வெளியிடப்பட்ட நேரம்: 13:53 (19/08/2017)

கடைசி தொடர்பு:13:53 (19/08/2017)

''ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நடுத்தெருவில் நிற்கப்போகிறார்கள்!" - வெற்றிவேல் எம்.எல்.ஏ

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆவாரா? அல்லது அ.தி.மு.க பொதுச்செயலாளராக கட்சிப் பொறுப்பேற்பாரா? யார் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்? மத்திய பி.ஜே.பி அரசுக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுக்குமா? - அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையை அடுத்து அடுக்கடுக்கான கேள்விகள் அரசியல் அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல் எம்.எல்.ஏ-விடம் பேசினோம்...

வெற்றிவேல் எம்.எல்.ஏ அ.தி.மு.க

''அ.தி.மு.க அணிகள் இணைப்பில் மீண்டும் இழுபறி நிலை தொடர்கிறதே... என்ன காரணம்?''

''ஒன்று சேரப்போகிறோம் என்று  சொல்லிக்கொண்டிருப்பார்களே தவிர.... வேறு ஒன்றும் நடக்காது. இரண்டு அணிகளும் ஒன்றுசேர்ந்தால், வாழ்த்துக்கள்!''

''பதவிகளை பங்கு பிரிப்பதில் உள்ள இழுபறியால்தான் இணைப்பு தாமதமாகிவருகிறது எனப் பேசப்படுகிறதே...?''

''அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றியது ஒரு கும்பல். அந்தக் கும்பலில் உள்ளவர்கள் யாருக்கும் மந்திரிசபையில் இடம் கொடுக்காமல், புதிதாக வருபவர்களுக்கு மந்திரிசபையில் இடம் கொடுத்தால், மறுபடியும் ஆட்சிக்கு சிக்கல்தான் உருவாகும். ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் பதவியை வகித்துவருபவர்களிடமிருந்து ஒன்றைப் பிரித்துக் கொடுப்பதற்குக்கூட அவர்கள் சம்மதிக்கமாட்டார்கள். இதுதான் இன்றைய நிலைமை. 

முதல்வரிடமே பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் உள்துறை பொறுப்புகள் உள்ளன. இதில், உள்துறையை எந்த முதல்வரும் வேறொருவருக்கு கொடுக்கமாட்டார். மீதம் உள்ள இரண்டு துறைகளையும்கூட கொடுப்பாரா என்று தெரியவில்லை. 
ஜெயக்குமாரிடம் நிதித்துறையும் மீனவத் துறையும் இருக்கிறது. அவர் மீனவர் என்பதால், நிதியை விட்டுக்கொடுக்கவேண்டும். இதேபோல், வேலுமணி, தங்கமணி என்று இரண்டு துறைகளை வகித்துவருபவர்கள் அனைவரும் ஒரு பதவியை விட்டுக்கொடுத்தாக வேண்டும். தன்னிடம் இருக்கும் பதவியை விட்டுக்கொடுக்க யாருமே தயாராக இருக்கமாட்டார்கள். எனவே, பிரச்னைகள்தான் வரும்.''

''அணிகள் இணைந்தால், இழந்த அங்கீகாரத்தை கட்சி மீண்டும் பெறும், முடங்கிப்போன சின்னமும் கட்சிக்கு கிடைக்கும்தானே... ஆனால், அணிகள் இணைப்புக்கு எதிராக நீங்கள் குரல் கொடுப்பது ஏன்?''

''ஓ.பன்னீர்செல்வம் துரோகத்தையடுத்து இந்த ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் எந்தளவு போராடினோம் என்பதெல்லாம் உங்களுக்கேத் தெரியும். அப்படிப்பட்டவர்களுக்கு எந்தப் பொறுப்பும் கொடுக்காமல், நடு ரோட்டில் விட்டுவிட்டாலும் ஆட்சிக்கு பிரச்னை ஏற்படும். 

உதாரணத்துக்கு, நீங்கள் எழுதுகிற ஒரு செய்தியை, வேறொருவர் திருட்டுத்தனமாக வெளியிட்டுவிட்டார் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனது எவ்வளவு கஷ்டப்படும்? கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றப் பாடுபட்டவர்களும் இன்று அந்த மனநிலையில்தான் இருக்கிறார்கள்.''

''டி.டி.வி தினகரன் அணியைச் சார்ந்தவர்களுக்கும் பதவிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிறீர்களா?''

''நாங்கள் யாரிடமும் போய் மந்திரி பதவி கொடுங்கள் எனக் கேட்கவில்லையே... எங்களுக்கு கட்சிப் பொறுப்புகளே போதும். ஆனால், சசிகலாவை நீக்கவேண்டும் என்று யாராவது சொன்னால், நிச்சயம் நாங்கள் அதனை எதிர்ப்போம்.''

ஜெயலலிதா சசிகலா

''ஜெ. மரணம் குறித்த நீதிவிசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுவிட்டார். இணைப்புக்கான பேச்சுவார்த்தையும் முழுவீச்சில் நடந்துவருகிறது. எந்த ஆதாரத்தில், இணைப்பு கைகூடாது என்கிறீர்கள்?''

''ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று சொல்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவர்களில் ஆரம்பித்து எல்லோருமே வந்து பார்த்தார்கள்தானே... அடுத்ததாக சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்கிறார்கள். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நீதிவிசாரணைக்கு முதல்வர் உத்தரவிடுகிறார். ஆனால், இப்போது சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்கிறார்கள் ஓ.பி.எஸ் ஆட்கள்.''

''ஜெ. மரணம் குறித்த நீதிவிசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?''

''உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார் ஜெயலலிதா. அதன்பிறகு சிகிச்சையின்போதும் அவர் இயல்பாக உட்கார்ந்திருப்பது போன்றோ அல்லது சாப்பிடுவது போன்றோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஜெயலலிதாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் அப்போலோவிலும்கூட இருக்கின்றன. எனவே, ஜெயலலிதா இறந்தபிறகுதான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு இதில் அடிபட்டுப்போய்விடும். 

அடுத்ததாக, போயஸ்கார்டனிலேயே ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால்கூட நீங்கள் கேள்வி எழுப்புவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், அப்போலோ மருத்துவமனை வெளியே உள்ள பொதுவான மருத்துவமனை. அங்கே மருத்துவக் குழு மற்றும் நிர்வாகம்தான் சிகிச்சை குறித்து முடிவுகளை எடுக்கிறார்கள்; வெளிநாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இவையெல்லாவற்றையும் தாண்டி, ஜெயலலிதாவோடு நட்பு பாராட்டிய பிரதமர் மோடியும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை அனுப்பிவைக்க... அவர்களும் மாதக்கணக்கில் தங்கியிருந்து நல்லமுறையில் சிகிச்சை அளித்தார்கள். 

மருத்துவமனை நிர்வாகமும்கூட நீதிவிசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார் என்று சொல்லிவிட்டார்கள். ஆக இதுதான் இன்றைய உண்மை நிலை. ஆனால், கட்சியால் பலடைந்த சிலபேர் இவற்றையெல்லாம் அரசியலாக்கி, ஆதாயம் தேட முயல்கிறார்கள். அது முன்னாள் முதல்வரோ அல்லது இந்நாள் முதல்வரோ யாராயிருந்தாலும் சரி.

சசிகலா மீது முன்னாள் முதல்வர் அநியாயமாக பழி சுமத்தினார். ஆனால், மக்கள் இதனையெல்லாம் நம்பவில்லை என்பதற்கான ஆதாரம்தான் மேலூர் கூட்டத்தில் திரண்டுவந்த மக்கள் எழுச்சி. வீணாக எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது பழி சுமத்தவேண்டாம் என்றுதான் டி.டி.வி தினகரனேகூட, 'நீதி விசாரணை அமையுங்கள்' என்று கூறிவிட்டார்.''

ஓ.பி.எஸ். எடப்பாடி டி.டி.வி

''ஜெ. மரணத்தில் மக்களுக்குத்தான் சந்தேகமே தவிர, எங்களுக்கு இல்லை - என்று ஓ.பன்னீர்செல்வமே கூறியிருக்கிறாரே?'' 

''ஓ.பி.எஸ்-தானே அப்போது முதல்வராக இருந்தார். ஏன் அப்போதே விசாரித்திருக்க வேண்டியதானே... ஏன் துணிச்சல் வரவில்லை? பதவியைப் பறித்தபிறகு இப்படியெல்லாம் சொல்வது என்ன அர்த்தம்? இது எல்லாமே அரசியல். 

இப்போது நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கும் இதே முதல்வர்தான் கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், 'நீதி விசாரணை எல்லாம் கொடுக்கமுடியாது' என்று பேசினார். விசாரணை முடியட்டும், எங்கள் தரப்பு நியாயம் எல்லோருக்கும் தெரியவரும். அப்போது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் நடுத்தெருவில்தான் நிற்கப்போகிறார்கள்.''

''இணைப்பு பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற்று ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்துவிட்டால் அதனை வரவேற்பீர்களா?''

''கட்சி ரீதியிலான முடிவுகளை சசிகலாவைத்தவிர வேறு யாராலும் முடிவெடுக்கமுடியாது. ஆட்சிப் பொறுப்பில் வேண்டுமானால் இவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுத்துக்கொள்ளலாம். அந்த முடிவுகளும் எப்படியிருக்கின்றன என்பதைப் பொறுத்தே எங்களது வரவேற்பு இருக்கும்.''

''அ.தி.மு.க-வில் தற்போது நடைபெற்று வரும் முட்டல் மோதல்கள் எல்லாமே நாடகங்கள்தான் என்ற குற்றச்சாட்டுக்கு வலுசேர்ப்பதுபோல், நீங்களும், அமைச்சர் ஜெயக்குமாரும் ஒரே விழாவில் கலந்துகொள்கிறீர்களே...?''

''தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டோம். அந்த நிகழ்விலும்கூட அமைச்சர் வருகைக்காக 2 மணி நேரம் மக்களைக் காத்திருக்க வைத்துவிட்டனர். 'ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களை, இப்படி அமைச்சர் வருகைக்காக காத்திருக்க வைத்து சிரமப்படுத்துவது நியாயமா?' என அப்போதே நான் சத்தம்போட்டேன்.''


டிரெண்டிங் @ விகடன்