‘மத்தியில் இருவர்... மாநிலத்தில் இருவர்!’ அ.தி.மு.க. அணிகள் இணைப்பின் பின்னணி ஆதாயங்கள் #AIADMKMerger

ஓ.பி.எஸ்

 

“6 மாத காலத்துக்குப் பிறகு அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளும் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இணைப்புக்குப் பிறகான நடவடிக்கைகள் குறித்துதான் இரண்டு அணிகளிலும் இப்போது ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இழுபறியாகப் போய்க்கொண்டிருந்த இணைப்பு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்ததன் காரணம்... 'அ.தி.மு.க-வின் அதிகார மையமாக தினகரன் எப்படியும் வந்துவிடவேண்டும்' என்று ஒட்டுமொத்த மன்னார்குடி உறவுகளும் களத்தில் இறங்கியதுதான். தினகரன் சிறையில் இருக்கும் போதே, இணைப்பு வைபவத்தை நடத்திவிடலாம் என்று ஓ.பி.எஸ் அணிக்கும் ஈ.பி.எஸ் அணிக்கும் மத்தியஸ்தம் செய்தவர்கள் ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.தினகரன்

ஆனால், இரண்டு தரப்பிலுமே அதை கண்டுகொள்ளவில்லையாம். 'தினகரன், சிறையில் இருந்து மீண்டு வந்தாலும் அவர் பெரிதாகக் கட்சி விவகாரங்களில் தலையிடப் போவதில்லை' என்று இரண்டு தரப்பிலும் உறுதியாக நம்பியுள்ளார்கள். திகார் சிறையிலிருந்து திரும்பியவுடனே, கட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வேலையில் தினகரன் தரப்பு இறங்கியதுமே இரண்டு அணிகளும் கொஞ்சம் ஆட்டம் கண்டன. ஒரு மாதத்துக்கு முன்பே எடப்பாடி அணியைச் சேர்ந்த 5 அமைச்சர்கள் சென்னையின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது “நீங்கள் இணைப்பை காலதாமதம் செய்ய வேண்டாம். தினகரன் தரப்பு கட்சியைக் கைப்பற்றும் வேலையில் தீவிரமாக உள்ளது. முதலில் கட்சியை நம் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும்” என்று ஆலோசனை சொல்லியுள்ளார்கள்.

ஆனால், பன்னீர்செல்வம் தரப்பிலோ, “முதல்வர் பதவி வேண்டும். கட்சி நிர்வாகிகள் பட்டியலிலும் எங்கள் அணிக்கு முக்கியத்துவம் தரவேண்டும். சசிகலா குடும்பத்தை நீக்கி அறிவிப்பு வெளியிட வேண்டும்” என்று பிடிவாதத்துடன் கூறிவிட்டதால், அணிகள் இணைப்பு தள்ளிப்போனது. ஆனால், அதற்குள் தினகரனுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ-க்கள் படையெடுக்க, இரண்டு அணிகளும் இணைந்தால் மட்டுமே தினகரனின் எழுச்சிக்கு முட்டுக்கட்டை போடமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. மேலும், டெல்லியிலிருந்து பன்னீர்செல்வம் அணிக்கும், பழனிசாமி அணிக்கும் வந்த உத்தரவில், “இருவரும் இணைந்தால் மட்டுமே மத்திய அரசின் உதவி உங்களுக்கு கிடைக்கும்” என்று தெளிவாகச் சொல்லியுள்ளார்கள். கடந்த வாரம் டெல்லியில், பிரதமர் மோடியை பன்னீர்செல்வமும், பழனிசாமியும் தனித்தனியாகச் சந்தித்தார்கள். அப்போது இருவரிடமுமே பிரதமர், “நீங்கள் இணையாமல் இருப்பது சசிகலா குடும்பத்துக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். நாங்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்துதர தயாராக உள்ளோம். இணைப்புக்கான வேலையை இந்த மாதத்துக்குள் முடித்துவிடுங்கள்” என்று கடுமையாகவே சொல்லியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மற்றும் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா ஆகியவற்றுக்காக எடப்பாடி தரப்பில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 'இரண்டு அணிகளும் இணைந்தபிறகு இந்த விழாவுக்கு நான் தேதி கொடுக்கின்றேன்' என்று சொல்லியுள்ளார் மோடி. இந்த நெருக்கடியால், பன்னீர்செல்வம் தரப்புடன் இணைந்தே ஆகவேண்டிய கட்டாயம் எடப்பாடி அணிக்கு ஏற்பட்டது. இரண்டு அணிகளுமே பிரதமரிடம் வைத்த மற்றொரு கோரிக்கை... 'பி.ஜே.பி கூட்டணியில், தங்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும்' என்பதுதான். அதற்குப் பதிலளித்துப் பேசிய பிரதமர், ''இரண்டு அணிகளும் இணைந்து, கட்சியின் சின்னத்தை முதலில் மீட்டு வாருங்கள். அதன்பிறகு பார்க்கலாம்'' என்று கூறியுள்ளார். இதன்பிறகே எடப்பாடி அணி விறுவிறுப்பாக இணைப்பு பணியில் மும்முரம் காட்டியது. 'நாள்கள் கடப்பது ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லதல்ல' என சீனியர் சிலர் சொன்னதால், உடனடியாக ஓ.பி.எஸ் அணியை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது.

இதையடுத்தே, ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையான 'ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையையும் நிறைவேற்றும் விதமாக 'விசாரணைக் கமிஷன்' அமைத்து உத்தரவிட்டார் முதல்வர் எடப்பாடி. இரு அணிகளும் நல்லதொரு முடிவெடுத்தபின் மீண்டும் டெல்லி மேலிடத்தை தொடர்புகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக ஒருங்கிணைந்த அ.தி.மு.க மத்திய பி.ஜே.பி அரசுக்கு ஆதரவு அளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்படி அ.தி.மு.க மற்றும் பி.ஜே.பி கூட்டணி உருவானபின் இரு அணிகளின் இணைப்புக்குப் பலனாக ஓ.பி.எஸ் தரப்பிலிருந்து மாஃபா பாண்டியராஜன் மற்றும் செம்மலை ஆகியோருக்கு தமிழக அமைச்சரவையில் பதவி வழங்குவதாகவும் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது. 'மத்திய அரசிலும் மைத்ரேயன் மற்றும் வைத்திலிங்கத்துக்கு அமைச்சர் பதவி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது' என்கிறார்கள்.

இணைப்புக்கு பின், இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகலாம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!