வெளியிடப்பட்ட நேரம்: 19:23 (18/08/2017)

கடைசி தொடர்பு:19:23 (18/08/2017)

“விசாரணைக் கமிஷன் வெறும் கண் துடைப்பு நாடகம்” - நடிகர் ஆனந்தராஜ் #AIADMKMerger

நடிகர் ஆனந்தராஜ்

“இன்றுவரை, நான் அ.தி.மு.க-வுக்கும், ஜெயலலிதாவுக்கும் நல்ல விசுவாசியாகவே இருந்துவருகிறேன். அவரிடம் இருந்து எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல் கட்சிகாகப் பாடுபட்டவன்'' என்கிறார் நடிகர் ஆனந்தராஜ். இவர், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அந்தக் கட்சியில் இணைந்தவர். அதில் அவர் இணைந்ததுமுதல் தேர்தல் நேரத்தில் பல மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்தார். ஜெயலலிதா இறந்த பிறகு, சசிகலாவைப் பொதுச் செயலாளராகக் கட்சி நிர்வாகிகள் தேர்தெடுத்தபோது அவர் கட்சியில் இருந்து விலகினார். இதனையடுத்து, அவருக்குக் கொலை மிரட்டல் வரத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து சசிகலாவைத் தமிழக முதல்வராக்கும் சூழல் ஏற்படவிருந்த நிலையில், ஆனந்தராஜ் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவித்தார். 

அப்போது அவரைச் சந்தித்துப் பேசியபோது, “மக்களுக்கு ஜெயலலிதாவின் மரணம் குறித்து தெளிவான ஒரு விளக்கத்தையோ அல்லது பதிலையோ கட்சி நிர்வாகிகளோ, அரசாங்கமோ, மருத்துவமனையோ அளிக்கவில்லை. அவர் மரணம் குறித்து மக்களும், தொண்டர்களும் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவமனை உரிய பதில் தர வேண்டும். அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை ஓர் ஆலயமாக அறிவித்து... அதில், தினசரி பூஜைகள் செய்ய வேண்டும்'' என்று கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், “ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்; போயஸ் கார்டன் வீடு அரசு நினைவிடமாக்கப்படும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதுதொடர்பாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வரும் வேளையில், ஏற்கெனவே போயஸ் கார்டன் வீட்டை ஓர் ஆலயமாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த ஆனந்தராஜை தொடர்புகொண்டு பேசினோம்.

“நான் முன்பு சொன்னதுபோல் கட்சியில் ஒவ்வொன்றாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் விசாரணைக் கமிஷன், மக்களுக்கு மிகப்பெரிய கண்துடைப்பாகத்தான் இருக்கும். இதன்மூலம் யாரும் எதையும் புதிதாகத் தெரிந்துகொள்ளப் போவதில்லை. அ.தி.மு.க-வில் இருக்கும் அணிகள் தங்களுடைய பதவியைக் காப்பாற்றிக்கொள்ளவே மாறிமாறித் திட்டம் தீட்டுகின்றன. ‘பன்னீர்செல்வம் கேட்டதற்காக விசாரணைக் கமிஷன் அமைக்கவில்லை’ எனச் சொல்லும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதுகுறித்து விசாரிக்க நினைத்திருந்தால் அதை முன்பே செய்திருக்க வேண்டும். அதோடு, ஓய்வுபெற்ற நீதிபதியை வைத்து இதை விசாரிப்பதில் என்ன நோக்கம் இருக்கிறது என்று புரியவில்லை. அப்படி விசாரணை அமைக்கப்பட்ட எந்த வழக்குகளும் முடிவுக்கு வந்ததுமில்லை.

உண்மையில், விசாரணை நடத்த நினைத்தால்... மக்களுக்கு இருக்கும் சந்தேகங்களைத் தீர்க்க முயற்சி எடுத்திருக்க வேண்டும். கட்சியின் தொண்டனாக இருந்த எனக்கே 100 கேள்விகள் எழுகின்றன என்கிறபோது, மக்களிடம் லட்சக்கணக்கான கேள்விகள் இருக்கும். அவை அனைத்துக்கும் பதில் கொடுத்தால் மட்டுமே இந்த விசாரணைக்கு ஓர் அர்த்தம் இருக்க முடியும்" என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

நடிகர் ஆனந்தராஜ்

“தற்போது கட்சியில் யார்தான் உண்மையாக இருக்கிறார்கள்?”

“மக்களுக்கு தெரியும் யார் உண்மையானவர்கள் என்று. தேர்தல் வரும்போது அவர்கள் அதைச் சரியாக முடிவு செய்வார்கள். என்னதான் பணம் புரண்டாலும், கட்சியில் யார் நேர்மையாக இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்''. 

“மக்கள் இதே குழப்பத்தில்தான் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இருக்க வேண்டுமா?”

“அதை எதிர்க்கட்சிகள் தீர்மானிக்க வேண்டும். அவர்களுக்குத்தான் முழு உரிமையும் இருக்கிறது. ஆனால், அவர்கள் ஏன் அமைதி காக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அண்ணன் கமல்ஹாசன், 'எதிர்க் கட்சிகள் ஏன் அமைதியாக இருக்கின்றன' என்று கேள்வி எழுப்பினார். அது, தமிழகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதற்கு முன்பே நான் இதைக் கூறியிருந்தேன். பணம் உள்ளவராலும், மிகப் பிரபலமானவராலும் மட்டுமே ஒரு கருத்தானது, மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் போய்ச் சேர்கிறது''. 

“தேர்தலில் போட்டியிட்டால் எந்த அணியிலாவது இணையும் எண்ணம் இருக்கிறதா?”

“அப்படி எந்த எண்ணமும் இல்லை. தேர்தலில் போட்டியிடும் சூழல் ஏற்பட்டால் நிச்சயம் மக்களைச் சந்தித்து அவர்கள் விருப்பத்தைக் கேட்டுதான் முடிவெடுப்பேன். கட்சிக்கும், மக்களுக்கும் யார் உண்மையாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துதான் நான் முடிவெடுக்க முடியும். இன்னும் கட்சியில் வெளியே தெரியாத நல்லுள்ளங்கள் இருக்கின்றன. எதையும் மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்".

“தமிழக மக்களின் நிலைதான் என்ன?”

“தமிழக மக்களுக்கு இங்குதான் பெரும் சவால் இருக்கிறது. கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பவர் சிறையிலிருந்து வெளியே வருவதற்கான முயற்சிகள் எடுத்துவரும் வேளையில், தற்போது அவர்கள் ஜெயலலிதா மரணம் பற்றிய விசாரணைக் கமிஷன் அமைக்க முடிவெடுத்துள்ளனர். இது, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தீட்டும் திட்டமாகக்கூட இருக்கலாம். பதவி வந்ததும், பதவிக்கு வந்த காரணத்தை மறந்து பணத்தைச் சேர்க்கும் முயற்சியில்தான் எல்லாத் தலைவர்களும் இருக்கிறார்கள். இதற்கு முடிவுகட்டும் விதமாக இருக்கப்போவது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் மட்டும்தான்”.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்