இறந்துகிடந்த யானைகளை… எழுப்பத் துடித்த குட்டி யானை! கூடலூரில் நடந்த சோக சம்பவம் | An Elephant baby tries to awake dead elephants

வெளியிடப்பட்ட நேரம்: 13:55 (19/08/2017)

கடைசி தொடர்பு:13:55 (19/08/2017)

இறந்துகிடந்த யானைகளை… எழுப்பத் துடித்த குட்டி யானை! கூடலூரில் நடந்த சோக சம்பவம்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று மின்சாரம் தாக்கி யானைகள் இறந்துள்ளன. கூடலூரில் நடந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது.

கூடலூரை அடுத்துள்ள புதூர்வயல் பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு யானைகள் கூட்டம் முகாமிட்டது. அந்தப் பகுதியில் பயிர்களையெல்லாம் யானைகள் சேதம் செய்ய, அந்தப் பகுதி மக்கள்  பதற்றத்துக்குள்ளானார்கள். யானைகளுக்குப் பயந்து வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருக்க வேண்டிய சூழல் அங்குள்ள மக்களுக்கு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த துரைராஜ் என்பவரது தோட்டத்தில் ஒரே ஒரு யானையின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. அந்த ஒற்றை யானையில் பிளிறலைக் கேட்ட சிலர் மரங்களுக்கிடையில் மறைந்தபடி தோட்டத்துக்கு போய் பார்த்திருக்கிறார்கள். "இரண்டு யானைகள் இறந்து கிடக்க, ஒரு குட்டி யானை  தும்பிக்கையால் அவற்றை எழுப்ப முயன்ற காட்சியைப் பார்த்து அவர்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள். அந்த இரண்டு யானைகளையும் மீட்பதற்காக அந்த குட்டியானையை விரட்ட முயற்சி செய்திருக்கிறார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தக் குட்டி யானை அங்கிருந்து நகரவே இல்லையாம். "அம்மா அப்பாவை இழந்த ஒரு குழந்தை எப்படிக் கதறுமோ… அதேபோல அந்தக் குட்டி யானை கதறுச்சிங்க. அத பாக்கும்போது மனசு என்னமோ மாதிரியாச்சு என்று" கலங்குகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

பின்பு மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்க, அவர்கள் வந்து அந்தக் குட்டி யானையைக் காட்டுக்குள் விரட்டியிருக்கிறார்கள். அதன் பிறகு வனத்துறையினர் நடத்திய ஆய்வில், மின் கம்பிகள் ஓரமாக நின்ற பாக்கு மரங்களை யானைகள் முறித்துத் தள்ளி உள்ளதும், மரம் விழுந்ததால் மின் கம்பிகள் அறுந்து யானைகள் மீது மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளதும் தெரியவந்துள்ளது. நல்லவேளை குட்டி யானை மின் கம்பிகளைத் தொடவில்லை. இல்லையென்றால் அதுவும் பரிதாபமாக இறந்துபோயிருக்கும் என்கிறார்கள். இறந்த இரண்டு யானைகளில் ஒன்று ஆண் யானை இன்னொன்று பெண் யானை. அந்த இரண்டு யானைகளும் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அந்தப் பகுதியிலேயே புதைக்கப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க