பாம்பன் சுடுகாட்டில் அனுமதியின்றி மணல் அள்ளிய வாகனங்கள் பறிமுதல்

சுடுகாட்டில் மணல் அள்ளிய வாகனங்களை பாம்பன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.


ராமேஸ்வரம் தீவுப் பகுதி ஏராளமான மணல் குன்றுகளைக் கொண்டிருக்கும் பகுதி. தீவைச் சுற்றியுள்ள கடலின் ஆவேசத் தாக்குதலில் இருந்து ஒரு சில பகுதிகளை இந்த மணல் குன்றுகள் பாதுகாத்து வருகின்றன. மேலும் அரசுக்குச் சொந்தமான இந்த மணல் குன்றுகளில் வனத்துறையினரால் சவுக்கு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஏராளமான மணல் குன்றுகள் இப்பகுதியில் இருந்தாலும் மணல் குவாரிகளுக்கு அரசு இங்கு அனுமதி அளிக்கவில்லை. 

ஆனால், ஒரு சில தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில் இருந்து மணல் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த அனுமதியை வைத்துக்கொண்டும், சுரங்கத் துறை அதிகாரிகளைக் கவனித்துக்கொண்டும் பலர் முறைகேடாக மணல் எடுத்து விற்பனை செய்துவருவது தீவுப் பகுதியில் சர்வ சாதாரணமாக நடக்கிறது.

பறிமுதல் செய்யப்பட்ட மணல் அள்ளும் வாகனங்கள்

இந்நிலையில், பாம்பன் குந்துகால் முகமதியார்புரம் பகுதியில் உள்ள சுடுகாட்டையும் மணல் அள்ளுபவர்கள் விட்டு வைக்கவில்லை. நேற்று இரவு இப்பகுதியில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக பாம்பன் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது . இதையடுத்து பாம்பன் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் இந்திரன், முருகன் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸார் சுடுகாட்டுப் பகுதியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மணல் அள்ளும் வாகனம் மற்றும் 2 டிராக்டர்களைப் கைப்பற்றினர். 

 இந்த வாகனங்கள் மூலம் மணல் அள்ளிய பாம்பன் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ், பாரதி, நாகசாமி ஆகிய மூவரைக் கைதுசெய்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!