.70 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்தப் புதிய சாலை 2 மாதங்கள்கூட தாங்கவில்லை. அந்தளவுக்குத் தரமாக அமைத்துள்ளனர் என வேதனைப் படுகின்றனர் பாம்பன் பகுதி பொதுமக்கள்.

 ஏற்கெனவே பாம்பன் பகுதியில் மணலால் கடலுக்கு அணை கட்டியிருந்தனர் மாநில அரசு அதிகாரிகள். இப்போது கடலுக்கு மேலே சுருட்டி எடுத்து செல்லப்படும் தார் (பாய்) ரோட்டை அமைத்துள்ளனர் மத்திய அரசு அதிகாரிகள்.