வெளியிடப்பட்ட நேரம்: 12:10 (19/08/2017)

கடைசி தொடர்பு:12:10 (19/08/2017)

தேன் உற்பத்தியில் நம்பர் ஒன் மாவட்டம் குமரி! கேக் வெட்டி ’தேனீக்கள் தின விழா’ கொண்டாட்டம்!

’உலக தேனீக்கள் தினவிழா’வை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் கொட்டூரில் கேக் வெட்டி தேனீக்கள் தினவிழாவை கொண்டாடினர் தேன் உற்பத்தியாளர்கள். 

தேனீ தினவிழாவில் கேக் வெட்டுதல்

மொத்த ’ஈ’ இனங்களில் 7 இனங்கள் தேனீக்களாகும். இதில் 44 உள்ளினங்கள் உள்ளன. ஒரு கூட்டில் ராணித்தேனீ, ஆண் தேனீ , வேலைக்காரத்தேனீ ஆகியவை உள்ளன. ராணித்தேனீ ஆண் தேனீயுடன் சேர்ந்து முட்டையை மட்டும்தான் இடுகிறது. தேன் சேகரிப்பில் முக்கியப் பங்கு வகிப்பது வேலைக்காரத் தேனீக்கள்தான். இவற்றின் வயிற்றில் உள்ள தேன் பைகளில் பூக்களில் உள்ள மதுரம் என்ற குளுக்கோஸை எடுத்து தேன்கூட்டில் சேகரித்தவுடன் வேதியியல் மாற்றத்திற்குட்பட்டு தேனாக மாறுகிறது. சுறுசுறுப்புக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படும் தேனீக்கள் தினமான இன்று கன்னியாகுமரி மாவட்டம் கொட்டூரில், கொட்டூர் தேன் உற்பத்தியாளர் சங்கமும், அன்னை தெரசா அன்னாச்சிப்பழ உற்பத்தியாளர்கள் சங்கமும் இணைந்து தேனீ தினவிழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். 

கொட்டூர் தேன் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஹென்றியிடம் பேசினோம். ‘’1856ல் அமெரிக்காவில் லேயன்வாட் என்ற பாதிரியாரும், தமிழகத்தில் 1906 – 1909 வரை ஆண்டு திருச்சியில்  நியூட்டன் என்ற பாதிரியாரும் செயற்கையாக தேனீ வளர்ப்பு முறையைச் செய்துபார்த்துள்ளதாக செய்திக்குறிப்புகள் இருக்கின்றன. 1920ல் ஐரோப்பிய மிஷனெரி ஸ்பென்சர் ஷாச் என்பவர் மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ மூலம் மக்களுக்கு தேனீ உற்பத்தி பயிற்சியை அளித்து வந்துள்ளார். 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள தேன் உற்பத்தியாளர் அமைப்புகள் சேர்ந்து தேனீக்கு தினம் கொண்டாட முடிவு செய்துள்ளன. அதன்படி ஆகஸ்ட் 19-ம் தேதியை ’உலகதேனீக்கள் தின’மாக முடிவு செய்து கொண்டாடி வரப்படுகிறது. தமிழகத்தில் தேன் உற்பத்தி அதிகம் மிகுந்த மாவட்டம் குமரிதான். கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களில் சுமார் 50 லட்சம் தேனீ பெட்டிகள் வைக்கப்பட்டு இதன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் , தொழிலாளர்கள் தேன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருடம்தான் தேனீ தினம் முதல் தடவையா கொண்டாடினோம். இப்பகுதியிலுள்ள தேன் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை அழைத்து கேக் வெட்டினோம். அனைவருக்கும் தேன் பருக கொடுத்தோம்’’ என்றவர், தேனீ வளர்ப்புத் தொழிலை மேம்படுத்த இப்பகுதியில் தேனீக்கள் ஆராய்ச்சி மையம் தேவை. தேன் உற்பத்தியாளர்களைப் பெருக்கக் கூடுதல் பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க