வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (19/08/2017)

கடைசி தொடர்பு:11:39 (19/08/2017)

ரஜினிகாந்த்துடன் திருநாவுக்கரசர் திடீர்ச் சந்திப்பு!

போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென சந்தித்துப் பேசினார்.

சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பும் ஆதரவும் கிளம்பியது. 'ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்' என்று அவரின் ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 'ரஜினி அரசியல் கட்சித் தொடங்க வேண்டும்' என்று திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். இதனிடையே, அரசியலில் ஈடுபடுவது குறித்து ரஜினிகாந்த் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. "நிச்சயமாக ரஜினி அரசியலுக்கு வருவார்" என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் உறுதியுடன் கூறிவருகிறார்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் இன்று திடீரென போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்தார். அவரை ரஜினிகாந்த் வரவேற்றார். தன் மகளின் திருமண அழைப்பிதழைக் கொடுக்க திருநாவுக்கரசர் சென்றதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகவும் தெரிகிறது.