Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஸ்பென்சர் - அன்று, அண்ணாசாலையின் அடையாளம்... இன்று, வாழ்ந்து கெட்ட ஜமீன் பங்களா! #ChennaiDay

பல ஆண்டுகளாக `ஷாப்பிங் மால்' என்ற சொல்லுக்கு உருவமாக இருந்த ஸ்பென்சர் பிளாசா, கடந்த சில வருடங்களாக வாழ்ந்துகெட்ட ஜமீன் பங்களாவாகவே காட்சியளிக்கிறது. சென்னைவாசிகளில் ஒரு பிரிவினருக்கு ஸ்பென்சரில் துணி வாங்குவது கனவாகவும், இன்னொரு பிரிவினருக்குப் பொழுதுபோக்காகவும் இருந்துவந்தது. வெளியூரிலிருந்து வருபவர்களின் சுற்றுலாப் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்தது. இப்போது யாரும் ஸ்பென்சர் ப்ளாசாவைப் பொருட்படுத்துவதே இல்லை. 

ஸ்பென்சர் ப்ளாசா

தற்சமயம் ஸ்பென்சர் எந்த நிலையில் இருக்கிறது என அறிவதற்காக அதன் உள்ளே நுழைந்தேன். இங்கு உள்ள மின் ஏணியில் ஏறி அதில் கிடைக்கும் பரவசத்தை அனுபவிக்கவே வரும் கூட்டம் ஏனோ இன்று காணவில்லை. அதற்கு ஆதரவு தரும்விதமாக அதைத் தொட்டு முதல் தளத்துக்கு வந்தால், பெரும்பாலான கடைகள் மூடியே இருந்தன. திறந்து வைத்திருக்கும் கடைகளின் உள்ளேயும் வேலை செய்பவர்களைத் தவிர ஒருவரும் இல்லை.

spencer plaza current situaton

அந்தக் கடைகளின் பக்கம் சென்றாலே ``உள்ளே வாங்க சார், என்ன வேணும்?" என்று சோர்ந்த முகத்துடன் வரவேற்கிறார்கள். அவர்களைத் தாண்டிப் போய் ஓர் ஓரமாக நின்றிருந்த செக்யூரிட்டி அண்ணனிடம் பேச்சுக்கொடுத்து ``ஸ்பென்சர்ல இப்பெல்லாம் கூட்டம் குறைஞ்சிப்போச்சே ஏன்?" எனக் கேட்டேன்.

``இந்த ரோடு ஒன் வே ஆனது முக்கியமான காரணம். பாரீஸ் பக்கமா வர்றவங்க எல்லாரும் ஜிபி ரோடு ராயப்பேட்டையைச் சுத்தி இங்கே வரணும். வர்ற வழியிலேயே எக்ஸ்பிரஸ் அவென்யு இருக்கு. அப்புறம் எதுக்கு இங்கே வரணும்?" என என்னிடம் பேசிக்கொண்டிருந்தவரை ஒருவர் இடைமறித்து ``என்ன விஷயம் சார்?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். 

``ஆங்... இவரைக் கேளுங்க, சரியான ஆளு. இங்கேதான் கடை வெச்சிருக்கார்" என்று செக்யூரிட்டி அண்ணன் எங்கள் இருவருக்கும் ஓர் அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு, பக்கத்திலேயே நின்றிருந்தார்.

கடை வைத்திருக்கும் அண்ணனைப் பார்த்துக் கேட்டேன் ``கூட்டம் வருதா?"

```கூட்டமா? கூட்டம்கிற வார்த்தையை காதார கேட்டே ரொம்ப நாளாச்சு. ஏதோ பழக்கப்பட்டவங்க, ரெகுலரா வர்றவங்கதான் வர்றாங்க... போறாங்க. மற்றபடி புதுசா யாரும் வர்றதே இல்லை."

``ஏன் அநியாயத்துக்கு இப்படி கூட்டம் குறைஞ்சுப்போச்சு?"

``முதல்ல இது ஒரே ஒரு ஷாப்பிங்மால்தான் இருந்துச்சு. இப்போதான் டீக்கடை மாதிரி அங்கங்க திறந்துட்டாங்களே! அப்புறம் சார்... இப்பெல்லாம் நம்ம ஜனங்களுக்கு எல்லாத்துலயும் என்டர்டெயின்மென்ட் வேணும். இங்கே வந்தா என்ன இருக்கு? ஸ்பென்சர்ல தியேட்டருங்க கட்டிவிட்டாத்தான் கூட்டம் வரும்."

செக்யூரிட்டி அண்ணன் சொன்னார் ``ஆனா, இதனாலே ஒரே ஒரு நல்லது. இன்னான்னா, பொருள் எதுவும் வாங்கலைன்னாகூட சும்மா சுத்திக்கிட்டு இருக்கிற பசங்கலாம் வர்றது இல்லை. இங்கே நிக்காதீங்க... அங்கே நிக்காதீங்கனு சொல்லிச் சொல்லி வாய்லாம் வலிக்கும். அந்தத் தொல்லை இல்லை."

கடைக்காரர், செக்யூரிட்டி அண்ணனைப் பார்த்து,``அண்ணே... கொஞ்சம் கம்னு இருங்கண்ணே" என்று சொல்லிவிட்டு, என் பக்கம் திரும்பி, ``சார் உள்ளே வந்து சும்மா சுத்துறாங்களே அவங்கதான் மெயின். அவன் இன்னிக்கு ஒரு பொருள் வாங்கலைன்னாகூட, இன்னொரு நாள் வாங்குவான். `ஸ்பென்சர்ல ஒரு ஷர்ட் பார்த்தேன் நல்லா இருக்குது'னு ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சிபாரிசு பண்ணுவான். அது அப்படியே செயின் மாதிரி போவும். வாங்குறானோ இல்லையோ, நம்ம கடை உள்ளே அவன் வரணும் அதான் முக்கியம். ஆனா, எவனுமே எட்டிக்கூட பார்க்க மாட்றான்!" என்றவரின் செல்போன் ஒலித்ததும் ``ஒரு நிமிஷம்..." என்று  செல்போனை காதில் வைத்துக்கொண்டு ஓரமாகப் போனார்.

செக்யூரிட்டி அண்ணனிடம் ``இங்கே அந்தக் காஷ்மீரி கடைகள் எல்லாம் நல்லா வியாபாரம் ஆவுதுன்னு கேள்விப்பட்டனே" என்றேன்.

``எனக்குத் தெரியாது அவர்கிட்டயே கேட்டுக்கங்க" என்று முகத்தைத் திருப்பிக்கொண்டார். கடை முதலாளி பேசிவிட்டு வரும் வரை செக்யூரிட்டி அண்ணனும் நானும் இரு துருவங்களாக நின்றிருந்தோம்.

spencer plaza inside situation

பிறகு நான் கேட்ட கேள்விக்கு, கடைக்காரர் பதில் சொன்னார்  ``ஆமா, நீங்க சொல்றது உண்மைதான். காஷ்மீர் சால்வை, அவங்க செய்ற நகை, நட்டு, போர்வைனு அதுல எல்லாம் கைவேலைப்பாடு சூப்பரா இருக்கும். அதை வாங்குறதுக்கு ஆளுங்க வர்றாங்க. அப்புறம் லெதர் ஜாக்கெட் வாங்குறதுக்கு வர்றாங்க. ஆனா, துணிக்கடைங்களுக்கு மவுசு போயிடுச்சு சார். ஆன்லைன் வந்ததுல இருந்து சுத்தம். தோ என் கடைக்கு வாங்க" என்று உள்ளே அழைத்துப் போனார்.

``காலையிலிருந்து ஒரு கஸ்டமர்கூட வரலை. டெய்லி இப்படித்தான் போவுது. சனி, ஞாயிறு மட்டும் ஓரளவுக்கு வருவாங்க. கடைப் பையனுக்கு மாசம் 10,000 ரூபாய் சம்பளம். 26,000 ரூபாய் மாச வாடகை. இது பத்தாதுனு மெயின்டனன்ஸ் சார்ஜ் வேற வாங்குவாங்க. இதுக்கெல்லாம் எங்கே போறது?" என்று என் பதிலுக்காக இடைவெளி கொடுத்தார். நான் அமைதியாக இருந்ததைப் பார்த்து அவரே தொடர்ந்தார்.

``ஸ்பென்சர்ல முக்கால்வாசி கடை இப்படித்தான் போகுது. பிராண்டட் கடைங்க எதுவுமே இல்லை. சில கடைங்க ஆபீஸா மாறிட்டு வருது. இன்னும் கொஞ்சநாள்ல ஸ்பென்சர் ப்ளாசா ஷாப்பிங் மால்ல இருந்து டோட்டலா ஐ.டி பார்க்கா மாறுதா இல்லையான்னு பாருங்க, நம்ம யாரையும் உள்ளேகூட விட மாட்டாங்க." 

அவருக்கு ஆறுதலாக என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை. அவருடைய பெயரைக் கேட்டேன். ``அம்ஜத்'' என்றார். புகைப்படத்துக்குப் பிறகு கைகுலுக்கி அவரிடமிருந்து விடைபெற்று மற்ற தளங்களில் சுற்றி பால்கனியிலிருந்து கீழே எட்டிப்பார்த்தேன். ஆட்டம் முடிந்து மக்கள் வெளியேறிய மைதானம்போலவே ஸ்பென்சர் காட்சியளித்தது.

Amjath at spencer shop

அண்ணாசாலையின் அடையாளமாக இருந்ததிலிருந்து இன்று வெறும் வழி தெரிந்துகொள்வதற்கான அடையாளச் சின்னமாக மட்டுமே அது எஞ்சி நிற்கிறது. காலத்துக்கு ஏற்றாற்போல் தன்னைத் தகவமைத்துக்கொள்ளாத எதுவும், யாரும் தப்பிப் பிழைப்பது கடினம் என்ற வாழ்க்கைப் பாடத்தின் நிகழ்காலச் சாட்சியம்தான் `ஸ்பென்சர் ப்ளாசா'. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement