“விவசாயப் பாடப்பிரிவுக்கு ஆசிரியர் இல்லையாம்... வேற படிக்கணுமாம்!” - வேதனையில் அச்சிரப்பாக்கம் பள்ளி மாணவர்கள் | No teacher to Agriculture Department in Govt School

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (18/08/2017)

கடைசி தொடர்பு:20:24 (18/08/2017)

“விவசாயப் பாடப்பிரிவுக்கு ஆசிரியர் இல்லையாம்... வேற படிக்கணுமாம்!” - வேதனையில் அச்சிரப்பாக்கம் பள்ளி மாணவர்கள்

விவசாயம்... இந்தியாவின் ஜீவநாடி! ஆனால், விவசாயத்தையும் விவசாயிகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அலட்சியப்படுத்துவது தினசரி நிகழ்வாகி வருகிறது. அதற்கான மற்றொரு சம்பவம்தான் இது. விவசாயப் பாடப்பிரிவுக்கான ஆசிரியர் ஓய்வுபெற்றதால், விவசாயப் பாடத்தையே தூக்கி வீசிவிட்டது ஓர் அரசுப் பள்ளி. அந்தப் பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்கள் கொதிப்புடன் போராடி வருகிறார்கள்.

அச்சிரப்பாக்கம் பள்ளி

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ளது 'மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளி'. 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1978-ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, விவசாயத்துக்கான பாடப்பிரிவு தொடங்கப்பட்டது. விவசாயத்தை வாழ்வாதாரமாககொண்ட கிராமப் பிள்ளைகள்தான் இங்கே படிக்கிறார்கள். இந்நிலையில் விவசாயப் பாடப்பிரிவுக்காக இருந்த ஒரே ஆசிரியரும் கடந்த வருடம் ஓய்வு பெற்றுவிட்டா். இதனால், மேல்நிலை முதலாம் ஆண்டு விவசாயப் பாடப்பிரிவுக்கான சேர்க்ககையை நிறுத்திவிட்டார்கள். இரண்டாம் ஆண்டு படித்துவந்த மாணவர்களும் சென்ற வருடம் கல்வி முடித்து சென்றுவிட, இப்போது அந்தப் பாடப்பிரிவே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது.

சக்திவேல் - மாணவர்கள்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சட்டப் பஞ்சாயத்து மாவட்ட துணை அமைப்பாளர் சக்திவேல், “இந்தப் பள்ளியில் அக்ரி, என்ஜினியரிங், மெக்கானிக் போன்ற தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தன. இந்த மாவட்டத்தில் விவசாயப் பாடப்பிரிவு இருக்கும் ஐந்து பள்ளிகளில் இந்தப் பள்ளியும் ஒன்று. ஆனால், இப்போது அது இல்லை என்றாகிவிட்டது. இதேபோல, உத்திரமேரூர் பள்ளியிலும் அடுத்த ஆண்டு விவசாயப் பாடப்பிரிவுக்கான ஆசிரியர் ஓய்வுபெறுகிறார். அங்கும் மூடுவிழா நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். விவசாயப் பாடப்பிரிவில் சேரவரும் மாணவர்களை, ‘வேறு பாடப்பிரிவில் சேர்ந்து படியுங்கள்’ என வலியுறுத்துகிறார்கள். மாணவர்களும் வேறு வழியின்றி வேறு பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கிறார்கள். இதனால், வருங்காலத்தில் விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாமல் போய்விடும். 

இது, பொதுமக்களிடம்  கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தலைமை ஆசிரியரை அணுகி முறையிட்டதற்கு முறையான பதில் கொடுக்கவில்லை. ஆசிரியர் இல்லை என்று பல பள்ளிகளில் விவசாயப் பாடப்பிரிவை நீக்கிவருகிறார்கள். ஆனால், 67 பள்ளிகளுக்குப் புதிதாக தொழிற்கல்வி கொடுக்கப்போகிறோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கிறார்கள். ஒரு பாடப்பிரிவுக்கான ஆசிரியர் ஓய்வுபெற்றாலோ, பணிமாறுதல் அடைந்தாலோ அந்தப் பாடப்பிரிவை நீக்கும் போக்கையே பள்ளி கல்வித்துறை கையாண்டு வருகிறது. விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இந்தக் கல்வியாண்டிலேயே விவசாயப் பாடப்பிரிவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை. இது தொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை'' என்கிறார் ஆதங்கத்துடன்.

அச்சிரப்பாக்கம் மாணவர்கள் - விவசாயம்

“விவசாயம் மீது ஆர்வம் உள்ள மாணவர்களும் விவசாயத்தை பின்னணியாககொண்ட மாணவர்களும் இந்தப் பாடப்பிரிவில் பயில விரும்புவார்கள். அவர்களை கணிதம், அறிவியல் போன்ற கடினமானப் பாடங்களை கட்டாயப்படுத்தி படிக்கவைக்கும்போது, தேர்வில் தோல்வி அடைகிறார்கள். இதனால், அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாதாகிறது. அரசாங்கப் பள்ளிகளில் மட்டுமே விவசாயப் பாடப்பிரிவு உள்ளது. எனவே, விவசாயம் படிக்க ஆர்வமுள்ள மாணவர்களை, அந்தப் பாடப்பரிவிலேயே படிக்கவைப்பதுதான் சரியானது” என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கிறார்கள். 

பள்ளி மாணவர்கள்

“விவசாயம் படிக்கும் ஆசையோடுதான் இந்த ஸ்கூலுக்கு வந்தோம். ஆனால், ஆசிரியர் இல்லைன்னு வேற பாடப்பிரிவை படிக்கச் சொல்றாங்க. பக்கத்துல இருக்குற வேற ஸ்கூல்லேயும் விவசாயப் பாடம் இல்லே. வேற வழி தெரியாமல் கொடுத்த பாடப்பிரிவில் படிச்சுட்டிருக்கோம்“ என வேதனையான குரலில் சொல்கிறார்கள் மாணவர்கள்.

பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசன், ''மற்ற பாடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வுசெய்வதுபோல, தொழிற்கல்வி பாடத்துக்கு தேர்வு செய்வதில்லை. அதனால், அந்தப் பாடப்பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாத சூழ்நிலை. இந்தப் பள்ளியில் விவசாய பாடப்பிரிவுக்கு புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டுமென்றால், அரசிடம் அனுமதி பெறவேண்டும். அனுமதி இல்லாவிட்டால் அரசு தேர்வு எழுத முடியாது. நாங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் தெரிவித்திருக்கிறறோம். 'இது அரசாங்கம் எடுத்த முடிவு' என்று சொல்லிவிட்டார்கள். நீங்களே சொல்லுங்க, நாங்க என்ன செய்ய முடியும்?” என்கிறார் பரிதாபமாக.

இதுகுறித்து தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசினோம். “காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலரைப் பள்ளிக்கு நேரில் ஆய்வுசெய்ய அனுப்புகிறேன். விரைவில் விவசாயப் பாடப்பிரிவை  கொண்டுவர நடவடிக்கை எடுக்கச் சொல்கிறேன்” என்றார்.

அடுத்த சில தினங்களில், காஞ்சிபுரம் முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வியை தொடர்புகொண்டு கேட்டதற்கு, “அந்தப் பள்ளியில் மீண்டும் விவசாயப் பாடப்பிரிவை கொண்டுவருவதற்காக தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளோம். இதுமாதிரி நிறைய பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத பாடப்பிரிவை மீண்டும் கொண்டுவர நடவடிக்கை எடுப்பதாக சொல்லியிருக்கிறார்கள். விரைவில் அறிவிப்பு வரலாம்” என்கிறார்.

இது ஒரு குறிபிட்ட மாணவர்களின் பிரச்னை மட்டுமல்ல; நாளைய தலைமுறைக்கே உணவு அளிக்கும் விஷயம் என்பதை அரசு உணர வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்