வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (19/08/2017)

கடைசி தொடர்பு:18:57 (19/08/2017)

90 ஆண்டுகளில் 8.5 சதவிகிதமே ரிட்டன்..! தங்கத்தில் முதலீடு செய்யலாமா... கூடாதா?!

`முதலீடு' எனச் சொன்னாலே, பலருக்கும் நினைவுவருவது தங்கம்தான். அதன் விலை ஏறிக்கொண்டேயிருந்தாலும், அதன் மீது நாம்கொண்டிருக்கும் மோகம் மட்டும் என்றுமே குறைந்ததில்லை. காரணம், `தேவை என வரும்போது, தங்கம் உதவுவதுபோல் வேறு எந்த முதலீடும் உதவுவதில்லை' என்ற அசைக்க முடியாத நம்பிக்கை!

தங்கம்,

தற்போது நிலவிவரும் கொலை, கொள்ளை சம்பவங்களைப் பார்க்கும்போது, தங்கத்தை வீட்டில் பாதுகாப்பாக வைப்பது சிரமமான செயல். `தங்கத்தை வீட்டில் வைக்க வேண்டாம்' என, காவல் துறையே எச்சரிக்கிறது. ரிசர்வ் வங்கியும், `தங்கத்தில் முதலீடு செய்வது, எந்தவிதத்திலும் சேமிப்பாகாது. எனவே, தங்கத்தை முதலீடாகப் பார்க்க வேண்டாம்' என்கிறது. ஆனால், பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகவும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது உதவுவதற்கு, நல்ல நீண்டகால முதலீடாக தங்கத்தை நாம் பார்க்கிறோம்... வாங்குகிறோம். 

தங்கம் கடந்து வந்த பாதை!
(10 கிராம்)

                          ஆண்டு    விலை (ரூபாயில்)

1926        18.43
1927        18.37
1928        18.37
    1929        18.43    
1930        18.05

1931        18.18
1932        23.06
1933        24.05
1934        28.81
1935        30.81
1936        29.81
1937        30.18
1938        29.93
1939        31.74
1940        36.04

1941        37.43
1942        44.05
1943        51.05
1944        52.93
1945        62.00
1946        83.87
1947        88.62
1948        95.87
1949        94.17
1950        99.18

1951        98.05
1952        76.81
1953        73.06
1954        77.75
1955        79.78
1956        90.81
1957        90.62
1958        95.38
 1959        102.56
1960        111.87

1961        119.35
1962        119.75
1963        97.00
1964        63.25
1965        71.75
1966        83.75
 1967        102.50
 1968        162.00
1969       176.00
 1970        184.50

1971        193.00
1972        202.00
1973       278.50
1974        506.00
1975        540.00
1976        432.00
1977        486.00
1978        685.00
1979        937.00
   1980        1,330.00

1981        1,800.00
1982        1,645.00
1983        1,800.00
1984        1,970.00
1985        2,130.00
1986        2,140.00
1987        2,570.00
1988        3,130.00
1989        3,140.00
1990        3,200.00

1991        3,466.00
1992        4,334.00
1993        4,140.00
1994        5,598.00
1995        4,680.00
1996        5,160.00
1997        4,725.00
1998        4.045.00
1999        4,234.00
2000        4,400.00
    
2001        4,300.00
2002        4,990.00
2003       5,600.00
2004        5,850.00
2005       7,000.00
2006        8,400.00
  2007        10,800.00
  2008        12,500.00
  2009        14,500.00
  2010        18,500.00

2011        26,400.00
2012        30,680.00
2013        29,600.00
2014       28,006.50
2015        26,343.50
2016        28,623.50

1926-ம் ஆண்டு 18.43 ரூபாயாக இருந்த 10 கிராம் தங்கம், 90 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 29,350 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது. ஆரம்பகாலத்தில் 18 ரூபாய்க்கு தங்கம் வர்த்தகமானது. அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக உயர்ந்து 2012-ம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவில் 10 கிராம் தங்கத்தின் விலை 30,680 ரூபாயாக அதிகரித்தது. அதன் பிறகு கொஞ்சம் சரிவடைந்து, இப்போது மீண்டும் 29,000 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகிறது. 1926-ம் ஆண்டில் தங்கத்தில் 18 ரூபாய்க்கு முதலீடு செய்திருந்தால், இன்றைய மதிப்பில் 29,000 ரூபாய் வருமானம் கிடைத்திருக்கும். இந்த முதலீட்டின் மீதான வருமானம் 8.50 சதவிகிதம் மட்டுமே.

இன்றைய சூழ்நிலையில் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளலாமா, நல்ல வருமானம் கிடைக்குமா என்பது கேள்விகளாக உள்ளன. இதுகுறித்து முதலீட்டு ஆலோசகர் ரெஜி தாமஸிடம் பேசினோம்... 

``இன்று மட்டுமல்ல, பல நாள்களாக / பல ஆண்டுகளாக தங்கத்தில் முதலீடு செய்வது நல்லதா, கெட்டதா என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. ஆனால், யாருமே இதை ஒரு முதலீடாகப் பார்த்து லாபமடைவதில்லை. வெறும் ஒப்பீட்டுக்காக மட்டுமே பார்க்கின்றனர். தங்கத்தின் தேவை முன்பேவிட தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. இதை ஒரு முதலீடாகவே பார்க்கிறார்களா அல்லது தங்கத்தை மேலும் மேலும் வாங்க வேண்டும் என நினைக்கிறார்களா என்பது தெரியவில்லை. 
 

படத்தை பெரிதுப்படுத்தி பார்க்க க்ளிக் செய்க....

சர்வதேச பொருளாதாரப் பிரச்னைகள் வந்தபோது, பலரும் தங்கத்தை ஒரு மாற்று முதலீடாகவே பார்த்தனர். அதனால், 2004 மற்றும் 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இதன் விலை மளமளவென அதிகரித்தது. தங்கத்தின் விலை அதிகரித்த அளவில் இதன் விலை இறங்கவில்லை. பொதுவாக ஏற்ற-இறக்கம் என்பது, தங்கத்தில் பெரிதாக இருக்காது. ஏனெனில், தங்கத்தை வாங்கும் பலரும் இதை விற்பது கிடையாது. இதை ஒரு முதலீடாக நினைத்து லாபம் பார்ப்பவர்கள் எனப் பார்த்தால், குறைந்தது இரண்டு சதவிகிதத்தினர் மட்டுமே இருப்பார்கள். தங்கத்தை விற்பவர்கள்கூட ஏதோ ஓர் அவசரத் தேவைக்காக விற்பார்களே தவிர, லாபத்துக்காக யாரும் விற்பதில்லை. 

தங்கத்தை இறக்குமதி செய்வது, அதை நகையாக மாற்றி விற்பது என, தங்க நகை வியாபாரிகளைத் தவிர வேறு யாரும் அதிக அளவில் தங்கம், ரெஜி தாமஸ்லாபமடைந்திருக்க மாட்டார்கள். இவர்களைத் தவிர வேறு  எவருமே தங்கத்தில் முதலீடு மேற்கொண்டு லாபமடைந்தார்கள் எனச் சொல்வதற்கில்லை. சில முதலீட்டாளர்கள் மட்டும் தங்கத்தை நகையாக, கட்டியாக வாங்காமல் கோல்ட் ஈ.டி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்து லாபமடைந்திருப்பார்கள். 

குறிப்பிட்ட ஒரு காலத்தில் தங்கம், ரியல் எஸ்டேட், ஃபிக்ஸட் டெபாசிட், கடன் பத்திரங்கள் என ஒவ்வொரு முதலீட்டின் மூலம் அதிக அளவிலான வருமானம் கிடைத்திருக்கும். இவை அனைத்துமே குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் அதிக அளவிலான வருமானம் வழங்கியுள்ளது. பங்குச்சந்தையில் மட்டும்தான் தொடர்ச்சியான நல்ல வருமானம் கிடைத்திருக்கிறது. முதலீட்டைப் பொறுத்தவரை, அதிக வருமானம் தரக்கூடியதாக இன்றும் பங்குச்சந்தைதான் இருக்கிறது. அதற்கடுத்து மியூச்சுவல் ஃபண்ட். 

நம் நாட்டைப் பொறுத்தவரை, தங்கத்துக்காகத்தான் அதிக கொலை, கொள்ளை நடைபெறுகின்றனவே தவிர, ஈக்விட்டிக்காக எந்த ஒரு கொலையும் நடைபெறுவதில்லை. ஆகையால், தேவைக்கு அதிகமாக தங்கம் வைத்திருப்பதே ரிஸ்க்தான். தங்கத்தைப் பொறுத்தவரை திருமணம், சுபநிகழ்ச்சி என தேவைக்கு ஏற்ப வாங்குவது நல்லது. இல்லையெனில், பழைய தங்கத்தை விற்று, புதிய தங்கத்தை வாங்கலாம்.

உங்களிடம் 10 லட்சம் ரூபாய் இருக்கிறது. அதை முதலீடு செய்ய வேண்டும் என்றால், இதில் அதிகபட்சம் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை தங்கம் வாங்கலாம். கையில் 10 சதவிகிதப் பணத்தை வைத்துக்கொண்டு மீதி ஈக்விட்டி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் போன்ற திட்டங்களில் முதலீடு மேற்கொள்வது நல்லது. ஏனெனில், பணவீக்கம் குறைந்திருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் பொதுவாக தங்கத்தில் முதலீடு செய்யக் கூடாது. காரணம், போதிய வருமானம் வராது.

பணவீக்கமும் தங்கமும் எப்போதுமே எதிர்மறையாகத்தான் இருக்கும். பணவீக்கம் அதிகமாகும்போது, தங்கத்தின் முதலீட்டு மதிப்பும் வருமானமும் அதிகரிக்கும். அதே சமயம், பணவீக்கம் குறைந்திருக்கும் காலத்தில் தங்கத்தில் குறைந்த அளவே வருமானம் கிடைக்கும். இப்போது உலகம் முழுவதும் குறைந்த அளவிலான பணவீக்கமே இருக்கிறது. உலகில் 7, 8 நாடுகளுக்கும்மேல் வங்கி வட்டிவிகிதம் மைனஸிலேயே உள்ளது. ஆகையால், உலக அளவிலேயே குறைந்த அளவிலான பணவீக்கம் இருக்கிறது. இந்தச் சமயத்தில் தங்கம் வாங்கி வைப்பது அர்த்தமற்றது. தங்கத்தில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மாறாக, பணவீக்கம் ஏறும்போது  தங்கம் வாங்கலாம், முதலீடு மேற்கொள்ளலாம்" என்றார் ரெஜி தாமஸ்.


டிரெண்டிங் @ விகடன்