ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு

ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் இம்மாதம் 22-ம் தேதி நடைபெறவுள்ள ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்திருப்பதாக அந்த அமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் மு.சுப்பிரமணியன்  தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் கலைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்திட வேண்டும், அதுவரை 20 சதவிகித இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் 4 கட்டப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக ஜூலை 18-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதையடுத்து இம்மாதம் 5-ம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை நடத்தினோம். அதற்கும் அரசு செவி மடுக்கவில்லை. எனவே இதன் தொடர்ச்சியாக 3-வது கட்டமாக இம்மாதம் 22-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்த முடிவுசெய்துள்ளோம். இந்த வேலைநிறுத்தத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரம் பேர் பங்கேற்க இருப்பதுடன் தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்க முடிவு செய்துள்ளோம். அந்த ஒரு நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் பணிக்கு வரமாட்டார்கள். அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. இந்த 3-வது கட்டப் போராட்டத்தையும் அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளோம்.

ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்காக அஞ்ச மாட்டோம். மாறாக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம், மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!