வெளியிடப்பட்ட நேரம்: 14:26 (19/08/2017)

கடைசி தொடர்பு:14:26 (19/08/2017)

நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு! - ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 2-ம் தேதி வரையிலும் இந்தத் தடை அமலில் இருக்கும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

ஒண்டிவீரன்

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பச்சேரி கிராமத்தில், சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரன் நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு சமூக நல அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் பச்சேரி கிராமத்துக்குச் சென்று ஒண்டிவீரன் பிறந்த இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவார்கள். அத்துடன், நெல்லையில் உள்ள ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் நடப்பது வழக்கம். 

பூலித்தேவன்அதைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி, நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான மன்னர் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதற்காகவும் பல்வேறு அமைப்பினரும் அரசியல் கட்சியினரும் அவரது நினைவு மண்டபம் அமைந்துள்ள நெல்கட்டும்செவல் கிராமத்துக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் பல்வேறு வெளியிடங்களிலும் இருந்து மக்கள் கூடுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக ஏற்கெனவே ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. 

இந்த நிலையில் இன்று (19-ம் தேதி) காலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ம் தேதி காலை 6 மணி வரையிலும் 15 நாள்களுக்கு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரான சந்தீப் நந்தூரி தெரிவிக்கையில், ’’இன்று முதல் செப்டம்பர் 2-ம் தேதி வரையிலும் தடை உத்தரவு அமலில் இருப்பதால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆயுதங்கள் எடுத்துச் செல்வதற்கும் ஊர்வலமாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது. 

அத்துடன், மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி இல்லாமல் அன்னதானம் நடத்தக் கூடாது. பால்குடம், முளைப்பாரி போன்ற ஊர்வலத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாகச் செல்லக்கூடிய வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள், பள்ளி கல்லூரி வாகனங்கள், அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் செல்வதற்குத் தடை இல்லை. 

வழக்கமான வாகனங்களைத் தவிர்த்து ஒண்டிவீரன், பூலித்தேவன் நிகழ்ச்சிகளுக்காக வெளியிடங்களில் இருந்து வரக்கூடிய தொண்டர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நெல்லை மாவட்ட எல்லைக்குள் நுழையத் தடை விதிக்கப்படுகிறது, குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144 (1) (2)-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.