வெளியிடப்பட்ட நேரம்: 13:49 (19/08/2017)

கடைசி தொடர்பு:14:16 (19/08/2017)

தர்மயுத்தமா... பதவியுத்தமா? கணக்குபோடும் தினகரன் ஆதரவாளர்கள்! #VikatanExclusive

முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க.வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையாததால் தொண்டர்கள் பல்வேறு விமர்சனங்களைச் செய்துவருகின்றனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றிணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான சூழ்நிலை நேற்றிரவு இருந்தபோதிலும் சில காரணங்களுக்காக அணிகள் இணைப்பு தள்ளிப்போனது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலிருந்து கிரீன் சிக்னல் கொடுத்தாலும் அதை ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் போட்ட முட்டுக்கட்டையால் அணிகள் இணைப்பு தள்ளிபோய் உள்ளதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் மணிக்கணக்கில் நேற்று இரவு ஆலோசனை நடத்தினர். அதில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கேட்ட துணை முதல்வர் பதவி, அமைச்சர் பதவி, கட்சிப் பதவி ஆகியவை குறித்து நீண்ட நேரம் விவாதித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதுபோல, ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தங்களின் தர்மயுத்தம் கோரிக்கைகள், இணைப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வந்த உறுதிமொழிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம், அணியில் உள்ளவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, மூன்று மூத்த நிர்வாகிகள், கட்சியில் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். அதோடு மாநிலங்களவை எம்.பி. பதவி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினருக்குத் தெரிவிக்கப்பட்டதும் 'யோசித்து முடிவெடுக்கிறோம்' என்று ஓ.பன்னீர்செல்வத்துக்குப் பதில் சொல்லியுள்ளனர். இதனால்தான் அணிகள் இணைப்பு தாமதமாகியுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓகே என்று சொல்லியிருந்தால் திட்டமிட்டப்படி ஜெயலலிதா சமாதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் அஞ்சலி செலுத்தி கை குலுக்கியிருப்பார்கள். ஆனால், டீல் ஓகே ஆகாததால் அணிகள் இணைப்பில் மீண்டும் இழுபறி ஏற்பட்டுள்ளமதாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் சொல்கின்றனர். இரண்டு அணிகளில் நடந்த விவாதங்களை உன்னிப்பாக கவனித்த தினகரன் அணியினர், இப்போதைக்கு இருவரும் இணைய வாய்ப்பில்லை என்று ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்துள்ளனர்.

தொண்டர்களின் விமர்சனங்கள்

அணிகள் இணைக்கப்படாததால் அ.தி.மு.க. தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். இதில் உணர்ச்சிவசப்பட்ட தொண்டர்கள், இரண்டு அணிகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினரைப் பார்த்து 'இது தர்மயுத்தமா அல்லது பதவி யுத்தமா' என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதுபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு எதிராக ஆட்சி, பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அணிகள் இணைப்பு என நாடகமாடுவதாக விமர்சித்துள்ளனர். பா.ஜ.க.வையும் விட்டுவைக்கவில்லை. அண்ணா திராவிடக் கழகத்தை அமித்ஷா திராவிடக் கழகம் என்று விமர்சித்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியை  ஒப்பிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் கலாய்த்துள்ளனர். அ.தி.மு.க.வினர் சமூகவலைத்தளங்களில் பதிவு செய்த ஸ்டேட்ஸ்களுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்தவண்ணம் உள்ளன. மக்கள் பணிகளில் அக்கறை செலுத்தாமல் அணிகள் இணைப்பில் கவனம் செலுத்துவதால் அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. அடிப்படை தேவைகளுக்குகூட மக்கள் அல்லல்படும் நிலை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. நிர்வாகிகள். "ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு நாள்தோறும் குழப்பங்களால் தொண்டர்கள் மதில் மேல் பூனையாக உள்ளனர். ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற பதவியில் உள்ளவர்கள் நாடகமாடிவருகின்றனர். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.க.வுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். அ.தி.மு.க உள்கட்சி விவகாரத்தை டெல்லியில் பேச வேண்டிய அவசியமில்லை. சசிகலாவை, பொதுச் செயலாளராக தேர்வு செய்துவிட்டு அவருக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்பு யோசிக்க வேண்டும். சசிகலா குடும்பத்தை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு எதற்காக அந்த குடும்பத்தினரை கட்சிப்பதவியில் அமர்த்தினீர்கள் என்ற கேள்வி ஒவ்வொரு தொண்டனிடமும் உள்ளது. அணிகளால் அ.தி.மு.கவுக்கு ஆபத்து என்பதை உணர வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக அ.தி.மு.க.வை வழிநடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

தினகரனின் கூட்டல் கழித்தல் கணக்கு

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் அடையாறில் இன்று நடந்தது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைந்தால் நிச்சயம் சர்ச்சை ஏற்படும். ஏனெனில் ஆட்சி, கட்சி பதவிகளை பங்கீட்டுக் கொள்வதில் இரண்டு அணிகளில் உள்ளவர்களிடையே கருத்துவேறுபாடு இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பை தி.மு.க. கொண்டு வந்தால் கடந்த முறைபோல இந்தமுறை ஆட்சி தப்பவாய்ப்பில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள 11 எம்.எல்.ஏ.க்களால் ஆட்சியை காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகம்தான்.

அப்படியொரு சந்தர்ப்பம் வந்தால் நம்முடைய ஆதரவு நிச்சயம் இந்த ஆட்சிக்கு தேவை. அப்போது நாம் யாரென்று காண்பிப்போம் என்று உற்சாகசமாக தினகரன் பேசியுள்ளார். இது, அவரது ஆதரவாளர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. தினகரனின் கூட்டல், கழித்தல் கணக்கு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் மீண்டும் குதிரை பேரம் நடப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்தத் தகவல் உறுதிபடுத்தப்படவில்லை.

அணிகள் இணைப்பு உறுதி 

அணிகள் இணைப்பு குறித்து ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், "இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்துவருகிறது. இணைப்பு குறித்து ஒரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும்" என்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பேசியவர்கள், "அணிகளை இணைப்பது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைவது உறுதி. ஒரணியிலிருந்து ஆட்சியையும் கட்சியையும் வழிநடத்த ஓட்டுமொத்த கட்சியினரும் சம்மதித்துவிட்டனர். ஆட்சி, கட்சி பதவிகள் குறித்து பிறகு முடிவு செய்யப்படும். முதலில் கட்சியை வழிநடத்த வழிகாட்டும் குழு அமைக்கப்படும். அந்தக்குழுவிடம் ஓட்டுமொத்த அதிகாரம் ஒப்படைக்கப்படும்" என்றனர். 


டிரெண்டிங் @ விகடன்