தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய மீனவர்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு! | Fishermen who uses banned nets will be banned for 3 months from fishing!

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (19/08/2017)

கடைசி தொடர்பு:16:51 (09/07/2018)

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்திய மீனவர்களுக்கு தடை விதித்தது தமிழக அரசு!

அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்ட 22 படகு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, 3 மாதங்களுக்கு மீன்பிடிக்கத் தடையும் விதித்துள்ளது தமிழக மீன்வளத்துறை.

மன்னார் வளைகுடா பகுதியிலும், பாக் நீரினை பகுதியிலும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. முறையற்ற மீன்பிடி முறைகள் மற்றும் பருவ நிலை மாற்றங்களினால் இவற்றில் பல நூறு உயிரினங்கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. கடல் பரப்பை சுத்தமாக வைத்து கொள்வதிலும், கடலின் இயல்புகளைக் கண்டறிவதிலும் இந்த உயிரினங்கள் மனிதர்களுக்கு உதவி வருகின்றன.

இந்நிலையில் ஒரே நேரத்தில் ஒட்டு மொத்தமாக மீன் பிடிக்க ஆசைப்படும் மீனவர்கள் இரட்டை மடி, சுருக்கு மடி, வெடி வைத்தல் முறைகளில் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஒட்டு மொத்த மீன் இனங்கள் மட்டுமன்றி அவற்றின் முட்டை, குஞ்சு, கடல் தாவரங்கள் என எல்லாவற்றையும் இழுத்து வருவதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பெரும் தீங்கை உண்டாக்கி வருகின்றனர்.

 

இரட்டை மடி வலைகள் பயன்படுத்தும் படகுகள்

இதைத் தடுக்க மத்திய அரசு குறிப்பிட்ட சிலவகை கடல் வாழ் உயிரினங்களைப் பிடிக்கவும், இரட்டை மடி, சுருக்குமடி, வெடி வைத்து மீன்பிடிப்பது போன்றவற்றை தடை செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 25 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து மீன் துறையினருக்குப் புகார் வந்ததைத் தொடர்ந்து அந்தப் படகுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ராமநாதபுரம் மீன் துறை துணை இயக்குநர் ஐசக் ஜெயக்குமார் இது தொடர்பாக அந்தப் படகுகளின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதை மீனவர்கள் ஒத்துக் கொண்டனர். இதையடுத்து அந்தப் படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதமும், 3 மாதங்களுக்கு மீன்பிடிக்கத் தடையும் விதிக்கப்பட்டது. மேலும் 3 மாதங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான டீசல் விநியோகமும் ரத்து செய்யப்பட்டது.