வெளியிடப்பட்ட நேரம்: 21:44 (18/08/2017)

கடைசி தொடர்பு:21:44 (18/08/2017)

“இது சென்னை அல்ல, மதராஸ்!” - எழுத்தாளர் பாக்கியம் சங்கர் #ChennaiDay

சென்னை தினம் கொண்டாப்படும் இந்த நாளில், ‘நான் வடசென்னைக்காரன்' என்கிற புத்தகத்தின் ஆசிரியரும், தமிழ் சினிமா கதை-வசன ஆசிரியருமான எழுத்தாளர் பாக்கியம் சங்கர் பகிர்ந்துகொண்ட சென்னை குறித்த நினைவுகள்..

“இது மதுரசேனைப் பட்டினம்; சென்னப்ப நாயக்கரின் பெயரால் இன்று அழைக்கப்படும் சென்னை அல்ல. மதராஸ் என்பதே சரி. மதராஸ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்த ஊரை, பிளாக் டவுன் - ஒயிட் டவுன் எனப் பிரிக்கப்பட்டது. அதில் உழைக்கும் தொழில்கள் உள்ள பகுதிகள் பிளாக் டவுனான வடசென்னை பக்கம் தள்ளப்பட்டது. முன்பெல்லாம் திருமண ஊர்வலங்களில் கொம்பு சுற்றிக்கொண்டு சிலர் செல்வார்கள். அவர்களுக்குப் பின்னர் வாள் சுழற்றிக்கொண்டு போவார்கள். பின்னர் டைவ் அடித்து உடல் சாகசம் செய்துகொண்டு சிலர் போவார்கள். அதன் பின்னர் சுருள் வாள் வீசிக்கொண்டு சிலர் போவார்கள். அதற்குப் பின்னரே மண வீட்டார் செல்வார்கள். அந்த மதராஸ் இன்று இல்லை. 

சென்னையின் அடையாளம் எனப் பார்த்தால் முதலில் வருவது ‘ராயபுரம் ரயில்வே ஸ்டேஷன்'. தென்னிந்தியாவில் முதல்முதலாகத் தொடங்கப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் அது. இன்று பெரிய அளவில் வளர்ச்சியடைந்திருக்கவேண்டிய அது, அப்படியே நின்றுவிட்டது. ஆனாலும், சென்னையின் இன்றைய நகரமைப்பின் முக்கியமான ஒன்றாக இருக்கக்கூடிய நகர ரயில் போக்குவரத்தின் முன்னோடி ஸ்டேஷன் அதுதான்.

இதேபோல் மற்றொன்று, சென்னையின் துறைமுகம். எங்களுக்கு அங்கு செல்வதே ஒரு கனவுதான். அன்றெல்லாம் அவ்வளவு பரபரப்பாக இருக்கும் அந்தத் துறைமுகம். உள்ளுக்குள் கப்பல்களின் சங்கு சத்தமும், எதிலாவது எட்டிப்பார்க்கும்போது கப்பல்களிலிருந்து இறக்கப்படும் விதவிதமான சரக்குகளும் எங்களுக்கு உள்ளே சென்று பார்க்கவேண்டும் என்கிற கிளர்ச்சியை அதிகரிக்கும். இன்று அந்தப் பரபரப்பு எங்கு போனதென்று தெரியவில்லை. வாழ்ந்து கெட்ட வீட்டைப்போல இருக்கிறது. அதேபோல ஜார்ஜ் டவுன் சந்தை, சென்னை உயர் நீதிமன்றக் கட்டடம், பர்மா பஜார். 

சைவ சிந்தாந்த நூலகம். இங்குதான் ஏழு வயதில் வள்ளலார் ஆன்மிகம் குறித்துப் பேசினார். அதனால்தான் வள்ளலார் நகரே உருவானது. மற்றொரு பக்கம் இஸ்லாமிய மக்களுடன் நெருக்கமாக இருந்த சூஃபி தொண்டையார் இருந்தார். அவரின் பெயரில்தான் இன்று தண்டையார்பேட்டை என்று அழைக்கப்படும் `தொண்டையார் பேட்டை' உருவானது. வள்ளலாரின் கால்கள் நடந்த வீதிதான் இன்று தங்கசாலை என்று அழைக்கப்படும் மின்ட் தெரு. ஏழுகிணறில் இருந்து திருவொற்றியூருக்கு அவர் தினமும் நடந்தே வருவார். இப்படி ஓர் ஆன்மிக முகமும் அன்றைய சென்னைக்கு இருந்தது. பாம்பன் சாமிகள் இங்குதான் இருந்துள்ளார். பிறகுதான் திருவான்மியூர் போய் செட்டில் ஆகிறார். 

அதேபோல் வடசென்னையில் உள்ள சமாதிகள், சென்னையின் வரலாற்றுக்கு மட்டுமல்ல... தமிழக வரலாற்றுக்கும் சான்றுகளாக உள்ளன. ஆசியாவின் மிகப்பெரிய கல்லறையான வண்ணாரப்பேட்டை கல்லறையில் தாளமுத்து-நடராசன் என்கிற இரண்டு தமிழ்ப் போராளிகளின் சமாதி உள்ளது. இது ஒரு பெருமைமிகு அடையாளம். ஓட்டேரி சுடுகாட்டில் ரெட்டைமலை சீனிவாசனின் கல்லறை அனாமத்தாக உள்ளது. காசிமேடு சுடுகாட்டில் எளிய மக்களுக்காக உழைத்த ஜீவாவின் சமாதி இருக்கிறது. ஆனால், இவை உரிய பராமரிப்பு இன்றி இருக்கின்றன என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

துறைமுகத்தையொட்டிய பகுதியில் பர்மா பஜார் உருவாகியது. அதுவும் முக்கியமான ஓர் அடையாளம். அதேபோல் சௌகார்பேட்டைக்குள் இருக்கும் சைனா பஜார். சென்னையின் இன்னொரு முக்கிய அடையாளம் சௌகார்பேட்டை. அது சென்னையாக கணக்கில்கொள்ளக் கூடாது. அது மார்வாடிகளின் உலகம். நாம் அதைச் சென்னையாக நம்பவேண்டியதில்லை. 

வடசென்னை குறித்து சொல்லப்போனால், அதன் விளையாட்டுகள் மிகவும் முக்கியம். உழைக்கும் மக்களின் நகரமான அதில் கில்லி, கோலி, பம்பரம், தாயபாஸ் எனத் தொடங்கி, பெரியவர்கள் கம்பு சுற்றுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியவை இருந்தன. இன்று சிலம்பாட்டம்  என்பதே சென்னைக்கு சம்பந்தமில்லாமல் போய்விட்டது. ஆனால் இங்கு அவ்வளவு சிலம்பாட்டக்காரர்கள் இருந்தனர். ஒரு துறைமுக நகரம், தலைநகரம், பெருநகரம் என்றெல்லாம் இருந்தாலும் சென்னை தனக்கென சில பண்பாட்டு அலகுகளைக்கொண்டே இருந்து வந்தது. குறத்தியாறும், கூவம் ஆறும் செழித்து ஓடிய நகரம், இன்று அவற்றைச் சாக்கடைகளாக மாற்றிவைத்துள்ளது. `சென்னை' என்கிற பச்சையான நகரம் இன்று கான்கிரீட் காடுகளாக மாறியுள்ளது. இருந்தாலும் வந்தாரை வாழவைத்தபடிதான் உள்ளது. சென்னைவாசியாக மாறிவிட்டவர்கள், முடிந்தவரை சென்னையைப் பசுமையாக்கும் கடமையைச் செய்யுங்கள்." என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்