வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (18/08/2017)

கடைசி தொடர்பு:21:45 (18/08/2017)

கரூர் மாவட்ட என்.சி.சி மாணவர்களுக்கு ராணுவ பயிற்சி முகாம்!


 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் 372 பேர்களுக்கு ராணுவப் பயிற்சி முகாம் நடைபெற்றது.  கரூர் புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இந்த முகாமில் ஊட்டி வெலிங்டன் ராணுவக் கல்லூரியை சேர்ந்த கர்னல் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில் கலந்துகொண்ட 372 தேசிய மாணவர் படை(NCC) மாணவர்களுக்கான பயிற்சி முகாமில், ராணுவத்தில் சேர்வதற்கு உண்டான அடிப்படைத் தகுதிகள், எந்தெந்த பிரிவுகளில் சேரலாம், ராணுவத்தில் சேர்வதற்கான அவசியம் உள்ளிட்ட செய்திகள் அந்த மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டன. இந்தப் பயிற்சி முகாமுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்ட ஊட்டி வெலிங்டன் ராணுவக்கல்லூரி கர்னல் (Educational Officer In Army) ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டதோடு, மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார்.


 

"கரூர் மாவட்டத்தில் இத்தனை மாணவர்கள் தேசிய மாணவர் படையில் சேர்ந்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். அதோடு, இந்த பயிற்சி முகாமிலும் ஆர்வமுடன் கலந்துகொண்ட உங்களை வாழ்த்துகிறேன். பள்ளியில் கல்வி பயில்வதோடு மட்டுமல்லாது, இதுபோல் தேசிய மாணவர் படையில் சேர வேண்டும் என்று நீங்கள் நினைத்து இப்படி சேர்ந்திருப்பது உண்மையில் நல்ல விஷயம். உங்களுக்குள் இருக்கும் தேசிய உணர்வைத்தான் இது காட்டுகிறது.

நீங்கள் அனைவரும் இந்திய ராணுவத்தில் சேர்ந்து, நம் நாட்டின் பாதுகாப்புக்காக உழைக்க வேண்டும் என விரும்புகிறேன். அதற்காகதான், ராணுவத்தில் எந்த துறையில் சேரலாம், என்னென்ன வழிமுறைகள், ராணுவப் பணியின் மகத்துவங்கள் என்னென்ன என்று விளக்கத்தான் இந்தப் பயிற்சி முகாம் உங்களுக்கு நடத்தப்பட்டிருக்கிறது. உங்களின் ஒவ்வொரு துடிப்பும் இந்த நாட்டுக்காக இருக்க வேண்டும்" என்று பேசினார்.