இலங்கைக்கு கடத்த முயன்ற பண்டல் பீடி இலைகள் சிக்கியது!

பீடி இலைகள் அடங்கிய பண்டல்கள்

ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 14 பண்டல் பீடி இலைகள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் கைப்பற்றப்பட்டது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பின், இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும், இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களும், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டை, கடல் குதிரை ஆகியவையும் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இந்திய கடற்பகுதியைக் கண்காணித்து வரும் இந்திய கடற்படை, கடலோர காவல் படை மற்றும் சுங்கத்துறை, தமிழகக் கடலோரப் பாதுகாப்பு குழுமம், நிலப்பகுதியைக் கண்காணித்து வரும் புலனாய்வுப் பிரிவுகள், காவல்துறை ஆகியவற்றின்  கண்காணிப்பையும் மீறி  இந்தக் கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவற்றில் சில நேரங்களில் மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மட்டும் தங்கம் கடத்தி வரும் நபர்களை மடக்கிப் பிடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பாம்பன் குந்துகால் பகுதியிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற  சுமார்  200 கிலோ எடை கொண்ட பீடி இலைகளைக் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் கைபற்றினர். இவற்றைக் கடத்தல்காரர்கள் நடுக்கடலில் கடத்திச் செல்லும்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினரைக் கண்டுள்ளனர். இதையடுத்து பீடி இலை பண்டல்களைக் கடலில் தள்ளிவிட்டு தப்பிவிட்டனர். இன்று காலை பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கிய அந்த பண்டல்களைக் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!