வெளியிடப்பட்ட நேரம்: 14:25 (19/08/2017)

கடைசி தொடர்பு:14:25 (19/08/2017)

அரசு ஆணையை மீறுகிறார் முதல்வர் பழனிசாமி! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புகார்

முதல்வர் மீது புகார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஆணையை மீறிச் செயல்படுகிறார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

நெல்லையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நெறியாளர் வியனரசு தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் கண்மணி மாவீரன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பேசிய வியனரசு, ’’இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. அண்மையில் ஆஸ்திரேலியா நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசின் சார்பாக முதல்வர் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழகத்தின் பல்வேறு முதல்வர்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். ஆனால், ’192 டி.எம்.சி தண்ணீரைத் திறந்தால் மேகதாதுவில் அணை கட்டிக் கொள்ளலாம்’ எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தற்போது அறிவித்துள்ளது. இதைத் தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். சென்னையில் உள்ள பல்வேறு தெருக்களின் பெயர்களும் ஆங்கிலத்திலேயே இருக்கிறது. 

குறிப்பாக மாண்டியச் சாலை, ரெட் கிராஸ் சாலை, பிரேசர்ஸ் சாலை, டி.என்.பி.எஸ்.சி சாலை எனப் பெயர்கள் உள்ளன. இது தமிழ் ஆட்சிமொழி சட்டத்துக்கு எதிரானது. எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பது வெற்றுக் கோஷமாகவே இருக்கிறது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டப்படி வழக்குத் தொடருவது குறித்து ஆலோசித்து வருகிறோம். அதனால், உடனடியாக ஆங்கிலப் பெயர்களில் இருக்கும் சாலைகளைத் தமிழில் மாற்ற வேண்டும்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் கையெழுத்தையும் தலைப்பு எழுத்தையும் தமிழில்தான் எழுத வேண்டும் என்று அரசு ஆணை இருக்கிறது. ஆனால், இந்த ஆணையைப் பெரும்பாலான அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் மீறுகிறார்கள். தமிழக முதல்வரே இந்த ஆணையைப் பின்பற்றுவது இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அவர் தனது பெயரில் எடப்பாடி கே. பழனிசாமி என்று ஆங்கிலத்தில் தலைப்பு எழுத்தை எழுதுகிறார். இதை அவர் திருத்திக் கொள்ள வேண்டும்’’ என்று பேசினார். இது தொடர்பாக முதல்வருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக கடிதமும் எழுதப்பட்டுள்ளது.