Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கணவன் மரணம், கேரள முதல்வர் உதவி... கலங்கடிக்கும் பின்னணி சொல்கிறார் முருகன் மனைவி!

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துரை குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்த முருகன், சமீபத்தில் கொல்லம் அருகே உள்ள சாத்தனூர் எட்டிக்காரா பாலத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். உயிருக்குப் போராடிய அவரை, ஆம்புலன்ஸில் வைத்துக்கொண்டு கொல்லம், திருவனந்தபுரம் மாவட்டங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்குச் சென்றும் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்துவிட்டன.

விபத்து காரணமாக பலியான முருகன்

சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்ட அவர், ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார். முருகனின் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டுவருவதற்குக்கூட அவரது குடும்பத்தினரிடம் பணம் இல்லை. கேரள மாநில ஜனநாயக வாலிபர் சங்கம், அவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவியது. அத்துடன், அவருக்கு சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்ட விவகாரம், கேரள ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. 

வேலை தேடி நெடும்பயணம்!

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு வரையிலும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களின் பால் தேவையை, தமிழகமே பூர்த்திசெய்து வந்தது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தே இந்த மாவட்டங்களுக்கான பால் கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வறட்சியால், கறவை மாடுகளுக்குத் தேவையான தீவனம் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.

விளை நிலங்கள் பொய்த்துப்போனதால் கால்நடைகளைக் காப்பாற்றுவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவற்றை சொற்ப விலைக்கு விற்பனை செய்தனர். அதனால் பால் மூலமாகக் கிடைத்த வருவாய் தடைப்பட்டது. அத்துடன், கேரளாவில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அந்த மாநிலத்திலேயே கால்நடை வளர்ப்பு ஊக்கப்படுத்தபட்டது. அதனால் அங்குள்ள வீடுகளில் கறவை மாடுகளை வளர்த்தார்கள். ஆனால், மாடுகளைப் பராமரிக்கவும் அதிலிருந்து பால் கறக்கவும் தெரியாத காரணத்தால், அந்தப் பணிக்கு ஆள்கள் தேவைப்பட்டனர். அதற்காக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து சுமார் 2000 பேர் கேரளாவில் பணியாற்றிவருகின்றனர். சொந்த ஊரில் 10-க்கும் அதிகமான கறவை மாடுகளைப் பராமரித்த முருகனின் குடும்பத்தினர், அவற்றை காப்பாற்ற வழி தெரியாமல் விற்பனை செய்தனர். இதனால் முருகன் கேரளாவுக்கு வேலை தேடிச் சென்றார். திருமணத்துக்கு முன்பே அவர் அங்கு வேலைக்குச் சென்றுவிட்டார். 

கேரளாவில், பால் கறக்கும் வேலையை அவர் செய்துவந்தார். ஒரு மாட்டிடமிருந்து பால் கறந்து கொடுக்க மாதத்துக்கு 500 ரூபாய் கொடுக்கப்பட்டது. ஒரே வீட்டில் நாலைந்து மாடுகள் இருந்தால் கணிசமான சம்பளம் கிடைக்கும். இதேபோல தினமும் 10 வீடுகளில் பால் கறந்து கொடுத்து, அதில் கிடைக்கும் வருவாயை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்து பிழைப்பு நடத்திவந்தார். 

பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான தமிழர்களை ஒருங்கிணைத்து, மார்க்சிஸ்டுகள் சங்கம் அமைத்துள்ளனர். அதில் முருகனும் உள்ளார். வறுமை விரட்டியதால் பிழைப்பு தேடி கேரளாவுக்குச் சென்ற முருகன், அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்தத் தகவல் கிடைத்ததும் வருத்தமடைந்த மார்க்சிஸ்டுகள், அவரது குடும்பத்தினரை சொந்த ஊரிலிருந்து காரில் வரவழைத்ததுடன், முருகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லவும் பொருளாதார உதவி செய்தனர். 

நிலைகுலந்த குடும்பத்தினர்!  

விபத்தில் உயிரிழந்த முருகனின் மனைவி பாப்பா என்கிற முருகம்மாள். இவர்களுக்கு ஏழு வயதில் கோகுல், ஆறு வயதி ராகுல் என்கிற இரு மகன்கள் உள்ளனர். முருகனின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அந்த மாநில அரசு உதவியது. சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் முடிந்ததும், அந்தக் குடும்பம் தவித்துப்போனது. காரணம், முருகனுக்குச் சொந்த வீடு கிடையாது. அவரது மனைவி இரு குழந்தைகளையும் வைத்துக்கொண்டு வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பது எனப் புரியாமல் திண்டாடினார்.

இது பற்றி நம்மிடம் பேசிய முருகனின் உறவினர்கள், “முருகன் கடின உழைப்பாளி. கேரளாவில் வேலை செய்துகொண்டிருந்த அவர், மாதத்துக்கு ஒருமுறை வீட்டுக்கு வருவார். அவருக்கு எந்தக் கெட்டபழக்கமும் கிடையாது. அவர் மூலமாக இந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் கேரளாவில் வேலை செஞ்சுக்கிட்டு வர்றாங்க. அவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய சமயத்தில் அவரால் அங்கு வேலை செய்து வருபவர்களில் ஒருவருக்கும் தகவல் தெரியவில்லை. இல்லாவிட்டால், அவர்கள் ஓடோடிச் சென்று உதவி செஞ்சிருப்பாங்க’’ என்று வேதனைப்பட்டனர். 

முருகனின் மனைவியிடம் பேசினோம். “எங்க வீட்டுக்காரர் கேரளாவில் வேலை செய்தாலும் குடும்பத்தினரிடம் தினமும் பேசுவார். பிள்ளைகள் மீது ரொம்பப் பாசமா இருப்பார். ‘ரெண்டு பையன்களையும் நல்லா படிக்க வைக்கணும்’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பார். எங்களுக்குச் சொந்த வீடு கிடையாது. அதனால் சீக்கிரமே நாம சொந்த வீடு கட்டுவோம்னு சொல்வார். கடந்த முறை ஊருக்கு வந்தப்ப, `இனியும் அங்கே அலைய வேண்டாம். இங்கேயே ஏதாவது சொந்தமா தொழில் செய்யலாம்னு இருக்கேன்’னு சொன்னார். அவர் விபத்துல சிக்குறதுக்கு ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி, எங்ககிட்ட போனில் பேசினார். பசங்ககிட்ட போனில் கொஞ்சிப் பேசினார். ஒரு வாரத்துல ஊருக்கு வருவதாகச் சொன்ன அவர், பசங்ககிட்ட அவங்களுக்கு என்ன வாங்கிட்டு வரணும்னு கேட்டார். ஆனால், பிள்ளைகளைப் பார்க்காமலே போயிட்டார்’’ என்று கதறி அழுதார். 

விபத்து

மார்க்சிஸ்டுகளின் மனிதாபிமானம்!

விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய முருகனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்த விவகாரம், கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியது. முருகனின் குடும்ப வறுமையைக் கவனத்தில்கொண்ட, கேரள மார்க்சிஸ்ட் கட்சியானது, அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக அறிவித்தது. முருகனுக்கு சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் குறித்து விசாரணை நடத்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். அத்துடன், இந்தச் சம்பவத்துக்கு அந்த மாநிலச் சட்டமன்றத்திலேயே பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

முருகனின் மனைவி, அவரது மகன்கள் கோகுல், ராகுல் ஆகியோரை மார்க்சிஸ்டுகள் கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைச் சந்தித்தனர். அந்தக் குடும்பத்தின் நிலையைப் பார்த்து அதிர்ந்த அவர், அந்தக் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் அரசு சார்பில் அளிக்க உத்தரவிட்டார். பின்னர் சிறுவர்களின் கைகளைப் பிடித்துக்கொண்ட அவர், “இந்தச் சிறுவர்களை நன்றாகப் படிக்க வையுங்க. அவங்களுக்குத் தேவையான உதவிகளை எங்க கட்சி செய்யும். என்னை உங்க குடும்பத்துல ஒருத்தரா நினைச்சுக்குங்க. எப்போது தேவைப்பட்டாலும் என்னை வந்து சந்தியுங்க’' என்று சொன்னபோது அவரது குரல் உடைந்திருந்தது. 

கேரள அரசின் உதவியைத் தொடர்ந்து தமிழக அரசும் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. ராதாபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ-வான இன்பதுரை, முதலமைச்சரிடம் இந்தக் கும்பத்தின் பின்னணி பற்றி எடுத்துச் சொன்னதைத் தொடந்தே இந்த உதவி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் முருகனின் மனைவி மற்றும் குழந்தைகளை சென்னைக்கு அழைத்துச் சென்று முதலமைச்சரைச் சந்திக்கவைக்கவும் இன்பதுரை முயற்சி எடுத்துவருகிறார்.

உயிர் இழந்த முருகனின் குடும்பத்துக்கு நிலையான வருமானம் கிடைக்கும் வகையில், அவரது மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்துள்ளது. அந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்றி, தமிழக அரசு தனது மனிதாபிமானத்தை நிலைநாட்டுமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement