'இன்று இணைப்பு இல்லை'... ஓ.பி.எஸ் அணி அறிவிப்பு!: அ.தி.மு.க அணிகள் இணைப்பு #LiveUpdate

நேரம்: 9.45: "அணிகள் இணைவது குறித்து அறிவிப்பு இன்று வெளியாகாது. பன்னீர்செல்வத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று இல்லை. செய்தியாளர்கள் சந்திப்பு நாளை நடைபெறுவதாக இருந்தால் அறிவிக்கப்படும்" என்று ஓ.பி.எஸ் அணியின் கோவை சத்யா கூறியுள்ளார்.

நேரம் 9.12: பலத்த மழை காரணமாக மெரினாவில் கூடியிருந்த அ.தி.மு.க தொண்டர்கள், எம்.எல்.ஏ-க்கள் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர். அதேபோல, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் குவிந்திருந்த தொண்டர்களும் கலைந்து செல்ல தொடங்கியுள்ளனர்.

மெரினா

நேரம் 9.00: பன்னீர்செல்வம் தரப்பில் நடந்த ஆலோசனை நிறைவு. விரைவில் அவர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

நேரம் 8.45:  முதல்வர் வீட்டில் நடந்த ஆலோசனையை முடித்துவிட்டு, அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வெல்லமண்டி நடராஜன், அன்பழகன் ஆகியோர் புறப்பட்டனர்.

நேரம் 8.30: மெரினா கடற்கரையில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஜெயலலிதா சமாதிக்கு இரண்டு பூங்கொத்துகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பூங்கொத்து

நேரம் 8.10:  பன்னீர்செல்வம் அணியினர் மூன்று நேரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆலோசனையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பில் அமைச்சரவையில் இரண்டு துறைகள் வழங்குவதற்கு தயாராக உள்ள நிலையில், மூன்று துறைகள் வேண்டும் என்று கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. 

நேரம் 7.45: பன்னீர்செல்வம் அணிக்கு நிதி மற்றும் வீட்டுவசதி துறை வழங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்து. 

நேரம் 7.15: மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வருகை தர தொடங்கியுள்ளனர்.

நேரம் 7.12: திருவாரூரில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் கலந்துகொள்ள உள்ளனர் என்று கூறப்படுகிறது.

 

நேரம் 7.07:  பன்னீர்செல்வம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்

நேரம் 6.45: * அ.தி.மு.க-வின் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு செல்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

* அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

* மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சமாதி


ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு அ.தி.மு.க மூன்று அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க-விலிருந்து பிரிந்துசென்ற ஓ.பன்னீர்செல்வம் அணியை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில் அணியில் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும்; ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.

இதனிடையே, துணைப் பொதுச்செயலாளர் தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அதேபோல், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார்.

 

 

இதனால், இரு அணிகள் விரைவில் இணைய உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பன்னீர்செல்வத்தை இன்று காலை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி சந்தித்தனர். இதையடுத்து, முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து, பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதேபோல, க்ரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் திடீரென்று அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையம் சென்ற அமைச்சர்களுக்கு திடீர் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

விரைவில் இரு அணிகளும் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!