வெளியிடப்பட்ட நேரம்: 11:25 (19/08/2017)

கடைசி தொடர்பு:11:25 (19/08/2017)

ஆர்ப்பரிக்கும் குற்றால அருவி! ஐந்தருவியில் குளிக்கத் தடை நீங்கியது!

குற்றாலம் ஐந்தருவி

வார நாள்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் குற்றால அருவிகள், வார இறுதியின் விடுமுறை தினங்களில் ஆர்ப்பரிப்புடன் கொட்டித் தீர்க்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் இல்லாமல் குளித்து மகிழ்கின்றனர். 

மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக குற்றாலத்தின் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இந்தாண்டு தென் மேற்குப் பருவ மழை போதுமான அளவுக்குப் பெய்யாமல் ஏமாற்றிய நிலையிலும், ஜூன் 1-ம் தேதி குற்றாலத்தில் சீசன் தொடங்கியது. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியதுடன் சாரல் மழையும் தென்றலும் வீசியதால் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரத் தொடங்கினர். 

இரண்டு வாரத்துக்கு ஆர்ப்பரிப்புடன் கொட்டிய அருவிகளில் படிப்படியாக நீர்வரத்து குறையத் தொடங்கியது. பகலில் சுள்ளென வெயிலும் வாட்டியதால் சீசன் முடிவுக்கு வந்து விட்டதோ என உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நினைத்தனர். இதனால், ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 3-ம் தேதி வரையிலும் தமிழக அரசின் சார்பாக அவசரமாக சாரல் திருவிழா கொண்டாடப்பட்டது. சாரலே இல்லாத நிலையில், சாரல் திருவிழாவா எனப் பொதுமக்கள் எண்ணிய நிலையில் இடையிடையே சாரல் தலைகாட்டி அரசு விழாவை அரவணைத்தது. கடந்த சில தினங்களாக அருவியில் தண்ணீர் குறைவாகவே விழுந்தது. வெயிலும் வாட்டி வதைத்து வந்தது. ஆனால், நேற்று இரவு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது.

ஐந்தருவியில் நேற்று நள்ளிரவில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. காலையில் தடை விலக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர். ஐந்தருவியின் அனைத்துப் பிரிவுகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியில், பெண்கள் குளிக்கும் பகுதியில் கூடுதலாக தண்ணீர் கொட்டுகிறது. ஆண்கள் பகுதியில் சற்று குறைவாக விழுந்தபோதிலும் இதமான சீசன் நிலவுவதால் உற்சாகத்துடன் குளித்து மகிழ்கின்றனர். 

பழைய குற்றாலத்திலும் நீர் வரத் தொடங்கி இருக்கிறது. வாரம் முழுவதும் வாட்டிய வெயில் மறைந்து வார விடுமுறையில், மக்கள் வருகை தரக்கூடிய சமயத்தில் சீசன் களை கட்டி இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறை தினத்தில் குடும்பத்துடன் சுற்றுலாவாக குற்றாலத்துக்கு வந்த பயணிகளும் ஏமாற்றம் இல்லாமல் சீசனை அனுபவித்து மகிழ்கின்றனர்.