Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஞ்சலி செலுத்தகூட இதயம் இல்லையா? எடப்பாடி பழனிசாமியைத் துரத்தும் கேள்விகள்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கான்வாய் பணிக்காகச் சென்றுகொண்டிருந்தபோது, சாலை விபத்தில் உயிரிழந்த இருதயப் பிரிவு சிறப்பு மருத்துவர் அருட்செல்வன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவது உள்பட எந்தவொரு அறிவிப்பும் முதல்வரிடமிருந்து இதுவரை வெளியாகவில்லை.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருதயப் பிரிவில் துணைப் பேராசிரியராக இருந்தவர் அருட்செல்வன். இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவரான இவர், ஆகஸ்ட் 16-ம் தேதி முதல்வரின் கான்வாய் பணியில் இடம்பெறும் மருத்துவக்குழுவில் பணிக்காக அனுப்பப்பட்டார். கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில், வந்தபோது சாலைவிபத்தில் அவர் உயிரிழந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி

கடந்த 16-ம் தேதி முதல்வரின் கான்வாய் பணிக்குச் செல்லவேண்டும் என்று அருட்செல்வனுக்கு உத்தரவு அனுப்பப்பட்டிருந்தது. இதனால் விழுப்புரத்தில் இருந்து இன்னொரு மருத்துவரையும் அழைத்துக் கொண்டு காரிலேயே கிழக்கு கடற்கரை சாலையில் சென்னை வந்து கொண்டிருந்தார். காரில் டிரைவர் பக்கத்தில் முன் இருக்கையில் அவர் அமர்ந்திருந்தார். திருவிடந்தை பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது, பக்கத்தில் சென்ற வாகனம் ஒன்று அந்தக்காருடன் உரசியது. இதனால் நிலை தடுமாறிய டாக்டரின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தலையில் அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே அருட்செல்வன் உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் மூலம் அவரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சென்னை எம்.எம்.சி. மருத்துவமனையில் டாக்டர் பட்டம் பெற்றவர். இவர் இருதய டாக்டராக உருவாக 15 வருடங்கள் ஆனது. முப்பத்தைந்தாவது வயதில் இருதய மருத்துவ நிபுணராக முதுநிலைப் பட்டம் பெற்றார். 20 வருடம் அரசு மருத்துவராக சேவையாற்றியுள்ள அருட்செல்வன், விழுப்புரத்தில் இருந்து தினமும் ரயில் மூலம் செங்கல்பட்டிற்கு சென்று வந்தார். அவர் மனைவி கீர்த்தனாவும் மருத்துவர். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 

அருட்செல்வன்செங்கல்பட்டு மருத்துவமனையில் இருதயநோய் சிகிச்சைக்கென தனிப்பிரிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், மருத்துவர் அருட்செல்வனின் மறைவு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள். 

“முதல்வரின் கான்வாய் பணிக்காக சிறப்பு மருத்துவர்களை பணிக்கு அமர்த்துவார்கள். அதில் இருதய மருத்துவர், நரம்பியல் மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், எலும்பு மருத்துவர் மற்றும் பொதுமருத்துவர் என ஐந்து சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். இவர்கள் தவிர, இரண்டு செவிலியர்கள், உதவியளர்கள் என பத்து பேர் கான்வாய் பணியில் அமர்த்தப்படுவது வழக்கம். இவர்கள் பத்து பேரும் ஒரு ஆம்புலன்சில் செல்லும் நிலைதான் தற்போது இருக்கிறது. 'மெடிக்கல் டீம்' என்று அறிவிப்புடன் கூடிய கார் இந்தக் குழுவிற்கு கொடுக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அப்படிப்பட்ட நிலை இல்லை.

மருத்துவர்கள் போராட்டம்

முதல்வரின் கான்வாய் வாகனங்கள் பொதுவாக 130 கி.மீ. வேகத்தில் செல்லும். அந்த வேகத்திற்கு ஈடுகொடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செல்ல முடியாது. பத்துபேரை ஏற்றிச்செல்வதால், அனைவரும் உட்காரக்கூட இடம் கிடைப்பதில்லை. மருத்துவக் குழுவுக்கென்று தனியாக இன்னோவா போன்ற ஒரு கார் கொடுக்க வேண்டும் என்று ஏற்கெனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. 

முதல்வரின் கான்வாய்க்கு ஒருநாள் முன்பாகவே மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதுவும் மாவட்ட காவல் சூப்பிரண்டுதான் அந்த ஆணையை வழங்குவார். டி.எம்.எஸ்ஸில் இருந்துதான் எங்களுக்கு ஆர்டர் வரவேண்டும். ஆனால், அப்படி வருவதில்லை. இதுபோன்ற எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தி இருக்கிறோம்" என்கிறார்கள் வேதனையுடன்.

 

மருத்துவர்கள் போராட்டம்

சாலை விபத்தில் மருத்துவர் அருட்செல்வன் இறந்த தகவல் அறிந்த பிறகும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து இரங்கல் அறிக்கையோ, நிதியுதவி தொடர்பான அறிக்கையோ இதுவரை வரவில்லை. தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல் முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு செய்யும் குறைந்தபட்ச நன்றிக்கடனையாவது முதல்வர் செலுத்த வேண்டும் என்பதே அந்த குடும்பத்தினரின் எதிர்பார்ப்பு!

செய்வாரா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement