தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை எதிர்த்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் சங்கம் ஆசிரியர்கள் சங்கம் இன்னும் பிற சங்கங்களின் கூட்டமைப்பாக ஜாக்டோ ஜியோ அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு ஆகஸ்ட் 22-ம் தேதி தமிழகம் முழுவதும் எட்டாவது ஊதியக்குழு அமல்படுத்தக்கோரியும், புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்யக் கோரியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமாக அறிவித்திருந்தது. இந்நிலையில்,  தலைமைச் செயலாளர் கிரிஜாவைத்தியநாதன், அனைத்துத் துறை தலைமைச் செயலாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையை வெளியிட்ட தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனைக் கண்டித்து, இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அரசு அலுவலர்கள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்தக் கடிதத்தில், “அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் அல்லது போராட இருப்பதாக அச்சுறுத்துவது, போராட்டம் அல்லது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அதன்மூலம் அரசு அலுவலகங்களைச் செயல்படவிடாமல் தடுப்பது போன்றவை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973-ன் 20 22 22ஏ ஆகிய பிரிவுகளை மீறுவதாக அமைந்துவிடும். எனவே, அந்த விதிகளை மீறக்கூடாது. அப்படி மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். உங்கள் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்களிடம் பேசும்போது “ எங்கள் போராட்டம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22-ல் நடைபெறும். ஏற்கெனவே இந்தச் சட்டங்கள் இருப்பதுதான். ஜெயலலிதா ஆட்சியில் எஸ்மா டெஸ்மா போன்ற சட்டங்களை நாங்கள் எதிர் கொண்டவர்கள். இன்றைக்கு இருக்கும் ஆட்சி நிலையற்றது. இப்படி இருக்கும்போது எங்களை மிரட்டுவது என்பது நடக்காத ஒன்று. நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று அரசு நினைக்கிறது. அதைத்தான் தலைமைச் செயலாளர் செய்திருக்கிறார்கள். நாங்கள் பணிக்கு வரவில்லையென்றால், ஆப்சென்ட் மற்றும் சலுகைகள், சம்பளம் ரத்து எனச் சொல்லியிருப்பது எங்கள் உரிமைகளை முடக்குவதாகும். அரசு ஊழியர்களை தமிழக அரசு ஒடுக்க நினைத்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது தமிழக அரசாங்கத்துக்குத் தெரியாதா என்ன? இவர்கள் எல்லாம் ஜெயலலிதாபோல் செயல்பட நினைப்பது நடக்காத காரியம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!