டீல் ஓகே... குஷியில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். முடிவுக்கு வந்த ஏழு மாத குழப்பம் #VikatanExclusive | ADMK merger : Seven month confusions came to an end

வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (18/08/2017)

கடைசி தொடர்பு:11:16 (19/08/2017)

டீல் ஓகே... குஷியில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ். முடிவுக்கு வந்த ஏழு மாத குழப்பம் #VikatanExclusive

எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம்,சசிகலா

அ.தி.மு.க-வில் ஏற்பட்ட ஏழு மாத அதிகாரப்போட்டிக்கு விரைவில் சுமுகத் தீர்வு எட்டப்படவுள்ளது. அ.தி.மு.க. அம்மா அணியினரும் புரட்சித் தலைவி அம்மா அணியினரும் கைகுலுக்கும் படலம் விரைவில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதல்வரானார் ஓ.பன்னீர்செல்வம். அடுத்து நடந்த பொதுக்குழுவில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு சசிகலாவை முதல்வராக்க ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். பிப்ரவரி 7-ம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தின் கார், ஜெயலலிதா சமாதி முன்பு நிறுத்தப்பட்டது. காரை விட்டு கீழே இறங்கிய ஓ.பன்னீர்செல்வம், சமாதி முன்பு 40 நிமிடங்கள் அமைதியாக தியானம் செய்தார். ஓ.பன்னீர்செல்வம், சமாதிக்குச் சென்ற தகவலையடுத்து அங்கு அ.திமு.க-வினர் திரண்டனர். மீடியாக்கள் முன்பு, சசிகலாவின் நிர்பந்தத்தின்பேரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாக அமைதியைக் கலைத்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு அ.தி.மு.க-வில் புயல் வீசத் தொடங்கியது.

அ.தி.மு.க-வில் சசிகலாவின் தலைமையை ஏற்கவிரும்பாதவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தொடங்கினர். 12 எம்எல்ஏ-க்கள், 12 எம்.பி-க்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்தது. அடுத்து, அவைத் தலைவர் மதுசூதனன் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன், பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், ஜே.சி.டி.பிரபாகர் என ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இது, சசிகலா தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதல்வராகி விடலாம் என்ற ஆசையில் வி.கே.சசிகலா அ.தி.மு.க-வின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆட்சி அமைக்க ஆளுநரிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தனர் சசிகலா தரப்பினர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். ஆட்சி அமைக்க ஓ.பன்னீர்செல்வமும், சசிகலா தரப்பும் முட்டி மோதின. கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா தரப்பால் அ.தி.மு.க எம்எல்ஏ-க்கள் தங்கவைக்கப்பட்டனர். அப்போது, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அறிவித்தார் சசிகலா. அதற்கு முன்பு கட்சியை வழிநடத்த டி.டி.வி.தினகரனுக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கினார்.

 ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் கட்சியை தினகரனிடம் கொடுத்துவிட்டு சிறைக்குச் சென்றார் சசிகலா. அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பிரதமர் மோடியின் நட்பை பயன்படுத்தி சசிகலா தரப்புக்கு நெருக்கடியை கொடுத்து வந்தனர்.
இந்த சமயத்தில் ஓ.பன்னீர்செல்வம், 'சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என்று இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு தர்மயுத்தத்தை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தொடங்கினர்.

 ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு சென்னை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சசிகலா தரப்பில் தினகரனும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மதுசூதனனும் போட்டியிட்டனர். இரட்டை இலைச் சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் போட்டியிட்டதால் தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்டது. அதோடு ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரட்சித் தலைவி அம்மா அணி என்றும் சசிகலாவுக்கு அம்மா அணி என்றும் பெயர் சூட்டப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தொண்டர்களையும் மக்களையும் சந்திக்க தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை ஓ.பன்னீர்செல்வம் மேற்கொண்டார். இந்தச் சமயத்தில் மத்திய அரசின் கெடுபிடியால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து ஓரம் கட்ட முடிவு செய்தார். மேலும், முதல்வரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சசிகலாவைச் சிறையில் சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையிலிருந்த சசிகலாவின் ஆதரவாளர்கள் மட்டும் சிறையில் சசிகலாவைச் சந்தித்துவந்தனர். இந்த சமயத்தில் இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் டெல்லி போலீஸாரால் தினகரன் கைதுசெய்யப்பட்டார்.

சசிகலா குடும்பத்தில் சசிகலாவும் தினகரனும் சிறைக்குச் சென்றுவிட்டதால் திவாகரனின் தலையீடு அதிகமானது. சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து விலக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்தனர். அதன்பிறகே பா.ஜ.க-வின் தலையீட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைய பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் மீண்டும் இரண்டு அணிகளும் வழக்கம்போல மோதிக்கொண்டன.

ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்த ஆறுக்குட்டி எம்எல்ஏ. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்தார். இது, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு சரிவை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த தினகரன், இரண்டு அணிகளுக்கும் 60 நாள் காலக்கெடு விதித்தார். ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதியுடன் தினகரன் விதித்த காலக்கெடு முடிந்தது. ஆனால், இரண்டு அணிகளும்  இணையவில்லை. அடுத்து, அதிரடியைத் தொடங்கினார் தினகரன்.

தன்னுடைய ஆதரவாளர்களுக்குக் கட்சிப் பதவியை வழங்கினார். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உடனடியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டது. கட்சியில் செல்வாக்கை நிரூபிக்க மேலூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கூட்டத்தை நடத்திக் காட்டினார் தினகரன். அதற்குப் பதிலடியாக ஓ.பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையான ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதோடு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை அரசு நினைவிடமாக மாற்றப்படும் எனவும் அறிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம்


ஓ.பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய கிரீன் சிக்னல் இரண்டு அணிகளிலிருந்தும் கொடுக்கப்பட்டது. இதையொட்டி சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் அம்மா பழனியம்மாவை சந்திக்க அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று சென்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தனித் தனியாக ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பிறகு இரண்டு அணிகள் இணைவது குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தினகரன் ஆதரவாளர்களும் ஆலோசனை நடத்திவருகின்றனர். மூன்று அணிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதை அ.தி.மு.க. தொண்டர்களும் அரசியல் நோக்கர்களும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் விரைவில் கைகுலுக்க உள்ளனர். 

ஓ.பன்னீர்செல்வம் அணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், எங்களது தர்மயுத்தத்தின் இரண்டு முக்கிய கோரிக்கையை நிறைவேற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுதொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இரண்டு அணிகள் இணைந்தால் மட்டுமே முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்க முடியும். இரட்டை இலைச் சின்னத்தோடு உள்ளாட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளோம்" என்றார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்றவே இரண்டு அணிகளை ஒன்றிணைவதற்கு நடவடிக்கை எடுத்துவருகிறோம். அதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் இணைவதற்கு அனைவரும் சம்மதித்துள்ளனர். இதனால் அணிகள் இணைவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும். கட்சியை வழிநடத்தும் குழு அமைக்கப்படவுள்ளது. அந்தக் குழுவில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் இடம்பெறுவர். அதன்பிறகு அமைச்சரவையில் சில மாற்றங்களும் செய்யப்படவுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளவர்களுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களும் சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எடுக்கும் முடிவுக்குப்பிறகு எங்களது அடுத்த அதிரடி தொடங்கும். இதுதொடர்பாக பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் தினகரன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார் என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள்.


டிரெண்டிங் @ விகடன்