Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சசிகலாவை மாட்டிவிட்டு... ஓ.பி.எஸ்-ம், ஈ.பி.எஸ்-ம் தப்பிக்கப் பார்க்கிறார்கள்!' - ஆம் ஆத்மி வசீகரன்

ஜெயலலிதா மற்றும் சசிகலா

'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது' என்று தமிழக அரசியல் தலைவர்களும் பெரும்பான்மையான மக்களும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த சந்தேகத்தைப் போக்குவதற்கு 'நீதிவிசாரணை அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் எழுந்துவந்தது. ஆனால், 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது' என அ.தி.மு.க-வைச் சேர்ந்த எந்த ஓர் அரசியல்வாதியும் சொல்லவில்லை. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் முதல் இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் வரை அ.தி.மு.க-வினர் அனைவருமே, ''அம்மாவுக்கு சிறப்பான சிகிச்சை கொடுக்கப்படுகிறது; நன்றாகச் சாப்பிடுகிறார்'' என்றெல்லாம் சொல்லிவந்தனர்.

தனது பதவி பறிபோகும் நிலையில் இருக்கும்போதுதான் முதன்முதலாக, ''ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது; நீதிவிசாரணை நடத்த வேண்டும்'' என்றார் ஓ.பன்னீர் செல்வம். அதுபோலவே தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், 'ஜெயலலிதாவின் மரணத்தில் நீதிவிசாரணை நடத்தப்படும்' என்று தற்போது உத்தரவிட்டிருக்கிறார். ஓர் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான நல்ல விஷயம் தான் இது. ஆனால், 'ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சசிகலா தலைமையில் செயல்படும்போது ஏன் இந்தக் கேள்வியை கேட்கவில்லை?' என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் வசீகரன் ''தற்போது சசிகலா ஜெயிலில் இருப்பதால், நீதிவிசாரணை மூலம் அவரை மட்டும் குற்றவாளியாகக் காட்டிவிட்டு, தங்களை மக்கள் மத்தியில் நல்லவர்களாகக் காட்டிக்கொள்ளவே ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் திட்டமிடுகின்றனர்'' என்று அதிர்ச்சி தகவலைக் கொட்டியிருக்கிறார் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரான வசீகரன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உடல்நலக்குறைவால் 75 நாட்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ஆம் நாள் இறந்தார். அவரது மரணத்தில்  சந்தேகம் உள்ளதாக மக்கள் கூறிவந்தனர். ஜெயலலிதா மரண சூழ்நிலையில், அவருடனேயே இருந்தவர் சசிகலா. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திரமோடி, அமித்ஷா, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் ரெட்டி ஆகியோர் அனைவருமே ஜெயலலிதாவின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது போலவே செயல்பட்டவர்கள்.

ஆனால், பின்னர் 'ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை வேண்டும்' என்றார் ஓ.பி.எஸ். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதாவின் மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க உரிய நீதிவிசாரணை நடத்தப்படும் என்று சொல்லியுள்ளார். இது ஒரு கூட்டு சதி. சசிகலா, ஜெயிலுக்கு சென்றிருப்பதால், அதனை காரணம் காட்டி இவர்கள் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. உண்மையில் இவர்கள் அனைவருமே நீதிவிசாரணையில் விசாரிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முறையாக சி.பி.ஐ விசாரணை நடத்தி உணமைகளை வெளியே கொண்டுவர வேண்டும். அந்த சி.பி.ஐ டீமும் மோடியின் கீழ் செயல்படாமல், உண்மையாக செயல்பட்டால் மட்டுமே ஜெயலலிதாவின் மரணம் குறித்த உண்மைகள் வெளிவரும். எடப்பாடி பழனிசாமியின் தலைமையில், மாநில அரசின் விசாரணை என்பது சசிகலாவை மட்டுமே சிக்கவைத்துவிட்டு, மற்ற குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளும் திட்டமாகவேத் தெரிகிறது. இவ்விஷயத்தில், தவறு செய்தவர்கள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும்.

ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ்

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதா அப்படியிருக்க, அவரது வேதா இல்லம் நினைவகமாக மாற்றப்படும், பல கோடி ரூபாய் செலவில்  அவரது சமாதி கட்டப்படும் என்றெல்லாம் தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டனத்துக்கு உரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிவிசாரணை நடத்தி, 'ஜெயலலிதாவுக்கு என்னதான் நடந்தது? என்ற உண்மையை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்' என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement