''அ.தி.மு.க அணிகள் இணைப்பு எப்போது..?'' சந்திப்பு முடங்கியதற்குக் காரணம் இதுதான்!

சசிகலா

அ.தி.மு.க அணிகள் இணைப்புக்கு நேரம் குறித்து...ஜெயலலிதா சமாதிக்கு அழைத்த பின்னரும், இரு அணிகளின் நிர்வாகிகளுக்கிடையே நடக்கும் முட்டல் மோதல்களால், சந்திப்பு முடங்கிக்கிடப்பதாகத் தெரியவந்துள்ளது.

மதுரை மேலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில், டி.டி.வி. தினகரன் தனது பலத்தைக் காட்டிய பிறகுதான், எதிரும் புதிருமாக இருந்த ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றிணைய முன்வந்தனர். 'டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது' என்று தீர்மானம் போட்டதன்மூலம் சசிகலா குடும்பத்துக்கு 'ஷாக்' கொடுத்த எடப்பாடி பழனிசாமி, அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியைத் தன்பக்கம் இழுத்தார். "ஜெயலலிதா மரணம்குறித்து உண்மை அறிய விசாரணை கமிஷன், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம், நினைவிடம் ஆக்கப்படும்" ஆகிய இரு அறிவிப்புகளைத் தொடர்ந்து, அ.தி.மு.க-வின் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ். அணிகள் இணைப்பு உறுதி என்றார்கள். ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் ஆகஸ்ட் 18-ம் தேதி இரவு 7.30 மணியவில் மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதியில் சந்திக்க முடிவு எடுத்திருந்தனர். அதற்கான ஏற்பாடுகளும் தடபுடலாகச் செய்யப்பட்டன. இரு அணிகளின் தலைவர்களையும் வரவேற்க, ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்களும் அங்கு குவிந்தனர்.

ஆனால், இரவு 9.30 மணி வரை எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதா சமாதிக்கு வரவில்லை. "கடைசி நேரத்தில், அணித் தலைவர்களின் சந்திப்பு ரத்துசெய்யப்பட்டது ஏன்?" என்று இரு அணிகள் தரப்பிலும் விசாரித்தோம். 

தினகரன் பன்னீர்செல்வம் பழனிசாமி

இதுபற்றி நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ''பன்னீர்செல்வம் தரப்பைப் பொறுத்தவரை அங்கு இருப்பவர்கள் அனைவரும் சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பத்தினரின் ஆதிக்கத்தை எதிர்த்து வெளியேறியவர்கள். சசிகலாவுக்கு ஆதரவாக இருந்ததால், எடப்பாடியையும் அவர்கள் எதிர்த்தார்கள். இரு அணிகளுமே அப்படி ஒருவரை ஒருவர் எதிர்த்துதான் வேறுவேறு பாதையில் சென்றனர். பல கட்டங்களில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு அணிகளும் இணையும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அணியில் இருப்பவர்களைவிடவும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருப்பவர்கள் இரு அணிகளின் இணைப்புக்கு முன், அதிகாரப்பகிர்வுகுறித்துப் பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் பதவி வேண்டும்; இல்லை என்றால், துணை முதல்வர், வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நிதித்துறை போன்ற முக்கிய இலாகாக்களை ஒதுக்க வேண்டும். செம்மலை, மாஃபா பாண்டியராஜன், எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வேண்டும். கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கோவை கே.சி.பழனிசாமி, நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களுக்கு கட்சியை வழிநடத்தும் வழிகாட்டுக் குழுவில் பதவி வேண்டும். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியில் எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., என எந்தப் பதவியிலும் இல்லாதவர்களுக்கு வாரியத் தலைவர், அரசு ஆணையங்களில் தலைவர் பதவி கொடுக்க வேண்டும். ஏற்கெனவே மாவட்டச் செயலாளர்களாக இருந்தவர்களை மீண்டும் அதே பதவியில் அதிகாரத்துடன் செயல்பட அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் விருப்பத்தின்படி சீட் கொடுக்க, மாவட்ட அமைச்சர்கள் அனுமதிக்க வேண்டும்.  வர இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் பதவி முடிவடையும் எம்.பி-க்களுக்கே மீண்டும் சீட் கொடுக்க வேண்டும். சசிகலாவை கட்சியின் பொதுச்செயலாளராகவும், டி.டி.வி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராகவும் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி தரப்பு ஏற்கெனவே கொடுத்துள்ள பிரமாண உறுதிமொழியை வாபஸ் பெறவேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 

கோரிக்கைகள் ஏராளமாக இருப்பதாலும், அதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாலும் அமைச்சரவை சகாக்களுடன் பேசித் தீர்த்த பிறகே முடிவுக்கு வர முடியும் என்று எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். அதன் காரணமாகவே, நேற்று சந்திப்பு நிகழவில்லை. இன்னும் சில நாள்களில், இரு அணியின் முக்கியத் தலைவர்களும் சந்தித்துப் பேசிய பிறகே, எடப்பாடியும் பன்னீர்செல்வமும் சந்திக்க முடிவெடுத்துள்ளனர்" என்றார்கள்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சசிகலாவைச் சந்தித்துவிட்டு, பெங்களூருவில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பதவி ஆசை மற்றும் சுயநலத்தால், இரு அணிகளும் இணையவதாக அறிவித்துள்ளார்கள். இது, கட்சி நலனுக்கும் தொண்டர்களின் மனநிலைக்கும் விரோதமானது. சுயநலத்துக்காக அவர்கள் இணைவதால், இந்த இணைப்பு நிலைக்காது; நீடிக்காது. நீண்ட காலத்துக்கு அவர்களால் இணைந்திருக்க முடியாது. அவர்கள் எடுத்துள்ள முடிவால், எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை; பின்னடைவும் கிடையாது. கட்சியில் செய்ய இருக்கும் ஆபரேஷன் குறித்து பொதுச்செயலாளர் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தினேன். விரைவில் ஆபரேஷன் இருக்கும்'' என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

இரு அணிகளும் பல தடைகளைத்தாண்டி இணைந்தாலும், டி.டி.வி.தினகரன் ரூபத்தில் எந்நேரமும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆபத்து காத்திருக்கிறது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!