வெளியிடப்பட்ட நேரம்: 00:20 (19/08/2017)

கடைசி தொடர்பு:14:55 (09/07/2018)

குடிநீர் எடுக்கும் இடத்திலிருந்து 500 அடி தள்ளியே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும்: கரூர் கலெக்டர் அறிவுறுத்தல்


 

"வரும் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை குடிநீர் எடுக்கும் இடத்திலிருந்து 500 அடிக்கு அப்பால் கரைக்க வேண்டும்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), டி.எஸ்.பி. கும்மராஜா, டி.ஆர்.ஓ, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர், ஆலோசனைக்குப் பிறகு தெரிவித்ததாவது, "விநாயகர் சதுர்த்தி திருவிழாவின் போது சிலைகளை வழிபட்ட பின்னர் காவல்துறையினர் அறிவுறுத்திய வழித்தடங்களில் மட்டுமே, சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்ல வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்ட சுடப்படாத சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும். ரசாயன கலவைகள் (பெயின்ட்) சிலைகளுக்குப் பூசக்கூடாது. மேலும், சிலைகளை வழிபாட்டுக்குப் பின்னர் நீர்நிலைகளில் கரைப்பதற்காக அறிவுறுத்தப்பட்ட காவிரியாற்றின் கரையிலுள்ள தவுட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், மாயனூர், குளித்தலையிலும் கரைக்க வேண்டும். அமராவதி ஆற்றை பொறுத்தமட்டில், கொத்தப்பாளையம், அரவக்குறிச்சி வட்டம், பாப்பாத்துறை, சின்னதாராபுரம் போன்ற இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும். அதோடு, குடிநீர் ஆதாரங்களைப் பாதிக்காத வண்ணம் குடிநீர் எடுக்கும் இடங்களிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் விநாயகர் சிலைகளைக் கரைக்க வேண்டும். ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட பிற நீர்நிலைகளில் சிலைகளைக் கரைப்பதை தவிர்க்க வேண்டும். சிலை வைப்பவர்கள் முன்கூட்டியே அனுமதி பெறுவதுடன் சிலைப் பாதுகாப்புக் குழு ஒன்றை அமைத்து செயல்பட வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.